Thursday, February 27, 2014

வான் மழை

வான் மழை

உலகேத்தும் உயர்புலவர் வள்ளுவனார் என்தன்
      உயர்வையெல்லாம் கூறுவதைக் கேட்டிருந்தால் உங்கள்
வளமான வாழ்வமைய ஏதுவான என்னை
      வாயாற வாழ்த்திடுவீர் எல்லோரும் சேர்ந்து
பலகாலும் செய்துவரும் சுழற்சிமுறை இதுவே
      பகலவனின் ஒளிக்கதிரால் உருக்குளைந்த கடல்நீர்
மேல்நோக்கிச் சென்றடைந்து மேகமாக மாறி
      மெதுவான குளிர்க்காற்றால் மழையாகப் பெய்து

நாட்டிலுள்ள ஏரிகுள ஆறுகளை நிரப்பி
      நாட்டைஎழில் செய்வதுடன் உலகுயிர்கள் எல்லாம்
பட்டினியால் சாகாமல் உயிர்காக்கும் மருந்தாய்
      பாமரரும் பயன்படுத்தும் எளிமையான பொருளாய்
காட்டினிலே வாழ்கின்ற உயிர்களுக்கும் நல்ல
      கனிவான உணவாக்கி உணவாக ஆனேன்
நாட்டினிலே மக்களோடு தொழிற்சாலை பெருக
      நாட்டிலுள்ள இயற்கையெல்லாம் சீர்குளைய லாச்சி.

மக்கட்தொகை பெருக்கத்தால் இடமில்லா போது
      மரங்களெல்லாம் வெட்டிவிட்ட காரணத்தால் நாட்டில்
தக்கதொரு காலத்தில் பொழிவதையே விட்டு
      தயக்கத்துடன் பொழிகின்றேன் மானிடரை வெறுத்து
எக்காலும் நான்பெய்ய மறுத்துவிட்டால் இங்கு
      எந்தவித உயிருமிந்த பூவுலகில் இல்லை.
தக்கதொரு காலத்தில் உயிர்களுக்கு உதவும்
      தன்மையினை அறிந்தென்னை வாழ்த்திடவே வேண்டும்.

பணக்காரன் சேர்த்துவைத்த கறுப்புபணம் கடல்நீர்
      பயனின்றி கிடப்பதைநான் கொள்ளையிட்டு வந்து
வான்பிரித்துக் கொட்டுகின்ற செல்வத்தினைப் போல
      நான்உனக்குக் கொட்டுகின்றேன் வீணாக்கி டாதீர்.
மண்மேலே நிலத்தடிநீர் குறைகின்ற தருணம்
      பணம்காசு கிடைத்துவிட்டால் சேமிப்பதைப் போல
மண்ணுக்குள் எனைநீங்கள் தேக்கிவைக்க வேண்டும்
      என்னசெய்யப் போகின்றீர் மானுடரே இன்று.

கொட்டுகின்ற வான்மழையை தேக்கிவைக்க நானோர்
      வழிசொல்வேன் தோழர்காள் கவனமாகக் கேளும்.
வெட்டிவைத்த ஏரியிலும் குளத்தினிலும் தேக்கு
      ஓடிவரும் ஆற்றுநீரைத் தடுப்பணையால் நிறுத்து
வீட்டினிலே வீதியிலே பெய்கின்ற நீரைத்
      துய்மையாக்கி பெருங்கிணற்றில் பாய்ச்சிநீயும் காப்பாய்
கடினமுடன் இப்படிநீர் செய்துவந்தால் போதும்
      நிலத்தடிநீர் தானாக உயர்ந்துவரும் மேலே.

Popular Feed

Recent Story

Featured News