Thursday, October 8, 2015

அகத்திக் கீரை

அகத்திக் கீரை
  • அகத்திக் கீரையின் தாயகம் மலேசியா. அகத்தில் உள்ள தீயைப் போக்குவதால் அகத்திக் கீரை என்று அழைக்கப் படுகிறது என்கிறது சித்த மருத்துவ நூல்கள். அகத்திக் கீரை மக்கள் உணவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
  • அகத்திக் கீரை மனிதர்களுக்கு மட்டுமல்ல. மாடுகளுக்கும், மண்ணுக்கும்கூட நன்மையைச் செய்கிறது. அகத்திக் கீரைச் செடிக்கு, காற்றில் உள்ள தழைச்சத்தை இழுத்து, மண்ணுக்கு கொடுக்கும் தன்மை உண்டு. இதனால், யூரியா... போன்ற தழைச்சத்து ரசாயன உரத்தை விலைக் கொடுத்து வாங்கும் வேலை மிச்சம். மாடுகளுக்கு அகத்திக் கீரையை கொடுத்து வந்தால், அந்த மாடும் ஆரோக்கியமாக இருக்கும்.
  • அது கறக்கும் பாலிலும் கூட அகத்திக் கீரையின் மருத்துவ தன்மை கலந்திருக்கும். இதனால்தான், ஆயுர்வேத மருந்துகளுக்கு, அகத்திக் கீரை கொடுத்து வளர்க்கப்படும் மாட்டின் பாலை பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அகத்திக் கீரை தனிப்பயிராக சாகுபடி செய்யப்படுவதில்லை.
  • வரப்பு ஓரங்களிலும், வெற்றிலை, மிளகாய்த் தோட்டங்களிலும் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுகின்றன. உணவைப் பொருத்தவரை பத்தியம் இருப்பவர்கள் உண்ணக்கூடாத கீரை என்று அகத்திக் கீரையை பாரம்பர்ய மருத்துவம் எச்சரிக்கை செய்கிறது. அதாவது, அகத்திக் கீரையில் இருக்கும் அதீதமான சத்துக்கள், நாம் ஏற்கனவே சாப்பிட்ட மருந்தின் வீரியத்தைக் குறைத்துவிடும்.
  • இதனால் தான், சித்த, ஆயுர்வேத மருந்துகளை உண்ணும்போது, அகத்திக் கீரை சாப்பிடக் கூடாது என்று கட்டுப்பாடு போட்டுள்ளார்கள். இந்தக் கீரையில் 63 சத்துக்கள் உள்ளன. சுண்ணாம்புச் சத்தை அதிகமாக கொண்டது. கண்பார்வை, நினைவாற்றலுக்கு அகத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. அகத்திக் கீரை கொஞ்சம் கசப்பாக இருக்கும். இதுதான், இதன் சிறப்புத் தன்மை. ஒரு வேளை கசப்புச் சுவை வேண்டாம் என்றால், புழுங்கலரிசியை வறுத்து பொடிசெய்து கலந்தால் கீரையின் கசப்புத் தன்மை விலகும்.
  • கீரை, பூ, பிஞ்சு ஆகியவை விரும்பி உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவத்திற்கு பயன்படுகின்றன. அகத்தி மர இலை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படுகின்றன. வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.
  • அகத்தி மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் (அகத்திப்பட்டைக் குடிநீர்) குடித்துவர, சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால் உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைச்சுரம் போன்றவை நீங்கும். சிகரெட் மற்றும் புகையிலை உபயோகிப்போர் நிகோடின் நச்சுவால் பாதிக்கப்பட்டால், அதை அகத்திக் கீரை நிவர்த்தி செய்யும். மாதத்துக்கு இருமுறை மட்டுமே உண்ண வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News