Monday, August 14, 2017

பொறியியல் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு!

பொறியியல் கலந்தாய்வில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ள நிலையில் இரண்டாம்கட்ட கலந்தாய்வு
ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி தொடங்கியது. பொறியியல் பல்கலைக்கழகங்களில் மொத்தம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் மட்டுமே அழைக்கப்பட்டனர். கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருவதால் இந்த ஆண்டும் பொறியியல் படிப்பை மிகக் குறைவானவர்களே தேர்ந்தெடுத்தனர். கலந்தாய்வுக்குக் கணிசமான மாணவர்கள் வரவில்லை. ஆகஸ்ட் 11ஆம் தேதி கலந்தாய்வு நிறைவுபெற்ற நிலையில் 89,101 இடங்கள் வரை காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இரண்டாம் கட்டக் கலந்தாய்வை நடந்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி முடிகிறது. முந்தைய கலந்தாய்வுக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் இந்தக் கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி நேரிடையாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும்.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கணேசன் கூறியதாவது, “புதிதாகப் பதிவு செய்யும் மாணவர்களின் ரேங்கிங்படி அவர்களுக்குக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் . 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்களும், முந்தைய கலந்தாய்வுகளுக்கு விண்ணப்பிக்காதவர்களும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். முந்தைய கலந்தாய்வில் பெரும்பாலான கல்லூரிகள் அதிக அளவிலான இடங்களைப் பொதுப் பட்டியலில் சேர்த்துவிட்டன. அதனால்தான் அதிக இடங்கள் காலியாக உள்ளன. இந்த முறை எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்தக் கலந்தாய்வு மூலம் 3,000 முதல் 4,000 இடங்கள் வரை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular Feed

Recent Story

Featured News