Thursday, December 4, 2014

வள்ளுவர் காட்டும் நட்பு


வள்ளுவர் காட்டும் நட்பு

“கோட்டுப்பூப் போல மலர்ந்துபின் கூம்பாது” என்று நட்பின் பெருமையை விளக்குகிறது நாலடியார். இந்த நட்பு இனம், மதம், சமயம், மொழி, நாடு என்ற எல்லாத் தடைகளையும் தாண்டி,“உள்ளப் புணர்ச்சி” கொண்டு பழகும் உறவாகும். வானவில்லின் வண்ணம்போல் சாதி, மதத்தால் வேறுபட்டிருந்தாலும் நட்பு என்ற ஒன்றில் ஒன்றுபட்டு வாழ்பவர்கள் நண்பர்கள். உன்பொருள் என்பொருள் என்பது நட்பினில் இல்லையே, நண்பர்களில் ஆண்என பெண்என பேதமும் இல்லையே பூவாசமாய் சேர்ந்திரும்” என்ற கூற்றிற்கினங்க, நட்பு உயர்ந்து நிற்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நட்புப் பற்றி உலகப் பொதுமறையான திருக்குறள் என்ன சொல்கிறது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
நண்பரும் வாழ்க்கைத்துணையும்
நண்பரும் வாழ்க்கைத்துணையும் ஒன்றே. கணவன் மனைவி உறவு அமைதல் போன்று, நல்ல நண்பர்கள் அமைவதும் முன்ஜென்ம பந்தமாகும். “யாயும் ஞாயும் யாரா கியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர், யானும் நீயும் எவ்வழி யறிதும், செம்புலப் பெயனீர் போல, அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே” எனவரும் குறுந்தொகைப் பாடல், உறவு முறை இல்லாத ஆணும் பெண்ணும் அன்பினில் கலந்துவிட்ட நிலையை உணர்த்துகிறது. இது நட்பிற்கும் பொருந்தும்.இருவர் நட்பில் ஒருவர் பொறை” என்பதுபோல், நண்பராகட்டும் வாழ்க்கைத் துணையாகட்டும் இருவரில் ஒருவர் பொறுத்தால்தான் அல்லது விட்டுக்கொடுத்தால் தான் அது நல்ல உறவாக அமையும். இந்த இரண்டிற்கும் சுயநலமென்பதும் இல்லை.
உண்மை நட்பு
“இதயக் கூட்டில் குடியமர்த்தி இரண்டு இதயம் சுமக்கின்ற உருவமில்லாக் குழந்தை, இதற்கு வயது தேவையில்லை உருவம் கூட காணாமல் உறவு கொள்ள வரும் நட்பு” என்று நட்பைப் பற்றியும்,“உயிரையும் தருகிற ஒருவனை அடைவதால் பலதுன்பமும் விலகிப் போய்விடும்” என்று நண்பரின் பெருமையையும் பாவின செய்யிட்கோவை புகழ்ந்துரைக்கும். நல்ல நூல்களைக் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் பயப்பது போல, நற்பண்பு உடைய நல்ல நண்பருடன் கொண்ட நட்பும் பழகப் பழக மிகுந்த இன்பத்தைக் கொடுக்கும். இதனை, நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர்த் தொடர்பு” எனும் குறள் உணர்த்துகிறது. அத்தகைய நண்பன் துன்புறும் காலத்து அத்துன்பத்தை அவன் உரைக்கா முன்பே போக்குவதும் நல்ல நண்பனின் கடமைகளாகும்.
மேலும் முகமலர்ச்சி கொள்வது மட்டுமல்லாது அகமும் மலர்ச்சி கொள்ளும்படியாக உள்ளன்பு கொண்டு நட்பு கொள்வதும்; நண்பர்கள் நெறி தவறிச் செல்லுங்கால் அத்தவறைத் தடுத்து நிறுத்தி நல்வழிப்படுத்துவதும்; பழகிய உரிமையால் தன் நண்பன் தன்னைக் கேட்காமல் வருந்தத்தக்கச் செயல்களைச் செய்தாலும், அது அவன் அறியாமையால் செய்கிறான் என்றோ, மிகுந்த உரிமையால் செய்கிறான் என்றோ உணர்ந்து, தாம் தொன்றுதொட்டு பழகிவந்த அன்பின் வழிவந்த கேண்மையாகிய நட்பைக் கைவிடாது நட்பு கொள்வதும் நல்ல நண்பனின் இலக்கணமாகும்.
