Saturday, June 13, 2015

மஞ்சள் காமாலை ஏன் ஏற்படுகிறது?

மஞ்சள் காமாலை ஏன் ஏற்படுகிறது?

          நம் உடலில் உள்ள மிகச்சிறந்த ஒரு உறுப்பான கல்லீரல் சுரக்கின்ற பித்தநீரின் அளவு இரத்தத்தில் அதிகமாகி பித்தப்பை பாதிக்கப்படுவதைத்தான் மஞ்சள்காமாலை என்று கூறுகிறோம். மஞ்சள் காமாலை நோயாளிக்கு தோல் மஞ்சளாகவும், கண்களின் வெண்படலத்தில் மஞ்சள் நிறம் படிந்தும் காணப்படும். மஞ்சள் காமாலையில் சில முக்கிய வகைகள் உண்டு.

          அப்ஸ்ட்ரக்டிவ் மஞ்சள்காமாலை (Obstructive jaundice): அப்ஸ்ட்ரக்டிவ் என்றால் அடைப்பு என்று பொருள். பொதுவாக பித்தநீர் கல்லீரலால் சுரக்கப்பட்டு பித்தநீர் குழாய் வழியாக பித்த நீர்ப்பைக்கு அனுப்பப்படுகிறது. பித்த நீர்ப்பை அதை சேகரித்து வைத்துக் கொண்டு உணவு செரித்தலுக்கு குறிப்பாக கொழுப்பு சத்துள்ள உணவு செரித்தலுக்கு தேவையான பித்த நீரை அனுப்பும் வேலையை செய்கிறது.

          இந்த அப்ஸ்ட்ரக்டிவ் மஞ்சள்காமாலை என்பது கல்லீரலால் சுரக்கப்பட்ட பித்தநீர் பித்த நீர்க்குழாயில் கொலஸ்ட்ரால், பித்தக் கல் போன்றவற்றால் ஏற்படும் அடைப்பின் காரணமாக பித்த நீர்ப் பையை அடையாமல் குடலுக்குச் சென்று விடுகிறது. இவ்வாறு அடைப்பின் காரணமாக ஏற்படும் காமாலைக்கு அப்ஸ்ட்ரக் டிவ் ஜான்டீஸ் என்று பெயர். இதில் சிறுநீர் கருப்பு நிறத்திலும் மலம் வெளுத்தும் காணப்படும்.

          ஹெப்பட்டோ செல்லுலார் ஜான்டீஸ் (Hepatocellular jaundice): கல்லீரல் செல்கள் சில நோய்களால் பாதிக்கப்படும் போது இது உண்டாகிறது. இவ்வாறு கல்லீரலானது நோயால் பாதிக்கப்படும்போது அது தன் வேலையை சரிவர செய்ய முடியாத நிலையில் குறிப்பாக தன் வேலையில் ஒன்றான பித்த நீரை, பித்தப்பைக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்படுவதால், கல்லீரலால் சுரக்கப்படும் அந்த பித்தநீர் அங்கேயே தங்கி, ரத்தத்தில் கலந்து விடுவதால் ஏற்படும் மஞ்சள் காமாலைக்குத்தான் ஹெப்பட்டோ செல்லுலார் ஜான்டீஸ் என்று பெயர். இவ்வகை நோயாளிகளுக்கு சிறுநீர் அடர்கருப்பாக வெளியேறும்.

          மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. ரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகரிப்பதால், தான் மஞ்சள் காமாலையானது ஏற்படுகிறது. மஞ்சள் காமாலையானது மூன்று வகையாக உள்ளன. அவை கல்லீரலுக்கு முன், கல்லீரல் மற்றும் கல்லீரலுக்குப் பின் என்பன. இதில் கல்லீரலுக்கு முன் காமாலையானது, ரத்த சிவப்பணுக்கள் அதிகமாக உடைவதால் ஏற்படும். கல்லீரல் மஞ்சள் காமாலையில் பிலிரூபினின் வெளியேற்றம் அதிகமாக இருப்பதால், நுரையீரல் செயல்பாட்டை குறைத்து, கல்லீரலில் உள்ள செல்களை அழிக்கும். கல்லீரலுக்குப் பின் காமாலையில், பித்த நாளத்தில் பித்த நீர் செல்வதில் ஏற்படும் தடையினால் உண்டாவது ஆகும்.

          பொதுவாக மஞ்சள் காமாலையை கண்கள் மற்றும் சிறுநீர் வெளியேற்றத்தின் போது மஞ்சள் நிறத்தில் இருப்பதை வைத்து தான் கண்டறிவோம். ஆனால் இது மட்டும் மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் இல்லை. நமக்கு தெரியாத பல அறிகுறிகள் உள்ளன. அத்தகையவற்றை தெரிந்து கொண்டால், முன்கூட்டியே மஞ்சள் காமாலையை தடுத்துவிடலாம். மஞ்சள் நிற சிறுநீர் உடல் வறட்சியினால் கூட ஏற்படும். ஆனால் மஞ்சள் காமாலை என்றால் நன்கு அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறும். மஞ்சள் நிறத்தில் சருமம் மற்றும் கண்கள் காணப்பட்டால், அதுவும் மஞ்சள் காமாலைக்கான அறிகுறியாகும். ஆனால் இதனை பலர் சரியாக கவனிக்கமாட்டார்கள்.

          ஏனென்றால் அனீமியா காரணமாகவும், சருமம் வெளிர் நிறத்தில் காணப்படும். ஆகவே கவனமாக இருக்கவும். வயிற்றின் வலது பக்கத்திற்கு சற்று கீழேயும் சில சமயங்களில் சற்று மேலேயும் கடுமையான வலி அடிக்கடி ஏற்படும். இத்தகைய வலி மஞ்சள் காமாலைக்கு மட்டும் ஏற்படாது, பித்தக்கற்கள் இருந்தாலும் ஏற்படும் என்பதால், அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மூட்டு வலி பல காரணங்களால் ஏற்படும். ஆகவே பலர் மஞ்சள் காமாலையின் போது ஏற்படும் மூட்டு வலியை சாதாரணம் என்று நினைத்து விட்டுவிடுவார்கள். ஒருவேளை மூட்டு வலியுடன், வேறு ஏதாவது மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

          மஞ்சள் காமாலையின் அறிகுறிகளுள் பசியின்மையும் ஒன்று. இது பலருக்கு இருக்கும் சாதாரண பிரச்னைகளில் ஒன்றாக இருப்பதால், பலர் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் இந்த அறிகுறியுடன், மஞ்சள் நிற சிறுநீர் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படுமாயின் அது மஞ்சள் காமாலை தான். வாந்தியும் பல காரணங்களால் ஏற்படும். ஆனால் தேவையில்லாமல் குமட்டல் அல்லது வாந்தி ஏற்பட்டால், அது ரத்தத்தில் பிலிரூபின் அளவு அதிகமாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News