Tuesday, August 1, 2017

கேட்டல் திறன்

கேட்டல் திறன்
 
கேட்டல் திறனை 1. செய்திகளைக் கேட்டல், 2. கட்டளைகளைக் கேட்டறிதல், 3. உரையாடலின் முக்கியக் கருத்தறிதல், 4. கதையில் வரும் முக்கிய நிகழ்ச்சியறிதல், 5. எளிய கதைகளைக் கேட்டு மகிழ்தல், 6. ஒலிநயம் மிக்க பாடல்களைக் கேட்டு மகிழ்தல், 7. இரண்டு மூன்று தொடர் செய்திகளைக் கேட்டறிதல், 8. ஒரு பேச்சைக் கேட்டு அதன் முக்கியக் கருத்து அறிதல், 9. கவனச் சிதைவின்றி உரையாடலைக் கேட்டல், சிறு நாடகங்களைக் கேட்டு மகிழ்தல், 11. உரையாடலைக் கேட்கும் பொழுது உணர்ச்சிகளையும் செய்திகளையும் கேட்டறிதல்,  12.  பள்ளி நாடகங்களைப் பார்த்துச் செய்திகள் உணர்ச்சிகள் ஆகியவற்றின் தொடர்பறிதல்,   13.  உரையாடலைக் கேட்டு உட்கருத்து அறிதல், 14. கதையைக் கேட்டு உட்கருத்து அறிதல், 15. சுவை மிக்க கதைகள், நாடகங்களைக் கேட்டு மகிழ்தல் எனும் பதினைந்து வகைகளில் பகுக்கலாம்.  இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமாகப் பின்வரும் பகுதிகளில் அறிந்துகொள்ளுங்கள்.
 

5.1.1 செய்திகளைக் கேட்டல்
 
மாணவர்கள்,  நன்கு அறிந்த பொருள்களைப் பற்றிய செய்திகளையே முதலில் அவர்களுக்குக் கூறவேண்டும். முழுமையும் அறியாத, அவர்கள் பார்க்காத ஒரு பொருளைப் பற்றிக் கூறினால் அவர்கள் கேட்டுப் பொருள் உணர்ந்து கொள்ளுதல் இயலாது.
 
குழந்தைகளின் வீடு, ஊர், பள்ளிக்கூடம், கோவில், ஊரில் உள்ள ஆறு, மலை, குளம், வயல்வெளி, விளைபொருள்கள்,   ஆடு,   மாடு,   கடைத்தெரு,   திருவிழா,   வீட்டில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவை பற்றி ஆசிரியர் சுவையாகச் சிறுசிறு தொடர்களில் பேசுதல் வேண்டும். தோட்டம், மலை, ஆறு, பழங்கள், பறவைகள், விலங்குகள் முதலியவற்றின் பெயர்களைக் கொண்டு, மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.  முதலில் பொதுவாகக் கூறத் தொடங்கி மேல் வகுப்புகளுக்குச் செல்லச்செல்ல அவற்றைப் பற்றிய செய்திகளை மிகுதிப்படுத்தலாம்.
 
ஒலிகளைக் கேட்டறிதலில் பயிற்சியளிக்க ஆசிரியர் படங்களைப் பயன்படுத்தலாம்.  ல/ள/ழ எழுத்துகள் அமைந்த சொற்களுக்குப் படங்கள் தயாரித்து,  ஆசிரியர் சொல்லச்செய்யும்பொழுது மாணவர்களைப் படத்தை எடுத்துக்காட்டச் செய்யலாம். மலை/மழை தவலை/தவளை, பல்லி/பள்ளி போன்றவற்றிற்குப் படங்கள் தயாரித்துப் பயன்படுத்தலாம்.  இதன் மூலம்,  ல/ள/ழ ஒலி அறிதலுடன் பொருள் அறிகிறார்களா என்பதையும் அறியலாம்.
 
குழந்தைகளை வரிசையாகவோ, வட்டமாகவோ உட்கார வைக்க வேண்டும். ஒருவர் மெதுவாகப் பேசுவது அடுத்தவருக்குக் கேட்காதபடி சற்றுத் தூரத்தில் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.  ஒரு குழந்தையின் காதில் மெதுவாக ஒரு செய்தியைக் கூறி அக்குழந்தையை அடுத்த குழந்தையிடம் மெதுவாகக் கூறச் செய்ய வேண்டும். இப்படி வரிசையாகச் சொல்லிச் செய்ய வேண்டும். இறுதியில் உள்ள குழந்தையிடம் செய்தியைக் கேட்க வேண்டும்.  இதன் மூலம் கேட்டல் திறனுக்குப் பயிற்சி கிடைப்பதுடன் கேட்டதைச் சொல்லும் பயிற்சியும் கிடைக்கும்.
 
வாய்ப்பு இருக்குமாயின் நான்கு,  ஐந்தாம் வகுப்புகளில் ஆசிரியர் செய்திகளைக் கூறுவதற்குப் பதிலாக ஒலிப்பதிவு நாடாக் கருவிகளைப் பயன்படுத்திச் செய்திகளைக் கேட்கச் செய்யலாம்.  எதிரே ஒருவர் பேசுவதைக் கேட்பதைவிட இது சற்று சிரமமானது என்பதனை ஆசிரியர் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
 
5.1.2 கட்டளைகளைக் கேட்டறிதல்
 
எழுந்திரு, உட்கார், குதி, ஓடு, மெதுவாக நட என்பன போன்ற எளிய கட்டளைகளை முதலில் கொடுக்கலாம்.
 
