Tuesday, May 16, 2017

PUBLIC EXAM FOR +1 : ANNA UNIV RECOMMENDS TO TN GOVT

பிளஸ் 1ல் பொதுத்தேர்வு கட்டாயம் : அண்ணா பல்கலை அரசுக்கு பரிந்துரை


'உயர் கல்வியின் தரத்தை முன்னேற்ற, பிளஸ் 1 வகுப்பில், பொதுத் தேர்வை கட்டாயமாக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறைக்கு, அண்ணா பல்கலை பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில், 2006ல் அமலுக்கு வந்த, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை, 2011ல், கட்டாயம் மாற்றியிருக்க வேண்டும்; தமிழக அரசு மாற்றவில்லை. அதேநேரம், பொதுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெறும், தனியார் பள்ளி மாணவர்கள், பள்ளிகளின் விபரங்களை வெளியிடுவதில், தேர்வுத்துறை அதிக அக்கறை காட்டியது.

எனவே, பதக்கம், பரிசு பெற விரும்பி, பெரும்பாலான தனியார் பள்ளிகள், பிளஸ் 1லும், பிளஸ் 2 பாடத்தை நடத்தின. இரண்டு ஆண்டுகளாக அதே பாடத்தை நடத்தியதால், பிளஸ் 2 தேர்வில், அப்பள்ளிகளின் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் படித்த பள்ளிகளில் சேர, கடும் போட்டி ஏற்பட்டு, நன்கொடை கட்டணம், பல மடங்கு உயர்ந்து விட்டது. இப்படி அதிக மதிப் பெண் பெற்று, இன்ஜி., மருத்துவம், அறிவியல் போன்ற உயர் கல்வியில் சேர்ந்த மாணவர்கள், முதல், 'செமஸ்டர்' தேர்விலேயே, பல பாடங்களில் தோல்வியுற்றனர். 

அதில், பிளஸ் 2வில்,200க்கு,200 'கட் ஆப்' எடுத்தவர்களும் அதிகம் இருந்தனர். அதனால் அதிர்ச்சி அடைந்த, அண்ணா பல்கலை பேராசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்தில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மாதிரி தேர்வு வைத்தனர். அதில், பிளஸ் 1 அடிப்படை பாடங்களுக்கே, பதில் அளிக்க முடியாமல் மாணவர்கள் திணறினர். விசாரணையில், பெரும்பாலான மாணவர்கள், தங்கள் பள்ளிகளில், பிளஸ் 1 பாடம் நடத்தப்படவில்லை என, வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்த மோசமான நிலை குறித்து, அண்ணா பல்கலை பேராசிரியர்கள், பல்கலையின் கல்வி கவுன்சில் மற்றும் துறை ரீதியிலான பேராசிரியர்கள் இணைந்து, ஆலோசனை நடத்தி உள்ளனர். இதன் முடிவில், உயர் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்றால், பிளஸ் 1 வகுப்பில் கட்டாயம் பொதுத் தேர்வு வைத்து, மாணவர்களின் தேர்ச்சியை முடிவு செய்ய வேண்டும் என, தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை, அண்ணா பல்கலை, பள்ளிக் கல்வித் துறைக்கு, பரிந்துரையாக அனுப்பி உள்ளது. இதையடுத்து, பிளஸ் 1ல் பொதுத் தேர்வை கட்டாயம் ஆக்கும் முன்னேற்பாடுகளை, பள்ளிக் கல்வித் துறை துவக்கி உள்ளது.

Popular Feed

Recent Story

Featured News