Saturday, May 13, 2017

பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் உதவுமா : மருத்துவம் விரும்பும் மாணவர்கள் தவிப்பு

தமிழக சமச்சீர் கல்வியில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. இதில், ஏராளமான மாணவர்கள், 1,200க்கு, 1,190 மதிப்பெண்ணும், பிறர், 1,150 மதிப்பெண்ணுக்கு அதிகமாகவும் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால், தமிழகத்தில், பல ஆண்டுகளாக உள்ள, இந்த பழமையான மனப்பாட கல்வி மற்றும் தேர்வு முறையில் வழங்கப்படும் மதிப்பெண்கள், அகில இந்திய அளவில் மருத்துவ கல்வியில் சேர உதவுமா என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.


இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது: பிளஸ் 2வில், அறிவியல் பிரிவில் படிக்கும், நான்கு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு, மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளே கனவு. இன்ஜி., கல்லுாரிகள் அதிகமாகி விட்டதால், பி.இ., சேர அதிக மதிப்பெண் தேவையில்லை; மருத்துவ படிப்பில் சேர, அதிக மதிப்பெண் பெற வேண்டும். இந்த ஆண்டு முதல், 'நீட்' தேர்வு வந்து விட்டது. தமிழக மாணவர்கள், எந்தவித வழிகாட்டுதலும், உறுதியான தகவல்களும் இன்றி, 'நீட்' தேர்வை எழுதி முடித்து விட்டனர். தமிழக கற்பித்தல் முறையால், இந்த தேர்வை எழுதுவதில், மாணவர்களுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், நாளை, பிளஸ் 2 தேர்வு முடிவு வருகிறது. இதில், மாணவர்கள் மனப்பாடம் செய்ததை, அப்படியே தேர்வுத்தாளில் எழுதியதற்கு, மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இந்த மதிப்பெண்களை, மருத்துவ படிப்பு சேர்க்கையில், தமிழக அரசு பயன்படுத்துமா, 'நீட்' தேர்வு மதிப்பெண்ணை மட்டும் பயன்படுத்துமா என்ற, குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறையோ, மருத்துவ கல்வி இயக்ககமோ எந்த தகவலும் வழங்காமல் உள்ளன. இதற்கான விதிமுறைகள் குறித்து, தெளிவான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Popular Feed

Recent Story

Featured News