Tuesday, July 22, 2014

க. அரிகிருஷ்ணன் கவிதைகள்

க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil.,Phd.,
இரட்டணை


விடியுமென்று எண்ணி…

மெத்தனமான என் செயல்கள்
எதிரிகளுக்குக் கோட்டை கட்டும்
உரிமையைக் கூட
வழக்காடித்தான்
பெறவேண்டி இருக்கிறது
உல்லாசத்தின் உறைவிடமாய்
காலம் தள்ளி
வழிந்தோடும் ஏரி நீராய்
குமுறல்கள் வெளியேறும்
உறக்கத்தைப் பறித்துக்கொண்ட
எதிர்பார்ப்பு அலைகள்
ஆழிப்பேரலையாய் மூழ்கடிக்கும்
இந்தக் கல்லின் உருவம் காட்டி
சாட்டிகளைக் கூண்டிலேற்றும்
பசுமை நினைவுகள் வறண்டு போக
தாகம் தீர வானம் பார்க்கும்
என்றாவது ஒருநாள்
விடியுமென்றிண்ணி…

வறுமையை நடவு செய்து

நாலு மணிக்கே எழுந்திடுவாறு
எங்க அப்பா.

வீட்டு எருத வலதுலேயும்
பசுமாட்ட இடதுலேயேயும் பூட்டி
ஏரு ஓட்ட ஆரம்பிச்சா
பதிரென்னு ஆகும் ஏருவிட
கால சாப்பாடும் அப்பதான்.

அதுக்கப்பறம்
வரப்ப சுத்தி
அண்ட வெட்டுவாறு
மேடுமேடா இருந்தா
மம்மட்டியால கொத்தி
பள்ளத்துல போடுவாரு
பில்லு இருந்தா
சேத்துல அமுக்கி விடுவாரு
இப்படியே அந்தநாள் போயிடும்.

ராத்திரியில…
தண்ணி பாச்சனமுன்னு
என்னையும் கூட்டிட்டு போவாரு
பழைய கொள்ளியில
என்ன விட்டுட்டு
முதலியார் தாத்தா
கழனிக்கு அவரு போயிடுவாரு

ம்…. முன்னு வர சத்தம்
மாறுச்சின்னா
மோட்டார நிறுத்துன்னு
சொல்லிட்டுப் போவாரு.

விடியரத்துக்குள்ள
நாலு பயணம்
வந்துருவாரு
என்ன பாக்க.

நடவு அன்னிக்கு
ஆளு வச்சா காசு கொடுக்கனுமுன்னு
என்ன எங்க பாப்பாவ
எல்லாரையும் கூட்டிட்டு போவாரு
நாத்துவாரிப் போட

ஒன்பதுமணி வரைக்கும்
வேல செஞ்சிட்டுப்
பள்ளிக்கூடம் போவோம் நாங்க.

பத்தாவது படிச்சவங்க
எங்க அம்மா
இருந்தாலும்
கழனி வேலைய சிட்டா செய்வாங்க

வருமானம் இல்லன்னாலும்
செலவுக்குப் பஞ்சமில்ல
நடவு ஆள் கூலிகூட
கூலி வேலைக்கு
போய்தான் அடைப்போம்
அப்படி ஒரு வறும…

என்னதான் செய்வாரோ அப்பா…

மாட்டுமட்டுமல்ல
மனுசனுக்கும்தா
ஓய்வு கொடுக்கணுய்யா…
அதட்டலுடன் மாமா…

இப்படியே
வீட்டு வேலைய
மட்டும் பாத்துகிட்டிருந்தா
சாப்பாட்டுக்கு
என்ன பன்றதோ…
ஏக்கத்தோடு அம்மா.

அப்பா அப்பா
பள்ளிக் கூடத்துல
கட்டடபீஸ் கேட்டாங்க
கெஞ்சலோடு நானும் என் பாப்பாவும்…

ஒனக்கு
எப்பதான் பணம் வருமோ
எங்களுக்குப் பொடவ துணி
எடுத்துக் கொடுக்க
உரிமையோடு
சித்தியும் ஆயாவும்…

ம்மா…..
ம்மா…..
வேல செஞ்சிட்டு
வைக்க இல்லாம கட்டாந்தரையில
மாடுங்க.

