Friday, December 26, 2014

திருமண முறையும் இல்லற வாழவும்

திருமண முறையும் இல்லற வாழ்வும்
முன்னுரை
     இனம், மொழி, மதம், பண்பாடு ஆகியவற்றால் வேறுபட்ட அனைத்து சமுதாயத்திலும் கூட குடும்பம் என்ற அமைப்பு உள்ளது. குடும்பத்தை உருவாக்கும் பொருட்டுச் செய்யப்படும் சடங்குகளே திருமணமாகும். அன்பு கொண்ட இரண்டு இதயங்களை இணைத்து வைப்பதற்குப் பெரியவர்கள் கூடிஇன்னாருக்கு இன்னார் என்று நிச்சயித்து, ஒரு நல்ல நாளில் மண அணி காண்பதே திருமண முறையாகும்.
ஓர் ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக திருமணம் செய்துகொண்டு நடத்தும் வாழ்க்கை முறையினையே இல்லறம் என்கிறோம். இவ்வில்லறத்தில் செய்யக்கூடிய கடமைகள் பல உள்ளன. இக்கட்டுரை திருமணம் முறைபற்றியும் இல்லறக்கடமைகள் பற்றியும் எடுத்தியம்புகிறது. அவற்றுள் திருமண முறைபற்றி முதலில் காண்போம்.
திருமணம் என்பது எப்போது?
     ஆரம்ப காலத் தமிழர் வாழ்வில் திருமணச் சடங்கு இல்லை. ஆணும் பெண்ணும் இணைந்து தங்களுக்குத் தேவையானப் பொருட்களைத் தேடி வாழ்க்கை நடத்தும் முறையாகவே இருந்து வந்தது. காலம் செல்லச் செல்ல சில ஆண்கள் தாம் கூடிய மகளிரை மணக்கவில்லை என்று பொய்யுரைத்தும், வாழ்க்கை முறையிலிருந்து வழுவி வந்த காலத்தும் மக்கள் மீது அக்கரை கொண்ட பெரியவர்கள் கரணம் என்ற திருமணச் சடங்கை ஏற்படுத்தினர். இதனை,
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப    

என்ற தொல்காப்பிய நூற்பா உணர்த்தும். இதில் கரணம் என்பது திருமணச் சடங்கைக் குறிப்பதாகும்.
இருவகை மணம்
     களவு மணம், கற்பு மணம் என்பது தமிழிலக்கிங்களில் போற்றப்படும் இருவகை மணங்களாகும். தமிழர்கள் இன்றளவும் இவ்விரு முறைகளிலேயே திருமணங்களை நடத்தி வருகின்றனர்.
களவு மணம்
     ஓர் ஆணும் பெண்ணும் பெற்றவர்க்கும், மற்றவர்க்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளும் முறையை களவு மணம் என்பர். களவு என்பது, பிறர்க்குரிய பொருளை அவர் அறியாமல் கைக்கொள்ளுதலாகும். இன்று இதனை காதல் திருமணம் எனக் கூறுவர்.
ஒத்த அன்புடைய ஆணும் பெண்ணும் உறவு முறை ஏதுமின்றி, இருவரும் சந்தித்து மனமொத்து, இரண்டறக் கலந்துவிட்ட நிலையை,
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல             
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.                             குறுந்தொகை பா. 40.

என்ற குறுந்தொகைப் பாடல் உணர்த்துகிறது.
கற்பு மணம்
கற்பு மணம் என்பது, வேள்விச் சடங்குகள் நடத்தி பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் இணைந்து நடத்தும் திருமண முறையாகும். இச்செய்தியை,
இருபெரும் குரவரும் ஒருபெரு நாளால்
மணஅணி காண மகிழ்ந்தனர்.                                    சிலம்பு. மங்கல வாழ்த்து.