தக்கார் நட்பு
நட்பு கொள்ள வேண்டுமென்றால் நல்ல நண்பன் வேண்டும், நட்பு கொள்ள வந்தவரை ஆய்ந்து நட்பு கொள்வோம்என்ற கூற்றிற்கினங்க, நண்பர்களை ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும். அவ்வாறு ஆராயாமல் நட்பு கொண்டோமானால், இறுதியில் தான் சாவதற்குக் காரணமான துயரத்தை உண்டாக்கும். அவ்வாறு ஆராயுங்கால், ஒருவனுடைய குணம், குடி, குற்றம், இனம் ஆகியவற்றை ஆராயவேண்டும். உயர்ந்த குடியில் பிறந்து தனக்கு வரும் பழிக்கு அஞ்சுகின்றவனை, ‘ஒன்று ஈந்தும் கொளல் வேண்டும் என்றெல்லாம் தக்காரிடத்தில் நாம் கொள்ளும் இயல்புகளை விளக்கிச் செல்கிறார் வள்ளுவர்.
இத்தகைய குற்றமில்லாத தக்காரின் நட்பு வளர்பிறைபோல் வளரவேண்டும் என்பதை, நிறைநீர நீரவர் கேண்மை எனும்சொல் உணர்த்துகிறது. இச்செய்தியை நாலடியாரும் நுவலும். கற்றாரின் நட்பு நுனிக்கரும்பிலிருந்து அடிவரைத் தின்றார் போன்று பழகப் பழக இனிமை பயக்கும் என்ற நாலடியாரின் செய்தியை, ‘பயில்தொறும் பண்புடை யாளர்த் தொடர்பு என்னும் குறட்பாவில் விளக்குவார் வள்ளுவர். நண்பர்கள் ஒன்றாக இணைந்து பழக வேண்டுமென்பதல்ல. கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் போல நட்பு என்ற ஒத்த உணர்ச்சி இருந்தாலே போதுமானது என்ற வள்ளுவரின் கூற்றை, பிரியினும் நட்பு வளரும் ஊளமிரண்டு சேர்ந்து ஈருக்கப் பெறின்” என்ற தற்காலக் கவிஞனின் குறட்பா உணர்த்துகிறது.
தகவிலார் நட்பு
இன்றைய உலகில் தன்னுடைய தேவைக்காக நட்பு கொள்பவர்களே மிகுதியானவர்கள். அவர்கள் பணத்திற்காகவும் பொருளுக்காகவும் இன்பத்திற்காகவும், இனம், மதம், மொழிக்காகவும் நட்புகொண்டு தேவை முடிந்ததும் கண்டும் காணாமல் சென்று விடுவார்கள். பொருளுக்காக நட்பு கொள்கிறவர்களை ‘விளைமகளிர்’ என்றும் இத்தகையோரின் நட்பை  ஒன்று ஈந்தும் ஒருவுக’, ‘பெருகலின் குன்றல் ஈனிது’ என்றும்  கூறுவார் வள்ளுவர்.
நண்பருக்குத் துன்பம் வரும் காலத்து அத்துன்பத்தைப் போக்காது விட்டு நீங்குவாரை கல்லா மா’ என்று கடிந்துரைப்பார். நல்லது செய்தல் ஆற்றீ ராயினும், அல்லது செய்தல் ஓம்புமின் என்பதுபோல, பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்” என்று அறிவிலார் நட்பைவிட அறிவுடையார் நட்பின்மை கோடி மடங்கு சிறந்தது எனக்கூறுவார். சொல்லும் செயலும் வேறானவர்களின் நட்பும் முகத்திற்கு நேர் புகழ்ந்துரைத்தும் புறத்தே இகழ்பவரின் நட்பும் கொள்ளற்க என்றுரைப்பார்.
