தமிழகத்தில் பல அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் பணிநேரங்களின்போது தேவையில்லாமல் செல்போன் பயன்படுத்துவது, அதனால் வைரலாகும் வீடியோக்கள் என அவ்வப்போது சில சம்பவங்கள் ஆங்காங்கே பரவலாக நடந்தவண்ணம் உள்ளன.
இது போன்ற ஒரு சம்பவத்தால் பல நாள்களுக்கு முன்பு, பணி நேரத்தின்போது உடன் பணிபுரியும் ஊழியரை வீடியோ எடுத்தது தொடர்பாக திருச்சி சுகாதார மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் ராதிகா என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து தன்மீதான பணியிடை நீக்க உத்தரவை நீக்குமாறு நீதிமன்றத்தில் ராதிகா மனு அளித்திருந்தார். இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ராதிகாவின் மனு விசாரணைக்கு வந்தது.
அரசு ஊழியர்கள் செல்போன் பயன்பாட்டுக்குப் புதிய கட்டுப்பாடு
அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், "அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதும், வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல. அரசு ஊழியர்களின் இது போன்ற செயல்பாடுகளை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. ஒருவேளை ஏதேனும் அவசரமெனில் முறையான அனுமதி பெற்று செல்போனைப் பயன்படுத்த வேண்டும்" எனக் கருத்து தெரிவித்து தமிழக அரசுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
அதாவது, "அரசு ஊழியர்கள்பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது, அலுவலக நேரத்தில் எடுக்கப்படும் வீடியோவால் வன்முறைகள் ஏற்படும் பட்சத்தில் அது தொடர்பாக அரசு ஊழியர் விதிப்படி நடவடிக்கை எடுக்கும்விதமாக தமிழக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தமிழக சுகாதாரத்துறைச் செயலர் இந்த உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற நான்கு வாரங்களுக்குள்ளாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும்" என நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment