Sunday, January 22, 2017

தமிழனும் மாடும்

தமிழனும் மாடும்

மாடு என்பது உலக அரங்கில் ஒரு பாலூட்டியாகவும் பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஒரு விலங்கினம் என்றே எண்ணப்படுகிறது. இந்தியவைப் பொருத்தவரை அது ஒரு தெய்வமாக மதிக்கப்படுகிறது. புராணங்களில் பசு காமதேனுவாகவும் காளை சிவனின் வாகனமாகவும் போற்றப்படுகின்றன. ஆனால் தமிழ் நாட்டைப் பொருத்தமட்டில் மாடுகள் குடும்ப உறுப்பினராகவே விளங்குகிறது.

மாடு
‘மாடு’ என்ற சொல் தமிழில் பசு, எருதைக்(காளை) குறிக்கும் அஃறிணைப் பொதுப்பெயராக விளங்குகிறது. இச்சொல் இலக்கியங்களில் ‘செல்வம்’ என்ற பொருளில் ஆளப்பெற்றுள்ளது. அதாவது மாடு என்பது ஒரு குடிமகனின் செல்வமாகக் கருதப்படுகிறது என்று அர்த்தம். இதற்கு,
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்ற யவை    குறள் -
என்ற குறட்பாவைச் சான்றாகக் கொள்ளலாம். இக்கருத்தை உள்வாங்கிய கண்ணதாசன் ‘மாட்டுக்கார வேலன்’ என்ற படத்தில் ‘சத்தியம் நீயே தருமத் தாயே’ எனத் தொடங்கும் பாடலில்,
தன்னையே கொடுப்பதில் தாய்க்கு ஈடு
சம்சாரி வாழ்விற்கு ஒரு பசுமாடு’
என்று கூறுகிறார். இதன் பொருள் என்னவென்றால், கணவன் மனைவி என்று வாழும் ஒருவனுக்கு அவன் குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு பசுமாடு போதும் என்பதாகும்.

விவசாயியின் நண்பன் ‘மாடு’
ஒரு பணக்காரன் இன்னொரு பணக்காரனை நண்பனாகக் கொள்கிறான். ஒரு மாணவன் இன்னொரு மாணவனை நண்பனாகக் கொள்கிறான். ஆனால் ஒரு விவசாயி தன் மாடுகளைத்தான் நண்பகாகக் கருதுகிறான். உழைப்பு என்ற நிலையிலிருந்து உண்பது, ஓய்வு என்ற நிலையில் கூட ஒன்றாகவே அவர்களின் செயல்பாடுகள் இருக்கும். தனக்கு உணவு இல்லாவிட்டாலும் தான் வளர்க்கும் மாட்டிற்கு உணவளித்து மகிழ்வான்.

குடும்ப உறுப்பினர் ‘மாடு

நண்பனாக மட்டுமல்லாமல் தன் குடும்ப உறுப்பினர்களோடு மாடுகளையும் சேர்த்துக் கூறும் வழக்கம் தமிழர்களிடையே உண்டு. இதனை
“ஆடுமாடு மேல உள்ள பாசம்
ரேஷன்காடில் சேர்க்கக் சொல்லி பேசும்“
என்ற திரையிசைப் பாடல் பறைசாற்றும். இதுமட்டுமல்லாமல்,
      “தாத்தா பாட்டி அம்மா அப்பா
       நாங்க மாடுங்க ஒரு பெரிய குடும்பம்”
என்ற ஒரு விளம்பரத்தில் கூட இதனைக் காணலாம். நடைமுறையை விட்டுவிட்டு மேற்கண்ட உதாரணங்களை ஏன் கூறுகிறேன் என்றால் இவை வெகுஜென மக்களிடம் வெகுவாகச் சென்று சேர்ந்துள்ளது என்பதற்காகவே.

உழைப்பாளிகள்
மாடும் தமிழனும் ஓய்வறியாமல் உழைக்கக் கூடியவர்கள் என்பதனைப் பின்வரும் பாடல் சுட்டிக்காட்டுகிறது.
மாடாய் உழைத்தவன் வீட்டினிலே
பசிவந்திடக் காரணம் என்ன மச்சான்
இப்பாடல், ஒரு குடும்பப்பெண் தன் கணவனைப் பார்த்துக் கேட்பதாகப் பட்டுக்கோட்டை தன்  பாட்டில் பாடியிருப்பான். இப்பாடல் வரிகள் மாட்டிற்கு இணையாக விவசாயும் விவசாயிக்கு இணையாக மாடும் உழைத்தனர் என்றும், அப்படி உழைத்தவனுக்கு பசி வரக்காரணம் என்ன என்று புரியாமல் வறுந்துவதாகவும் உணர்த்துகின்றன.
மாடுகளே உங்கள்  பாடுகள் தேவலே
வைக்கோல் வந்திடும் வீட்டீற்கு
என்ற மற்றொரு பாடலில், தான் எவ்வளவு வறுமையில் வாடினாலும் தான் வளர்த்த மாட்டைப் பட்டினி போடாமல் வைக்கோலை சேமித்து வைத்து மாடுகளைக் காப்பாற்றுவான் எனத் தன் பாட்டில் குறிப்பிடுகிறான் பட்டுக்கோட்டை.

மாட்டிற்கு விழாக் கண்டவன் தமிழன்

மனிதற்களுக்கு மனிதர்களே விழாக்கள் கொண்டாடாத நிலையில், தமிழன் தன்னோடு உழைத்த மாடுகளுக்கு விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்தான். வெளிநாட்டு அறிஞர்கள் ஒருவரை ஒருவர் கண்டபோது கைக்குலுக்கி, கட்டியணைத்து மகிழ்ந்து தன் உறவை மெய்ப்பிப்பதுபோல, தன் மாடுகளுக்கு அலங்காரங்கள் செய்து கட்டித் தழுவி தன் உறவைப் பறைச்சான்றினான். இரண்டு நண்பர்கள் விளையாடி தன்வீரத்தை நிலைநாட்டுவதுபோல காளையும் தமிழனும் ஏறுதழுவுதல் என்ற விளையாட்டு விளையாடி சிலநேரத்தில் காளையும் சிலநேரத்தில் உழுவனும் வெற்றி கொண்டு மகிழ்ந்தனர்.

உயிர் இரக்கம் கொண்டவன் தமிழன்

தமிழன் உயிர் இரக்கம் கொண்டவன் என்பதற்கு என்னற்ற சான்றுகள் உள்ளன. ஒரு புறாவின் துன்பத்தைப் போக்க தன்னையே அற்பணித்தான் சிபிச்சக்கரவர்த்தி. ஒரு பசுவின் கண்ணீரைத் துடைக்க தன் ஒரே மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்றான் மனுநீதி சோழன். தன் ஒரு சொல்லால் குற்றமற்ற கோவலன் உயிர் போனதே என்று உயிர்நீத்தான் பாண்டியன். மயிலுக்குப் போர்வை தந்தான் பேகன். முல்லைக்குத் தேர் தந்தான் பாரி. இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம்.
      வள்ளலார் கூட, ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றுதான் கூறினார். ஆனால் எங்கள் விவசாயிகள் வாடிய(கருகிய) கண்டு உயிர் விட்டவர்கள். இப்படிப்பட்ட தமிழர்களா மாடுகளுக்கு துன்பம் விளைவிப்பார்கள்.

ஏறுதழுவலை தேசிய விளையாட்டாக்குவோம்

தமிழன் விளையாடிய கிட்டிப்புல் இன்று உலகம் போற்றும் கிரிக்கட் என விளையாடப்படுகிறது. தமிழன் விளையாடிய கோலிகுண்டு இன்று ஆக்கி என்றும் கால்பந்து என்றும், கோல்ப் விளையாட்டு என்றும் உலகம் போற்றுகிறது. எங்கள் காளை விளையாட்டை மட்டும் தடை செய்கிறீர்கள். எங்கள்  ஏழுதழுவலை தேசிய விளையாட்டாக மாற்றுவோம்.

பசு, காளை எங்கள் சொத்து இதனைச் சேதப்படுத்துவது நாங்கள் அல்ல. இவை மாண்டால் மாண்டுபோகும் மனிதர்கள் நாங்கள் எங்களை வாழவிடுங்கள் உழவர்களாகிய நாங்களும் எங்கள் உறுப்பினரான மாடுகளும் வாழ்கிறோம்.

கட்டுரை ஆக்கம்:
முனைவர் க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil., Phd.,
8 கிழக்குத் தெரு, இரட்டணை அஞ்சல்
திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம் – 604306
www.thamizhkadal.com


Popular Feed

Recent Story

Featured News