என்ற சிலப்பதிகாரப் பாடல் விளம்புகிறது. இக்கற்பு மணத்தைப் பிரசாபத்தியம் என்று கூறும் வேதநூல்மாப்பிள்ளையின் பெற்றோர் பெண் கேட்க, பெண்வீட்டார் மறுக்காமல் பெண் தருவதாக உடன்பட்டு, பெண்ணை அலங்கரித்து தீமுன் கொடுப்பது என்று கூறுகிறது. சடங்குகளோடு செய்யப்படும் திருமண முறையைக் கற்புமணம் என்று கூறும் இலக்கியங்கள், சடங்கு முறை களையும் தெரிவிக்கின்றன. அவற்றுள் ஒரு செய்தியாக,
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைந்தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னை
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்  நாச்சியார் திருமொழி பா. 6

என்ற நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல், தோரணங்கள் நிறைந்த பந்தலின் கீழ், மத்தளமும், வரிசங்கும் இசைக்க, திருமணம் நடைபெற்றது என்ற செய்தியைத் தெரிவிக்கிறது. இம்மாதிரியான திருமணங்களை நிச்சயக்கப்பட்டத் திருமணம் என்பர். இனி இல்லத்தில் கணவனும் மனைவியும் நடந்துகொள்ளும் முறைகள் பற்றியும் இல்லத்தில் செய்யக்கூடிய அறங்கள் பற்றியும் காண்போம்.
இல்வாழ்க்கை
     இல்வாழ்க்கை என்பது இல்லத்தின்கண் வாழும் வாழ்க்கையாகும். பெற்றோருடன் வாழும் வாழ்க்கையை யாரும் இல்வாழ்க்கை என்று கூறமாட்டார்கள். ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டு, பெற்றோரை விட்டு விலகி தனியே வாழும் வாழ்கையை இல்வாழ்க்கை என்பர். இல்வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் கணவனும் மனைவியுமாவர்.
கணவன், மனைவி உறவென்பது, திடீரென்று ஒரு நாளில் தோன்றும் உறவன்று. பிறவிதோறும் தொடரும் உறவாகும். இக்கருத்தை,
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயா கியர்என் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே                                  குறுந்தொகை பா. 49

