Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 30, 2024

வேறு மாவட்டங்களுக்கும் உபரி ஆசிரியர்கள் பணி நிரவல்: தமிழக அரசு முக்கிய உத்தரவு

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பணி இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி முதல் தொடங்குகிறது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை மாவட்டத்துக்கு வெளியேயும் அல்லது வேறு மாவட்டங்களுக்கும் பணிநிரவல் செய்யலாம் என்று தமிழக அரசு முக்கிய உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 'தமிழகத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உபரி ஆசிரியர்கள் மாவட்டத்துக்குள் கூடுதல் தேவையுள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்யப்பட்டனர். தொடர்ந்து எஞ்சியுள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி பணிமூப்பு முன்னுரிமைப் பட்டியலின்படி உபரி ஆசிரியர்களை கலந்தாய்வு மூலம் மாவட்டத்துக்குள் பிற அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் காலிப் பணியிடங்களுக்கு பணிநிரவல் செய்ய வேண்டும். தொடர்ந்து எஞ்சியுள்ள உபரி ஆசிரியர்களை மாவட்டத்துக்குள் பிற அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மாற்றுப் பணியில் நியமிக்க வேண்டும்.

அதன்பின்னும் உபரி ஆசிரியர்கள் இருப்பின், அவர்களை அருகில் உள்ள மாவட்டங்களில் பிற அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதலில் மாற்றுப் பணியில் பணியமர்த்த வேண்டும். பின்பு மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுப் பணியில் அனுப்பலாம். இந்த பணிநிரவல் நடவடிக்கைக்கு பள்ளி நிர்வாகங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்

No comments:

Post a Comment