ம்….
என்னதான்
செய்வாரோ அப்பா…


புதுசாய் ஒரு சூரியன்
கனவுகளைச் சுமந்துகொண்டு
ஏங்கங்கள் நடந்துவர
காலம் கைகொட்டிச் சிரிக்கும்

சூரியனைச் சூட்டிரிக்கும்
பெருமூச்சு
நாளைய விடியலின்
முகம் பார்க்கும்


காற்று வாங்க
போன தென்றல்
மூச்சுக் காற்றுக்காக
ஏங்கி நிற்கும்

வாங்கிய சுதந்திரத்தை
சிறை வைக்கக்
காத்திருக்கும் ஆலமரம்

முதுகு வளைந்த வானவில்
எதிர்காலத்தை நம்பிக்கொண்டிருக்கும்
நிலவும் நீச்சல் போட
புதுவானம் தேடிநிற்கும்

நோற்று இன்று நாளையென
ஒவ்வொரு நாளையும் எட்டிப்பார்க்கும்
எதிர்காலம்

இத்தனையும் கரைசேர்க்க
புதுசாய்…
சிவக்கிறது ஒரு கீழ்வானம்.

வேலைகிடைக்குமென்று…

வேலைகிடைக்குமென்று…
மத்திய அரசு
மாநில அரசு சொல்லவேண்டாம்
ஜோசியா நீயாவது…

நம்முள் தொலைந்து
குறள்வெண் செந்துறை

உன்னுள் தொலைந்த நீயும் இனிதாய்
என்னுள் தொலைந்த நானும் மகிழ்ந்தோம்

கொட்டிக் கிடந்த பச்சனை ஏக்கம்
பட்டிக் காடாய் பார்த்துச் நிற்கும்

தாள முடியா துன்பத்தின் உச்சம்
மீளா உணர்வில் முடங்கிப் போகும்

முத்தைத் தேடி மூழ்கிய பயணம்
சத்த மிலாமல் சாத்திரம் படிக்கும்

ஆடை முழுவதும் அம்பல மாகி
சாடை யாக சங்கதி கூறும்

எரிமலை வெடிப்பில் எலியின் பயணம்
பரிவே இலாமல் பாடாய்ப் படுத்தும்

பூவைக் கசக்கிப் பிழிந்த தேனோ
பாவை முகத்தில் புன்னகைப் பூக்கும்

எஞ்சிய கவிதையை இளைப்பாறி நின்று
பஞ்ச மிலாது பழுது பார்க்கும்

பதுங்கிய வேகம் புலியெனப் பாய்ந்து
கதும்பி அழுதிட கரையினைச் சேரும்

இருளைப் போர்த்தி இனியது தேடி
பெருமை கொள்ள பொங்கி எழுந்தோம்

காலம் முழுவதும் கனிவாய் சேர்த்த
கோலம் முழுவதும் இனிதே தீர்த்தோம்.

அழகுதான்…

அங்கே
அழகாய் நிற்கிறது
ஓர் அழகு…

அவளின்
இமைச்சிறகால்
பறக்கும் பொட்டு.

பௌர்ணமியை விழுங்கும்
கூந்தல் பாம்பு.

இதயம் சிதறும்
ஏவுகனைப் பார்வை

முத்தும் தாங்கும்
மெழுகு கண்ணம்

புன்னகைப் பூக்கும்
உதடுகள்.

மௌனமாய் எனை அழைக்கும்
இமைகள்.

புரிதல்

உதிரும் புன்னகையில்
உருகும் மெழுகுநான்
உன் உதட்டசைவையே
செயலாக்கியவன்
ஏனோ?
உன்னைப்
புரிந்துகொள்ளமுடியவில்லை.


காதலின் எச்சம்

உன் பார்வை தீபம்
என்மீது விழும்போதெல்லாம்
மெழுகு இதயம்
உருகுகிறது கண்ணீராய்…

உன்னோடு நானிருந்த
ஒவ்வொரு கணமும்
நெருப்பிடை தென்றல் சுகம்…

பள்ளிக் கூட வாசல்தேடி
வேளையோடு வருவதும்
வகுப்பறை பாடம் மறந்து
நம்மை நாம் ரசித்ததும்
இன்றும்
இறந்தகால நினைவுகள்
நிகழ்காலமாய்…

காம்பின் பூவாய் இருந்த நம்மை
பிரித்துவிட்டது அந்தப் புயல்
காதலின் எச்சம் தொடர்ந்தால்
மீண்டும் இணைவோம்
அடுத்த ஜென்மத்தில்…