என்ற குறுந்தொகைப்பாடல் வழி அறியலாம். கணவன் மனைவி உறவு வெறும் உடற்காமத்தால் அமைவதன்று. உள்ளக் காமத்தால் அமைவதாகும். ஒரு பெண் தன் கணவன் மீது கொண்ட அன்பைக் கூறுமிடத்து,
நிலத்தினும் பெரிதே: வானினும் உயர்ந்தன்று:
நீரினும் ஆரள வின்றே - சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே                                  குறுந்தொகை பா. 3
என்று கூறுகிறாள். இதில், “யான் என் தலைவனோடு கொண்டுள்ள அன்பு, இந்த நிலத்தைவிட பெரியது: வானைவிட உயரமானது: கடலைவிட ஆழமானது என்று கூறுவதாக அமைகிறது. இவ்வாறே, இல்லறத்தில் வாழும் ஒவ்வொருவரும் நினைப்பாரேயானால் இல்லறம் நல்லறமாக அமையும்.
     புதியதாகத் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண், தன் கணவனோடு இரண்டறக் கலந்து விட்ட நிலையைக்  கூறுமிடத்து, செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே என்று கூறுகிறாள்.
     இதில் செம்புலப் பெயல்நீர் போல என்பது உவமை. மழையை மனைவியாகவும் செம்மண்ணை கணவனாகவும் உவமித்துக் கூறுப்படுகிறது. மழை ஒரு தன்மையுடையது; நிலம் ஒரு தன்மையுடையது இரண்டும் ஒன்றாய் கலந்துவிட்ட நிலையில் இரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது. இதைப் போலவே, மணப்பெண் ஒரு தன்மையினள்; மணமகன் ஒரு தன்மையினன்; இருமனமும் இணைந்தபின் ஒருமனத்தவராய் மாறிவிட்டனர் என்பதே இவ்வுவமையின் பொருளாகும்.
     இவ்வாறு கலந்துவிட்ட அன்பு, உடல் எழிலோடு இருக்கும் போது மட்டும் இருப்பதன்று. மனைவியின் உடலழகு வற்றி நரை மூதாட்டியாக ஆனபோதும் முதல்நாள் கொண்ட உள்ளன்போடு அவளைப் போற்றிப் பாதுகாப்பது கணவனின் கடமையாகும். இதனை,
          அண்ணாந்து ஏத்திய வனமுலை தளரினும்               
என்ற நற்றினைப் பாடல் தெரிவிக்கிறது. மனைவி என்பவள், தன் கணவன் வீடு வறுமையுற்றபோதும், தான் பிறந்த வீட்டை நினைக்காமல் கணவனுடைய நலனையே தன் நலனாக நினைத்து வாழ வேண்டும். இக்கருத்தை,
          அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பை
என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் விளக்குகிறது. இத்தகைய வறுமையை, பெற்றவரும் அறியாமல் வாழ்வதே மனையாளின் சிறந்த பண்பாகும்.
மக்கட் பேறு
     குடும்ப வாழ்வு, குழந்தை பெறுதல் என்பதிலேயே முழுமை பெறுகிறது. குழந்தை இல்லாதவர்கள் எவ்வளவு செல்வந்தர்களாயினும், அறிவுடையவர்களாயினும் அவர்கள்  மரம்போன்றவராவர் என்கிறார் திருவள்ளுவர். குழந்தை என்றாலே எல்லோருக்கும் ஆசைவரும். அக்குழந்தையைத் தூக்க வேண்டும்; அக்குழந்தைதோடு கொஞ்சி விளையாட வேண்டும் என்றெல்லாம் எண்ணத்தோன்றும். அவ்வாறு குழந்தையைத் தீண்டும்போது உடலுக்கு இன்பத்தையும் அதன் மழலைப் பேச்சைக் கேட்கும்போது காதுக்கு இன்பத்தையும் தருகிறது. இச்செய்தியை,
குழலினிது யாழிஇனிது என்பர்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்”                                                     குறள் 66
என்ற திருக்குறளில் கூறப்படுகிறது. மேலும்,
படைப்புப் பலபடைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்கள் இல்லோர்க்குப்
பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே”                       புறநானூறு பா. 188
என்ற புறநானூற்றுப் பாடலில், செல்வ வாழ்வென்பது தனித்து உண்ணுதல் அன்றி, பலரோடு கூடி உண்ணும் இன்பம் வாழ்க்கையாகும். ஆயினும் இவ்வின்பத்தைவிட இளஞ்சிறார்கள் தம்முடைய சிறுகை நீட்டி, குறுகுறு நடந்து, தம் பெற்றோர் உண்ணும் உணவில் இருகையும் வைத்துத் தொட்டும் கவ்வியும் துழாவியும் தம் உடலெங்கும் பூசியும் இன்பச் சிறுதொழில் புரிய, அவர் சிதைத்து சிதறும் உணவை, பெற்றவர்கள் உண்ணுங்கால் உண்டாகும் இன்பமே உலகில் மிகப் பெரிய இன்பமாகும். அப்போது அவ்விளஞ்சிறார் மிழற்றும் சொல்லும் செய்யும் செயலும் கண்ணுக்கும் செவிக்கும் உடலுக்கும் இன்பம் தரும். இவ்வின்பத்தை அனுபவிக்காதவர் வாழ்நாள் பயனற்றதாகும். இப்புறநானூற்றுப் பாடலுக்கு அரணாக,
