Friday, March 31, 2017

NEET' தேர்வு எழுதுபவரா நீங்கள்? : 'தினமலர்' வழங்கும் மாதிரி வினா- - விடை


நீட்' - 'நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட்' என்பது, 2013ல் மத்திய அரசு அறிமுகம் செய்த, மருத்துவப் படிப்புக்கான, தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு.


முக்கியத்துவம் :
நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு, 'நீட் யு.ஜி.,' - 2017 நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ., இந்த தேர்வை நடத்துகிறது. தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், இடம் ஒதுக்கப்படுகிறது. மாநிலங்களில் இருந்து, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.
வயது, கல்வி தகுதி : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், 17 முதல், 25 வயதிற்குள் இருத்தல் வேண்டும். பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை முதன்மையாக கொண்டு, குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண்களுடன், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான வேறு கல்வி தகுதி வேண்டும். மேலும், பிளஸ் 2 ஆங்கில பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள், 40 சதவீத மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள், 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதும்.

தேர்வு முறை : நடப்பு, 2017ம் ஆண்டுக்கான நீட் தேர்வு, மே, 7ல் நாடு முழுவதும், ஒரே கட்டமாக நடக்கிறது. அடிப்படை அறிவியல் அறிவை பரிசோதிக்கும் வகையிலான, 180 கேள்விகள் இடம்பெறும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து, தலா, 45 கேள்விகள் என மொத்தம், 180 கேள்விகள் இடம் பெறும். காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். ஒவ்வொரு கேள்விக்கும், நான்கு மதிப்பெண்கள் என, மொத்தம், 720 மதிப்பெண். தவறான ஒவ்வொரு விடைக்கும், தலா, ஒரு மதிப்பெண் வீதம் பிடித்தம் செய்யப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வு ஹிந்தி, ஆங்கிலம், அசாமி, தமிழ், வங்காளம், குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, ஒடிசா, கன்னடம் உட்பட, 10 மொழிகளில் நடக்கிறது. இந்த தேர்வுக்கான கேள்விகள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பின் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., - என்.சி.ஆர்.டி., - சி.ஓ.பி.எஸ்.இ., தரத்திலான பாடத் திட்டங்களில் இருந்து கேட்கப்படும். தேர்வுக்கு கூடுதல் பயிற்சி பெறுவது, வாய்ப்புகளை பிரகாசமாக்கும்.
சேர்க்கை விபரம் : தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மருத்துவக் கல்லுாரியை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும். அதாவது, 'ரேங்க்' பட்டியலில், மாணவர்களின் முன்னிலையை பொறுத்தே, கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.
தேர்வு மையங்கள் : நடப்பு, 2017ம் ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு, நாடு முழுவதும், 11 லட்சத்து, 35 ஆயிரத்து, 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது, 2016 உடன் ஒப்பிடும் போது, 41.2 சதவீதம் அதிகம்.

இந்தியா முழுவதும், 103 நகரங்களில் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, நாமக்கல், வேலுார் ஆகிய, எட்டு இடங்களில் தேர்வு நடக்கிறது. 'ஏப்., 15ல் ஹால் டிக்கெட் வெளியிடப்படும்; தேர்வு முடிவு ஜூன் 8ல் அறிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த முழுமையான விபரங்களை தெரிந்து கொள்வதற்கு http://cbseneet.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மாணவர்கள் பயன்பெறும் வகையில், நீட் தேர்வுக்கு ஆலோசனை நிகழ்ச்சிகளை, 'தினமலர்' நாளிதழ் ஏற்கனவே நடத்தியது. நாளை முதல் மாதிரி வினா- விடை வெளியிடுகிறது.

Popular Feed

Recent Story

Featured News