Tuesday, March 25, 2014

காணிநிலம் வேண்டாம்


காணிநிலம் வேண்டாம்

காணிநிலம் வேண்டாம்நான் காணநிலம் வேண்டும்
கண்ணெதிரே கண்டிருக்க காடுமலை கழனியெல்லாம்
கட்டிடங்கள் ஆயிடுச்சி வான்தொடும் மலையெல்லாம்
வீட்டுக்குள் புகுந்திடுச்சி காடெல்லாம் சுடுகாடாய்
மாறிடுச்சி மரங்களெல்லாம் மாண்டுதானே போயிடுச்சி
ஏரிகுளம் குட்டையெல்லாம் திருவோடாய் மாறலாச்சி.

கற்பனைக்கு எட்டாத காட்சியெல்லாம் நடக்குது
காற்றுமழை ஏதுமின்றி காஞ்சிபோய் கிடக்குது
பற்பலவாய் நோய்வந்து பாவிமனம் கலங்குது

மந்திரம்போல் பூமியெங்கும் மாயங்கள் நடக்குது
எந்திரங்கள் மனிதர்களை அடிமையாக்கப் பார்க்குது
எந்திரிக்க முடியாமல் நோய்வந்து தாக்குது

வான்வெளியின் நிகழ்ச்சிகளை வண்ணபெட்டி காட்டுது
வண்ணஆடை நாகரிகம் அம்மனமாய் ஆக்குது
மண்மேலே பிறந்தஉயிர் நோய்கொண்டு போகுது

பழங்கால வாழ்க்கையிலே பசுமைபொங்க பயிர்வளர்த்து
விழாக்களும் உடன்சேர்த்து விருந்துண்ண உபசரித்து
ஆடையினைக் குறைத்துவிட்டு ஓய்வின்றி உடல்உழைத்து
கடைசிவரை நோயின்றி நூற்றாண்டு முடித்துசென்றார்

சாலையோரம் மரங்களையும் சளைக்காமல் வெட்டிதீர்த்தோம்
பாலைவனம் போலநாமும் பயிர்நிலத்தை மாற்றிவிட்டோம்
விலைவாசி ஏற்றத்தினால் விவசாயம் விட்டொழித்தோம்
விலைகொடுத்து வறுத்தெடுத்த விஷஉணவை உண்டிடுவோம்

சுற்றுசூழல் மாசுகெட்டு போனதினால்
சுற்றிவரும் காற்றுகூட கலங்கமாச்சி
காசுதந்து காற்றுவாங்கி உயிர்வளர்க்கும்
நேசமில்லா வாழ்க்கையிலே உருவாச்சி

மரம்எல்லாம் அழிந்தது
எரிவெப்பம் படர்ந்தது
நிலநடுக்கம் வந்தது
நிலம்பாலை ஆனது

சுனாமியும் உருவாச்சி
சின்னக்கடல் பெருசாச்சி
எரிமலையும் வந்துவிடும்
எரித்துநம்மை சாம்பலாக்கும்

மனிதா

மரம்வளர்த்து நல்ல காற்று வாங்கிடு
மரம்வளர்த்து நல்ல மழையைப் பெற்றிடு
மரம்வளர்த்து நல்லபூமி செய்திடு
மரத்தாலே நல்ல வாழ்வை வாழ்ந்திடு.

Popular Feed

Recent Story

Featured News