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்                                                                                    குறள்  64
என்ற திருக்குறள் அமைகிறது. இதில், உலகில் மிகச் சுவையுடையதாகவும் உயர்ந்ததாகவும் போற்றப்படும் உணவு அமிர்தம். அந்த அமிர்தத்தைவிட இனிமையான உணவு ஒன்று உண்டெனில் அது தம் குழந்தை கைவைத்துக் குழப்பிய உணவு எனச் சுட்டப்படுகிறது.
குழந்தை இல்லாத வீட்டில் விருந்தினர்களும் உண்ணமாட்டார்கள் என்கிறது அப்பூதியடிகளார் வரலாறு. எனவே இல்லறம் சிறக்க வேண்டுமெனில் மக்கட்பேறு இன்றியமையாததாகும்.
கல்வி
              “கல்வி இல்லா நிலம் களர்நிலம், அதில் புல் விளைந்திடலாம் நல்ல புதல்வர்கள் விளைவதில்லைஎன்பது பாரதிதாசனின் அமுதமொழி. பெற்றோர்கள் கற்றிருந்தால்தான் அவரது பிள்ளைகளின் வாழ்வும் செழுமையடையும். ஒழுக்கம், பண்பாடு, பழக்கவழக்கம், அணுகுமுறை ஆகியவை கற்ற பெற்றோரிடமிருந்தே குழந்தைகள் பெறுகின்றனர். கல்லாதாரின் குழந்தைகளிடம் இத்தகைய குணங்களைக் காண்பதரிது. இதனாலேயே, இல்லறத்தில் ஒரு பெண் படித்திருந்தால் அந்தக் குடும்பம் ஒளிமயமானதாக அமையும் இல்லையேல் இருண்ட வீடாக மாறும் என்று கூறுவார் பாரதிதாசன்.
      வள்ளுவரும், கல்வியறிவு இல்லாதவர்களை விலங்கு என்று கூறி, மனிதர்களுக்குக் கண்களாக இருப்பது எண்ணும், எழுத்துமாகும். அவ்வெண்ணும் எழுத்தும் அறியாதவர்கள், நல்ல பார்க்கும் திறன்கொண்ட கண்களைப் பெற்றிருப்பினும், அக்கண்கள் அவர் முகத்தில் இருக்கும் இரண்டு புண்கள் என்று கூறுகிறார்.
கல்வி ஒருவர்க்கு நிலையான செல்வமாகும். அக்கல்வியைத் திருடர்களால் திருடிச்செல்ல முடியாது, தீயினால் எரிக்க முடியாது, நீரால் அடித்துச் செல்ல முடியா; பிறருக்குக் கொடுத்தாலும் குறையாது. இக்கல்வியைக் கற்றவர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பை உண்டாகும் என்பதனை,
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே
எத்திசைச் செலினும் அத்திசை சோறே                                           புறநானூறு பா. 206
என்ற புறப்பாடலில், =மரவேலைகளைச் செய்யக்கூடிய ஒரு தச்சன், பல ஆயுதங்களைக் கையில்கொண்டு காட்டகத்திற்குச் சென்றால், அவன் எத்திசைச் சென்றாலும் அத்திசைக் காட்டு மரங்களைக் கொண்டு பல்வேறு மரச் சாமான்களைச் செய்து பொருள் ஈட்டி உண்பான். அதைப்போல, பாடும் புலமைப் பெற்ற யான், நாவாகிய ஆயுதம் கொண்டு பாடிப் பிழைத்து சோறு உண்ணுவேன் என்பதாகக் கூறப்படுகிறது. இப்பாடலில் வரும் தச்சனைப் போல யார் துணையும் இல்லாமல் வாழ்க்கை நடத்த வேண்டுமானால், அதற்கு கல்வியறிவு இன்றியமையாததாகும். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அறிவுடையவராக உருவாக்க வேண்டுமானால் கல்வி அறிவு பெற்றிருத்தல் அவசியமானதாகும்.
விருந்தோம்பல்
     தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு வாழையடி வாழையாக வளர்ந்து வருகிறது என்று நாம் படித்திருக்கிறோம். இவ்விருந்தோம்பல் பண்பு இல்லறக் கடமைகளுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. திருவள்ளுவர் இல்லறக் கடமைகளைக் குறிப்பிடும் போது,
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்
கைம்புலத்தா றோம்பல் தலை                                                                                                குறள் 43
என்று கூறுவார். அதாவது, தென்புலத்தார் (இறந்தவர்கள்), தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவரையும் போற்றிக் காப்பவனே சிறந்த இல்லறத்தான் என்கிறார். மேலும், விருந்தினர்கள் அனிச்சம் மலருக்கு ஒப்பானவர்கள் என்றும், அவர்கள் முகம் வாடாமல் உபசரித்தல் வேண்டுமென்றும் கூறுவார்.