எதிர்பார்ப்பு

இறந்தகால நினைவுகள்
நிகழ்காலமாகிறது
எதிர்காலத்தை நினைக்கையில்…

வாழ்க்கை

உயிரைக் கொல்லும் பிரிவு
வாழ்க்கை வெறுக்கும் சோகம்
எதுவும் செய்யும் காதல்
உலகை மறக்கும் மகிழ்ச்சி
பனிய வைக்கும் தோல்வி
தேவை நாடும் உறவு
வியக்க வைக்கும் வீரம்
அறிவைக் கெடுக்கும் பகை
உலகம் போற்றும் வெற்றி
உலகை வெல்லும் அறிவு
அடிமை ஆக்கும் அன்பு
சுயநலம் போக்கும் நட்பு
சேர்ந்தாரைக் கொல்லும் செல்வம்
துன்பம் நீக்கும் தொழில்
சுமைகள் தாங்கும் துணை
குறைகள் சொல்லும் குழந்தை
இந்தப் போராட்ட உலகில்
இத்தனையும் சேர்த்ததுதான் வாழ்க்கை
புரிந்து நடந்தால் வாழ்க்கை இனிக்கும்.

காதல் கோலம்

படிய வாரிய தலையை
காதல் கோலத்தில் களைத்து விட்டாய்
சரிசெய்து கொண்டன விரல்கள்

தினைவு அலைகளை
கடலலைகள் ஏற்க மறுத்தன
தூண்டில் உணவுக்கு
ஏங்கவும் இல்லை இந்த மீன்

கடற்கரை மணல்கள்
அறிவுரைப் பகர்ந்தன
அவைகள் தீர்க்க தரிசிகளானது
இப்போதுதான்

கலங்கரை விளக்கைக் கண்டுதான்
கப்பல் வருவதாக நினைத்தேன்
துறைமுகததை நோக்கி என்பது
பின்னர்தான் தெரிந்தது.

பூக்களோடு இணையும் நார்களே
நல்ல மலரோடு சேருங்கள்
மணம் வீசும் காலத்தில
மணப்பது உங்களைத்தான்…


பட்டாம் பூச்சியின் பார்வைக்காக
என் உள்ளம் ஏனோ
பறந்து செல்கிறது
விட்டுவிட்டுத் தொடரும்
அந்த நினைவுகள்
விடாத இரயில் பெட்டியைப்போல
என்னையும் அறியாமல்
ஏதோ ஒரு உந்துதல்
தள்ளிக்கொண்டு போகிறது
வாசம் வீசும் பக்கமெல்லாம்
வர்ண ஜாலங்கள்
எங்கே
என்னுள் தொலைந்த கனவுகள்…



புதிய பயணம்

மௌனங்களை உடைத்தெரிந்து
விழிபிதுங்க ஓடச்செய்
நீ நசுங்கினது போதும் நசுக்கிவிடு
உன் உணர்வுகளும் தேரேரி
பவனி வரட்டும்.

சொப்பனங்களில் மூழ்கிக் கொண்டு
கரை தெரியாது விழிக்கிறாய்
கனவுகளை நிறுத்திவிடு
கண்களைக் கட்டிக்கொண்டு வழிதேடாதே.

உன் மூச்சுக்காற்றில் எல்லாமே இருக்கிறது
சுவாசிப்பதும் சுட்டெரிப்பதும் உன்னிடமே
சேம்பேறித் தனமாய் முடங்கி விடாதே.

அடிமையாக்கும் உறவுகளில்
நகர்வதற்கே இடமில்லாமல் திணருகிறாய்
உறவுகளைத் தாண்டி உலகம் இருக்கிறது
உன் கூட்டை உடைத்துக் கொண்டு வெளியில் வா
உன் பரப்பளவும் பெரிதாகும்.

கண்ணைக் கட்டிக் கொண்டு
கண்ணாமூச்சி ஆடலாம்
வாழ்க்கையின் கண்களைக் கட்டிவிடாதே.
பிறகு
மற்றவர்கள் கண்ணாமூச்சு ஆடிவிடுவார்கள்
உன்வாழ்க்கையில்…

கண்ணீரைச் சுமக்கின்ற கயமைகளே
உன்வாழ்வை தீர்மானிப்பது நீதான்
பாதையல்ல…

எதிர்காலம் உன் வரவுக்காய்
ஏங்கிக் கொண்டிருக்க
நீ
கிணற்றுத் தவளையாய் உழல்வது நியாயமோ
எல்லை தாண்டியும் உன்சாதனைகள்
உலகை வழிநடத்தும்.

Popular Feed

Recent Story

Featured News