தகவிலாரின் நட்பினை அடிக்கரும்பிலிருந்து நுனிக்கரும்புவரைத் தின்றாற்போன்றது என்றும் இது, ஆரம்பத்தில் இனிமையாகவும் காலம் செல்லச் செல்ல வெறுக்கும் தன்மையுடையது என்றும் நாலடியார் கூறுகிறது. இதனையே, ‘பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு’ எனக்கூறும் வள்ளுவம்.
நட்புப் போலி
ஒரு ஆண் ஆணோடு நட்பு கொள்ளும்போதும், ஒரு பெண் பெண்ணோடு நட்பு கொள்ளும்போதும் அந்த நட்பு கடைசிவரை நட்பாகவே இருக்கிறது. ஆனால், ஒரு ஆணும் பெண்ணும் நட்பு கொள்ளும் போது சிலநேரங்களில் அது காதலாக மாறிவிடுகிறது இதற்குக் காரணம் என்ன? ஒத்த பாலினத்தார் கொள்ளும் அன்பு நட்பாகவும் இருவேறுபட்ட பாலினத்தார் கொள்ளும் அன்பு காதலாகவும் மாறுவதற்கு பாலின ஈர்ப்பே காரணமாகும். இது தாய் மகனிடத்துக் கொள்ளும் பாசம், தந்தை மகளிடத்தில் கொள்ளும் பாசம் போன்றது.
இவ்வாறு பால்மாறி நட்பு கொள்பவர்கள் அனைவரும் காதலர்களாக மாறிவிடுகின்றனர் என்று சொல்லமுடியாது. ஒரு சிலரே அதற்கு ஆட்படுகின்றனர். அவர்களைக் கேட்டால், நாங்கள் நண்பர்களாகத் தானிருந்தோம். பின் காதலர்களாக மாறிவிட்டோம் என்று கூறுவார்கள். இது முற்றிலும் தவறானது. நட்பில் காதல் தோன்றாது. கண்கள் தொட்டுத் தீட்டுகின்ற, வண்ண ஓவியம்தான் காதல் இது, கண்ணால் பூக்கும் பூ” என்பது போல அவர்கள் கண்டதுமே காதல்வயப்படுகின்றனர். அதைமறைப்பதற்கு நண்பர்கள் எனப் பொய்வேடம் போடுகின்றனர். இவர்களை, மனத்தின் அமையாதவரை எனைத்தொன்று செல்லினால் தேறாற்பாற் றன்றுஎனக்கூறுவார் வள்ளுவர்.
முடிவுரை
‘செயற்கரிய யாவுள’ என்பதற்கேற்ப, நட்பைக் காட்டிலும் செய்துகொள்வதற்கு அரியசெயல் எதுவும் இல்லை. அத்தகைய நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் போது அவர்களின்  குணம், குடி, குற்றம், இனம் ஆகியவறை ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும். இத்தகைய குடிக்கண் பிறந்து வரும் பழிக்கு நாணுவாரை, ‘கொடுத்தும் கொளல் வேண்டும்’. நட்பு கொள்ளுங்கால் நல்லவரின் நட்பு வளர்பிறைபோன்றும் தீயவர்களின் நட்பு தேய்பிறைபோன்றும் அமையவேண்டும். நட்பு என்ற உணர்ச்சியில் நண்பன் துன்புறும்போது அத்துன்பத்தைத் தானேமுன்வந்து போக்க வேண்டும். அவ்வாறு உதவாது தன்னை விட்டு நீங்கின் அவருடைய நட்பைஒன்று ஈந்தும் ஒருவுதல் வேண்டும்.
‘அன்பின் வழிவந்த கேண்மையால்தன் நண்பன் தன்னைக் கேளாது, தனக்குத் துன்பம்தரும் செயல்களைச் செய்தாலும் அது அவனது அறிவின்மையால் நிகழ்கின்றன என்றுணர்ந்து நட்பாட வேண்டும் என நட்பின் இயல்பு, நட்புகொள்வாரின் தன்மை முதலியவற்றை வள்ளுவர் தமது நூலில் நட்பியல் எனும் பகுதியில் விளக்கிச் செல்கிறார்.