     விருந்தினர்களை உபசரிப்பதில் ஆண்களை விட பெண்களுக்கே முழு உரிமை உண்டு. ஆயினும், விருந்து படைக்கும் பொழுது கணவன், மனைவி இருவரும் இணைந்தே விருந்து படைக்க வேண்டும். பெண் தனியாக விருந்து படைத்தலோ ஆண் தனியாக விருந்து படைத்தலோ சிறப்புடையதன்று. பெண் தனியாக விருந்து படைத்தல் கூடாது எனபதனை,
அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை       
என்ற சிலப்பதிகாரப் பாடல் உணர்த்தும். இப்பகுதி, கோவலன் தன்னைப் பிரிந்து சென்றமையால் தன்னை நாடி வரும் அறவோர்க்கும் அந்தணர்க்கும் துறவோர்க்கும் விருந்தோம்பல் செய்ய முடியவில்லையே என்று கண்ணகி வருந்துவதாக அமைகிறது. பெண்களைப் போலவே ஆண்களும் மனைவி இல்லாமல் விருந்தினரை உபசரித்தல் இயலாது என்பதனை,
அருந்தும் மெல்லிட காரிட அருந்துமென்று அழுங்கும்
      விருந்து கண்டபோ தென்னுறுமோ வென்று விம்மும்     
என்ற கம்பராமாயண அடிகள் புலப்படுத்தும். இப்பாடல், சீதை இராவணனால் கவரப்பட்டு அசோக வனத்தில் இருக்கிறாள். அப்போது இராமனை நாடி விருந்தினர்கள் வந்தால் இராமனால் விருந்துபடைக்க முடியாமல் என்ன செய்வானோ என்று எண்ணி வருந்துவதாக அமைகிறது.
தமிழர்கள் இறந்துபடும் நிலையில் கூட விருந்தினர்களை உபசரித்தனர் என்பதை,
விருந்தினரும் வறியவரும் நெருங்கி உண்ண
                மேன்மேலும் முகம்மலரும் மேலோர் போலப்
பருந்தினமும் கழுகினமும் தாமே உண்ணப்
       பதுமுகம் மலர்ந்தாரைப் பார்மின்! பார்மின்!               
என்ற கலிங்கத்துப்பரணிப் பாடல் உணர்த்துகிறது. விருந்தாக வந்தவர்களும் வறியவரும் உணவு கொள்ளக் கொள்ள முகம் மலரும் மேலோர் போல. பருந்தும், கழுகும் தம் உடலைக் கொத்தித் தின்பதைக் கண்டு இறந்து கிடக்கும் வீரர்களின் முகங்கள் தாமரை மலர்போல மகிழ்ச்சியில் மலர்ந்திருக்கிறது பாருங்கள்: பாருங்கள் என்று கூறுவதாக இப்பாடல் அமைகிறது.
ஆக, விருந்தினர்களை உபசரித்தல் என்பது இல்லறத்தாரின் கடமை என்றும் அவ்விருந்தினர்களை உபசரிக்கும் போது கணவனும் மனைவியும் இணைந்தே உபசரிக்க வேண்டும் என்பதை உணரலாம்.
மனித நேயம்
          “யாதும் ஊரே யாவரும் கேளிர்”  என்று கணியன் பூங்குன்றனாரும், “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்என்று வள்ளலாரும், “தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்என்று பாரதியாரும் மனித நேயத்தை விதைத்துச் சென்றுள்ளனர்.
     மனிதநேயம் என்பது மனிதனை மனைதனாக மதிப்பதாகும். இது தமிழர்களின் தலையாயப் பண்புகளுள் ஒன்றாகும். தனக்கு வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதுடன், தனக்குத் தீமை செய்தவருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற மனப்பக்குவத்தைக் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதனை,
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்”                                                                                               குறள் 314
என்ற திருக்குறள் வழி அறியலாம். மனித நேயத்தின் மற்றொருப் படைப்பாகத் திகழ்பவர் திருமூலர். இவர்,
படமாடக் கோயில் பகவற் கொன்றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க் கங்காகா
நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயின்
படமாடக் கோயில் பகவற்கு ஆமே     
என்ற பாடலில் கோயில்களிலுள்ள திருவுருவங்களுக்குத் திருவமுது படைக்கப்படும் பொழுது அது நடக்கும் கோவிலாக உள்ள நம் போன்ற மனிதர்களுக்குச் சென்றடைவதில்லை. ஆனால், நடமாடும் கோயிலான மனிதர்களுக்குப் படைக்கப்படும் பொழுது அது இறைவனைச் சென்றடைகிறது என்று மனித நேயத்திற்குக் குரல் கொடுப்பதைக் காணலாம். சிலர் தமது தாய், தந்தையர்களுக்கு உணவளிக்காமல் கோவில்களில் அன்னதானம் செய்வதைக் காணலாம். அது அவர்களுக்குப் பலன் தராது. முதலில் குடும்பத்தார்களை மனித நேயத்துடன் நடத்தப்பட வேண்டும். பின் மற்றவர்களிடம் கருணைகாட்ட வேண்டும்.
