Friday, November 20, 2015

சாதிக்காய்

சாதிக்காய்
 அதிகக் காரமும் துவர்ப்பும்கொண்ட சாதிக்காய், நம்மவர்களை மட்டுமல்லாமல் உலகையே வசீகரித்த ஒரு மூலிகை. மலேசியாவில் பினாங்கு மற்றும் நமது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து உலகெங்கும் செல்வாக்கு செலுத்திவரும் சாதிக்காய் குறித்த வரலாற்றுச் செய்திகள் ஏராளம் உள்ளன. இதற்குக் கிடைத்த அதீத வரவேற்பால்,
அரபுநாட்டு மாலுமிகள் இதை எங்கிருந்து எடுத்து வருகிறார்கள் என்பதையே பல நூறு ஆண்டுகளாக பெரும் ரகசியமாக வைத்திருந்தனராம். சாதிக்காயின் கனி, ஊறுகாயாகப் பயன்படும். இதன் உள் இருக்கும் விதைதான் சாதிக்காய். கனிக்கும் விதைக்கும் இடையே விதையைச் சூழ்ந்து இருக்கும் மெல்லிய தோல் போன்ற பகுதிதான் சாதிபத்திரி. இதில், சாதிக்காய் எனும் விதையும் சாதிபத்திரி இதழும்தான் மணமும் மருத்துவக்குணமும் கொண்டவை. ‘தாதுநட்டம்’ எனும் விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைவு, வயிற்றுப்போக்கு, ‘சுவாசகாசம்’ எனும் ஆஸ்துமா எனப் பல நோய்களுக்கு, சித்த மருத்துவம் சாதிக்காயைப் பெரிதும் பரிந்துரைக்கிறது. சாதிக்காய் அதிகம் பயன்படுவது, ஆண்களுக்குக் காமப் பெருக்கத்துக்கும் குழந்தைகளுக்கு வரும் வயிற்றுப்போக்கை நீக்கவும்தான். சாதிக்காயில் அடிமைப்படுத்தும் போதைப்பொருள், அதன் சத்துக்களில் உள்ளதோ என்கிற சந்தேகம்கூட இடையில் வந்தது. ஆனால், பல ஆய்வுகள் செய்து, அது நரம்பு மண்டலத்தில் வேலை செய்தாலும், போதையூட்டும் வஸ்து அல்ல எனக் கண்டறிந்தனர். ‘நரம்பு மண்டலத்தில் நற்பணிஆற்றுவதால், மனநோய்க்கும், மனதை உற்சாகப்படுத்தவும், நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும், சாதிக்காயைப் பயன்படுத்தலாம்’ என்கிறது இன்றைய அறிவியல். ‘சாதிக்காய் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுப்பதிலும்கூட செயலாற்றுகிறது’ என்கிறது தாய்லாந்தில் நடைபெற்ற ஆய்வு முடிவுகள். சாதிக்காய், சுக்குத் தூள் சம அளவு, சீரகம் அதற்கு இரண்டு பங்கு என எடுத்துப் பொடிசெய்து, உணவுக்கு முன் மூன்று சிட்டிகை அளவு சாப்பிட, வயிரற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் நீங்கும். அத்தோடு வைரஸ், பாக்டீரியா காரணமாக வரும் அத்தனை வயிற்றுப் போக்குகளுக்கும் சாதிக்காய்த் தூள் சிறந்த மருந்து. இனிப்புச் சுவையுடன்கூடிய தனித்துவ மணம் சாதிக்காயில் இருப்பதற்கு, அதன் மைரிஸ்டிசின் (Myristicin) எனும் சத்தே காரணம். தோல் சுருக்கம் ஏற்படாமல் இளமையான தோலை முதுமையிலும் பெற்றிருக்க, சாதிக்காயின் மைரிஸ்டிசின் சத்தினை ஆன்டி-ஏஜிங் கிரீம்களில் சேர்க்கின்றனர். சாதிக்காய்த் தூளை ஒரு சிட்டிகை பசும்பாலில் கலந்து இரவில் படுக்கும்போது சாப்பிடுவது, மனஅழுத்தத்தைப் போக்கி, நிறைந்த நரம்புவன்மையையும், சீரான தூக்கத்தையும் தரும். இன்றைய நவீன யுகத்தில் குழந்தைப்பேறு இன்மை எக்குத்தப்பாகப் பெருகிவருகின்றது. குறிப்பாக, ஆண்களின் சராசரி விந்து எண்ணிக்கை குறைந்துவருகின்றது. கூடவே, விந்து அணுக்களின் இயக்கமும் குறைகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, உடலுறவின் மீதான நாட்டமும் மன அழுத்தத்தாலும் மோசமான உணவுப் பழக்கங்களாலும் பெரிதும் குறையத் தொடங்கி உள்ளது. இந்த எல்லா பிரச்னைகளுக்கும் சாதிக்காயும் சாதிபத்திரியும் மிகச் சிறந்த மருந்துகள். சித்த, ஆயுர்வேத மருந்துகளில், குழந்தைப்பேறு இல்லாமல் வரும் தம்பதிகளுக்குக் கொடுக்கும் மருந்துகளில் பெரும்பாலும் சாதிக்காயும் சாதிபத்திரியும் அங்கம் வகிக்கும். ‘காமத்தைத் தூண்டும் மணத்தைக்கொண்டது’ என்று மட்டுமே நெடுங்காலம் இதனை நம்பிவந்த ஐரோப்பியருக்கு, இது உள்ளேயும் வெளியேயும் வேலை செய்யும் அற்புதமான மருந்து என்பது சமீபத்தில்தான் தெரியவந்தது. யுனானி, ஆயுர்வேதம், சித்தா போன்றவை சொன்ன இதன் ஆண்மைப் பெருக்கி விஷயம் வேடிக்கையானது அல்ல, உடலுறவில் வேட்கையை அதிகரிக்கச் செய்யும் தன்மை இதற்கு உண்டு என உணர்ந்துள்ளனர். உடலுறவில் நாட்டம் ஏற்படுத்துவதொடு விந்தணுக்களின் எண்ணிக்கையைப் பெருக்கி ‘ஒலிகோஸ்பெர்மியா’ (Oligospermia) எனப்படும் விந்து திரவத்தின் செயல்திறன், விந்தணு குறைவால் வரும் குழந்தைப்பேறு இன்மை குணமாக உதவிடும் என்கின்றன ஆய்வுகள். சாதிக்காய் நல்லன பலவற்றைச் சாதிக்கும் காய்!

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News