Monday, July 18, 2016

மயக்க அணி

27. மயக்க அணி
மயக்க அணியும் திரிபு அதிசயமும் ஒன்றாகும். திரிபு என்பதற்கு ஒன்றை வேறொன்றாகக் கருதி மயங்கல் என்பது பொருள். ஒன்றை வேறொன்றாகக் கருதி மயங்கும்வழி அதிசயம் தோன்றக் கூறுதல் திரிபு அதிசயம் எனப்படும். இதனை மயக்க அணி என்றும் கூறுவர்.


(.கா.)
                திங்கள் சொரிநிலவு சேர்வெள்ளி வள்ளத்துப்
                பைங்கிள்ளை பால் என்று வாய்மடுக்கும்; - அங்கு அயலே,
                காந்தர் முயக்கு ஒழிந்தார், கைவறிதே நீட்டுவரால்
                ஏந்திழையார் பூந்துகிலாம் என்று
(வள்ளம் - கிண்ணம்; காந்தர் - காதலர், தலைவர்; முயக்கு - புணர்ச்சி; வறிதே = வீணாக; துகில் - ஆடை.)

பாடல்பொருள்:
நிலவு சொரிந்த வெள்ளிய வெண்ணிறக் கதிர்கள், நிலா முற்றத்தில் இருந்த வெள்ளிக் கிண்ணத்தில் பாய்ந்தன பசுங்கிளிகள், அக்கதிர்களின் ஒளியைப் பால் என்று மயங்கி, அதனை வாய்வைத்துப் பருக முயன்றன. அதுமட்டுமன்றி, அங்கு ஒரு புறத்தில் தம் காதலரைப் புணர்ந்து நீங்கிய மகளிர், நிலவுடைய வெள்ளிய நிலாக் கதிர்களைத் தமது வெண்துகிலாகக் கருதி, அதனைப் பற்றுவதற்காகக் கைகளை வீணாக நீட்டுவார்கள்.

அணிப் பொருத்தம்:

இப்பாடலில், வெள்ளிக் கிண்ணத்தில் பாய்ந்த நிலவின் ஒளியைப் பசுங்கிளிகள் பால் என்றும், மகளிர் தம்முடைய துகில் என்றும் திரித்து மயங்கியதை அதிசயித்துக் கூறியதனால் இது திரிபு அதிசயமாயிற்று

Popular Feed

Recent Story

Featured News