BE படிப்புகளுக்கு Entrance Test: 2019 - 20ம் கல்வியாண்டில் அறிமுகம்! - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 20, 2017

BE படிப்புகளுக்கு Entrance Test: 2019 - 20ம் கல்வியாண்டில் அறிமுகம்!

 ''இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கும், 2019 - 20ம் கல்வியாண்டு முதல், பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்,'' என, அகில இந்திய தொழிற்நுட்பக் கல்வி கவுன்சில், தலைவர் அனில் தாத்தாத்ரேய சஹாஸ்ரபுதே தெரிவித்தார்.


மருத்துவப் படிப்புகளுக்கு, 'நீட்' எனும், தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதே போல், இன்ஜி., படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்த, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
கோவையில், நேற்று, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர் அனில் தாத்தாத்ரேய சஹாஸ்ரபுதே, நிருபர்களிடம் கூறியதாவது:
மருத்துவப் படிப்புகளுக்கு, நுழைவுத் தேர்வு நடப்பது போல, இன்ஜி., படிப்புகளுக்கும், பொது நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிட்டு உள்ளோம். இது, 2019 - 20ம் கல்வியாண்டு முதல், அறிமுகம் செய்யப்படும்.
தமிழகத்தில், தற்போது நடைமுறையில் உள்ள கவுன்சிலிங் விதிகளுக்கு, சிக்கல் ஏற்படாத வண்ணம், இட ஒதுக்கீட்டை பின்பற்ற, மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும்.
நுழைவுத் தேர்வு எழுதுவதன் மூலம், தமிழக மாணவர்களுக்கு, வேறு மாநிலங்களில் உள்ள, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொடர்ச்சியாக, ஐந்து ஆண்டுகள், 30 சதவீதத்துக்கும் கீழ், மாணவர் சேர்க்கை நடத்திய, இன்ஜி., கல்லுாரிகள், அடுத்த கல்வியாண்டில், மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
புகாருக்குள்ளாகும் கல்லுாரிகள் மட்டுமல்லாமல், 'ரேண்டம்' முறையில், ஐந்து சதவீத கல்லுாரிகள் தேர்வு செய்யப்பட்டு, நடப்பாண்டில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
பருவத் தேர்வு வினாத்தாள் வடிவமைக்கும் முறையிலும், மாற்றங்கள் கொண்டு வரப்படும். அனைத்து பகுதிகளையும் முழுமையாக புரிந்து படித்தால் மட்டுமே, விடையளிக்கும் வகையில் வினாக்கள் இடம் பெறும். இதன் மூலம், பாடத்திட்டம் சார்ந்த புரிதல், மாணவர்களுக்கு ஏற்படும்.
இது தவிர, உயர்கல்வியில் சேரும், கிராமப்புற மாணவர்கள் மத்தியில் உள்ள, பயத்தை போக்கும் வகையில், ஊக்குவிப்பு திட்டம், ஜூலை இறுதியில், அனைத்து கல்லுாரிகளிலும் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Post Top Ad