நட்பு குறித்து வள்ளுவர் கையாண்ட தொடர்கள்
1  அகத்து இன்னா வஞ்சரை அஞ்சப்படும்
2  அகநக நட்பது நட்பு
3  அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும்
4  அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு
5  அழிவந்த செய்யினும் அன்பறார்
6   அழுத கண்ணீரும் அனைத்து
7   அழச்சொல்லி அல்லல் இடித்து வழக்கறிய வல்லார் நட்பு
8   அறிவுடையார் ஏதிண்மை கோடி உறும்
9   அன்பின் வழிவந்த கேண்மை யவர்
10 ஆய்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை
11 இனம்போன்று இனமல்லார் கேண்மை
12 இடுக்கண் களைவதாம் நட்பு
13 உப்பாதால் சான்றோர் கடன்
14 உணர்ச்சிதாம் நட்பாம் கிழமை தரும்
15 உள்ளற்க உள்ளம் சிறுகுவ
16 உறுவது சீர்தூக்கும் நட்பு
17 எய்தலின் எய்தாமை நன்று
18 ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும்
19 ஒப்பிலார் கேண்மை
20 ஒன்று ஈந்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு
21 கனவிலும் இன்னாது மன்னோ
22 கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்
23 குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானை
24 குணனும் குடியும் குற்றமும் குன்றா இனனும் அறிவது நட்பு
25 கெடுங்காலைக் கைவிடுவார் நட்பு
26 கெடாஅ வழிவந்த கேண்மை யவர்
27 கெழுதகையால் கேளாது நட்டார் செயின்
28 கெழுதமையை செய்தாங்கு அமையாக் கடை
29 கேண்மை விடாஅர் விழையும் உலகு
30 கேள்இழக்கம் கேளாக் கெழுதகைமை
31 கொட்புன்றி ஒல்லுவாய் என்றும் நிலை.
32 கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு
33 கொள்ளற்க அல்லல்கண் ஆற்றறுப்பார் நட்பு
34 செயற்கரிய யாவுள
35 சொல்லாடார் சேர விடல்
36 சொல்வணக்கம் ஒன்னார்க்கண் கொள்ளற்க
37 தாம் சாம் துயரம் தரும்
38 தமரின் தனிமை தலை
39 தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
40 தொழுத கையுள்ளும் படையொடுங்கும்
41 நகச்செய்து நட்பினுள் சாப்புல்லல் மாற்று
42 நகுதல் பொருட்டன்று நட்பு
43 நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு
44 நட்டார்போல் நல்லவை சொல்லினும்
45 நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை
46 நவில்தொறும் நூல்நயம் போலும்
47 நாடாது நட்டலின் கேடில்லை
48 நாளிழக்கம் நட்டார் செயின்
49 நிறைநீர நீரவர் கேண்மை
50 நேரா நிரந்தவர் நட்பு
51 நோதக்க நட்டார் செயின்
52 பயில்தொறும் பண்புடை யாளர்த் தொடர்பு
53 பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
54 பழகிய நட்பெவன் செய்யும்
55 பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு
56 புணர்ச்சி பழகுதல் வேண்டா
57 புனையினும் புல்லென்னும் நட்பு
58 பெறினும் ஈழப்பினும் என்
59 பெருகலின் குன்றல் இனிது
60 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
61 பேதையார் கேண்மை ஒரீஇ விடல்
62 மகளிர் மனம்போல் வேறுபடும்
63 மருவுக மாசற்றார் கேண்மை
64 மன்றில் பழிப்பார் தொடர்பு
65 மனத்தின் அமையா தவர்
66 முகம்நட்டு அகம்நட்பு ஒரீஇ விடல்
67 முகநக நட்பது நட்பன்று
68 மேற்சென்று இடித்தல் பொருட்டு
69 யாதும் கிழமையைக் கீர்ந்திடா நட்பு
70 வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்
71 விழைதகையான் வேண்டி இருப்பர்
72 வினைக்கரிய யாவுள
73  வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு

Popular Feed

Recent Story

Featured News