Thursday, February 27, 2014

மரணத்தைத் துணைகொண்டு

மரணத்தைத் துணைகொண்டு

சாலையோரம் நின்றிருந்தாய் பூங்கொத்து போலஉன்னை
பாலுண்ணும் பறவைபோல பருகிஉண்டேன் நலம்முழுதும்
உன்கோலம் கண்டதனால் வேறுகாட்சி காணவில்லை
உன்னைமட்டும் எண்ணுதடி அலைபாயும் என்மனது
சிந்தையிலே வந்தவளே பித்துகொள்ள வைத்தவளே
இந்திரனின் தேவதையே தோள்சேர வருவாயோ?

என்னைநீ பார்த்தாலும் பார்க்காமல் போனாலும்
என்பார்வை எப்போதும் உன்மீது வீசுமடி.

என்னிடம்நீ பேசினாலும் பேசாமல் போனாலும்
என்பேச்சு எப்போதும் உனைப்பற்றி தானிருக்கும்.

என்னைநீ நினைத்தாலும் நினையாமல் போனாலும்
என்நினைவு எப்போதும் உன்னையே சூழ்ந்திருக்கும்.

கண்வாசல் உள்நுழைந்து இதயத்துள் குடிபுகுந்து
என்குருதி போலநீயும் உடல்முழுதும் பரவிவிட்டாய்
என்மூச்சுக் காற்றினிலே உன்வாசம் வீசுதடி
உன்மூச்சுக் காற்றினிலே என்சீவன் வாழுமடி

நீவரும் பாதையிலே என்விழிகள் காத்திருக்கும்
நீவுலவும் தடமெல்லாம் என்கால்கள் பின்தொடரும்
நீபேசும் குரல்மட்டும் என்காது விரும்பிகேட்கும்
நீபேசும் வார்த்தைகளை என்மனசு முனுமுனுக்கும்

கள்ளிருக்கும் பூம லர்நீ
கள்ளமின்றி சிரிப்ப வள்நீ
கொள்ளைகொண்டு போன வள்நீ
கொளுபொம்மை ஆன வள்நீ

உன்கண்ணைத் தினம்பார்க்க
உன்பேச்சைத் தினம்கேட்க
உன்னோடு உறவாட
உன்பின்னே வருகின்றேன்.

உன்னோடு வாழ்ந்திடவே
எந்நாளும் ஏங்குகின்றேன்
உன்அன்பை தினம்எண்ணி
மண்ணோடு வாழுகிறேன்

கிருத்திகையே

இரவுக்குள் கூடுகட்டி கனவுக்குள் வாழுகிறேன்
உறவாக நீவந்தால் உன்னோடு வாழ்ந்திடுவேன்
உறவில்லை எனச்சொன்னால் என்னன்பே
மரணத்தைத் துணைகொண்டுன் நினைவோடு மாய்ந்திடுவேன்.


Popular Feed

Recent Story

Featured News