     இருபதாம் நூற்றாண்டில் இணையற்றக் கவிஞனான பாரதி, இமயமலையில் ஒருவன் இருமினானென்றால் குமரில் இருப்பவன் மருந்து கொண்டோடுவான் என்று தேச மனித நேயத்தைச் சுட்டிக்காட்டுவான். தற்கால கவிஞன் ஒருவன்,
உறவுகொள்ளடா உறவுகொள்ளடா
                உரிமையோடுநீ உறவுகொள்ளடா
உறவுஎன்பது இரத்தசொந்தமே
                உணர்ந்துபார்க்கையில் உலகுசொந்தமே
ஒருஉறவிலே பலர்உறவினர்
                பலர்உறவிலே உலகமனிதன்
உறவுஆகிறான் முரட்டுமானிடா
                உணர்ந்துபார்க்கையில் மனிதசாதியே உறவுதானடா!                                                                                                                                                                     பாவினசெய்யுட்கோவை பா. 99
என்ற பாடலில், மனிதர்களாய் இருக்கிற நாம் இரத்தச் சம்மந்தம் உடையவர்கள் பறவை, விலங்கு என்பதுபோல மனிதசாதி என்பதும் ஒரு உறவாகும். ஒவ்வொருவரும் தனது சொந்தங்களை நினைத்துப் பார்க்கையில் பலர் உறவினர்களாக வருவதைக் காணலாம். அவ்வுறவினர்களின் உறவுக்காரர்களை நினைத்துப் பார்ப்போமே யானால் உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஏதோ ஒரு உறவு முறையில் சொந்தக் காரர்களாக வருவதை உணரலாம். இக்கருத்தை வலுவூட்டும் வகையில்,
எவர்உடம்பிற்கும் சிவப்பே ரத்த நிறமப்பா
எவர்விழி நீர்க்கும் உவர்ப்பே இயற்கை குணமப்பா”                                                                                                                                                                                           கவிமணி கவிதைகள் . 48
என்ற கவிமணியின் பாடல்வரிகள் அமைகின்றன. எனவே, மனித நேயம் இல்லற வாழ்வை சிறப்படையச் செய்யும் என்பதை அறியலாம்.
இனியவைக் கூறல்
          “மனம் உவந்து நட்டார் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரித்தவர்என்பது வள்ளுவர் வாக்கு. மன மகிழ்ச்சியுடன் பிறர்க்குப் பொருள் கொடுத்து உதவுவதைவிட இனிமையான செயல் ஒன்றுண்டு என்றால் அது முகமலச்சியோடு இனிய சொற்களால் பேசுவதேயாகும். இனிய சொற்கள் இருக்கும்பொழுது அதை விடுத்து தீமையான, பிறர் மனதைத் துன்புறுத்தும் சொற்களில் பேசுபவர்கள், பழுத்த, சுவையான கனிகள் இருக்க அதை உண்பதை விடுத்து, புளிக்கக்கூடிய காய்களை விரும்பி உண்பவராக,
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று”                                                              குறள் 100
என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். தீய சொல் ஒருவரைத் துன்பப்படுத்தும் என்றும், இனிமையான சொல் அத்துன்பத்தைப் போக்கும் என்றும் பழமொழி நானூற்றுப்பாடல்,
புன்சொல் லிடர்படுப்ப தல்லா லொருவனை
இன்சொல் லிடர்படுப்ப தில்”                                       பழமொழி நானூறு 277
என்று கூறுகிறது. வாழ்க்கை என்பது வாழ்வதற்கே எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன. அவ்வாழ்க்கையை இனிமையானதாக்க வேண்டுமானால், இனிமையாகப் பேசி, இனிமையாகப் பழகி, சுற்றத்தாரையும் மற்றவர்களையும் அரவணைத்துக் காக்க வேண்டும்
முடிவு

     இதுகாறும், திருமணங்கள் எவ்வாறு நடக்கின்றன. இல்லறம் நல்லறமாக அமைய வேண்டுமானால் கணவனும் மனைவியும் இல்லறத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். இல்லறவாழ்வு சிறக்க வேண்டுமானால் என்னென்ன கடமைகளைச் செய்ய வேண்டும் என்பனவற்றை இலக்கியங்கள் வழிக் கண்டோம்.

Popular Feed

Recent Story

Featured News