‘வலப் பக்கம் திரும்பி மூன்று காலடி சென்று, இடப்பக்கம் திரும்பி நில்’.
 
‘மேஜை மீது உள்ள அலமாரியில் இரண்டாவது தட்டிலிருந்து சிவப்புப் புத்தகம் எடுத்து வா’
 
என்பன போன்ற சற்று எண்ணிப் பார்த்துச் செய்யவேண்டிய கட்டளைகளை அடுத்து கொடுத்துப் பயிற்சி அளிக்கலாம். இப்படியே வகுப்பு நிலைக்கு ஏற்றவகையில் கேட்டு, எண்ணிப்பார்த்துச் செய்யவேண்டிய கட்டளைகளைக் கொடுத்துக் கேட்டல் பயிற்சியளிக்க வேண்டும்.
 
5.1.3 உரையாடலின் முக்கியக் கருத்தறிதல்
 
எதிரே பேசுபவர் ஒருவரைக் கேட்பதை விட இருவர் பங்கு கொள்ளும் உரையாடலைக் கேட்பதற்கு அதிகக் கவனம் தேவை. அதிலும், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும்.
 
பெரியவர் இருவரை உரையாடச் செய்து மாணவர்களைக் கேட்கச் செய்யலாம். ஒருவர் சந்தைக்குக் காய்கறி வாங்கப் போனவர்; மற்றவர் கடையில் பழம் வாங்கப் போனவர்; இருவரும் உரையாட மாணவர் அதனைக் கேட்பர். குறிப்பிட்ட ஒருவர் என்ன வாங்கப் போனார்? என்ன காய்கள் வாங்கினார்? என்ன பழங்கள் வாங்கினார்? ஏன் சந்தைக்குப் போனார்? ஏன் கடைக்குப் போனார்? என்பன போன்ற வினாக்களுக்கு விடையளிக்கச் செய்து அவர்களது கேட்டல் திறனைச் சோதித்து அறியலாம்.
 
மேல்வகுப்புகளுக்குச் செல்லச்செல்ல உரையாடல் தலைப்பைச் செய்திகள் நிறைந்ததாக அமைக்கலாம்.    வினாக்களையும் உயர்நிலைப் படுத்தலாம்.    உரையாடுபவர் வெறுக்கிறாரா? விரும்புகிறாரா? அன்பாக இருக்கிறாரா? கோபமாய் இருக்கிறாரா? என்பன போன்ற உணர்ச்சி நிலையை அறியும் வினாக்களைக் கேட்கலாம்.
 
ஒரே உரையாடலை ஒலிப்பதிவு செய்து வைத்துக்கொள்வதன் மூலம் மீண்டும் மீண்டும் கேட்டுப் பயிற்சி பெறுவதற்கு அதனைப் பயன்படுத்தலாம்.
 
5.1.4 கதையில் வரும் முக்கிய நிகழ்ச்சி அறிதல்
 
கதை என்றால் குழந்தைகள் கேட்கவும் சொல்லவும் விரும்புவர்.   மேலும்,   கதைகளில்தான் நிகழ்ச்சிகளை முறையாகச் சொல்லுவதில் பயிற்சி கிடைக்கும்.   அதனால்,   கதைகளைக் கேட்டல் திறனுக்கு நன்கு பயன்படுத்த வேண்டும்.
 
வகுப்பு நிலை உயர உயரச் சிறு நிகழ்ச்சிகூடக் கதைப் போக்கை எவ்வாறு மாற்றுகிறது.  கதை வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது என அறியச் செய்தல் வேண்டும்.
 
5.1.5 எளிய கதைகளைக் கேட்டு மகிழ்தல்
 
மாணவர் கேட்டு மகிழ்வதற்கு ஏற்ற கதைகளைக் கூறவேண்டும். நகைச்சுவை பேச்சு, அறிவுக்குப் பொருந்தாத செயல்களைக் கதை உறுப்பினர் செய்தல் முதலானவை மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும். ‘சபாபதி’ ‘தெனாலிராமன் கதைகள்’ போன்ற நகைச்சுவை மிகுந்த கதைகளை ஆசிரியர் கூறுதல் வேண்டும். ஆசிரியர் குரலில் ஏற்றத்தாழ்வுகளைக் கையாளுதலுடன் கூடியவரை நடிப்புடன் கூறுதல் வேண்டும்.
 
தீயோர் துன்புறுதல், நல்லவர் சிறப்படைதல், நேர்மைக்குப் பாராட்டு போன்றவை அமைந்த கதைகள் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும். இக் கருத்து அமைந்த கதைகளை ஆசிரியர் 4, 5-ஆம் வகுப்புகளில் கூறுதல் வேண்டும்.
 
5.1.6 ஒலிநயம் மிக்க பாடல்களைக் கேட்டு மகிழ்தல்
 
பெருபாலும் இறுதி ஒலிகள் ஒன்றாக அமைவது மாணவர்கள் கேட்டு மகிழ உதவும்.  (இதனை, இலக்கண நூலார் இயைபுத் தொடை என்பர்) எடுத்துக்காட்டாக தட்டு நிறைய லட்டு. லட்டு மொத்தம் எட்டு. லட்டு, எட்டு என்பன இறுதியில் ஒன்றாக ஒலிப்பன. அவ்வாறு ஒலி அமைவதனை மாணவர்கள் நன்கு அறியும் வகையில் ஆசிரியர் இசையுடன் படித்துக்காட்டுதல் வேண்டும்.  4,5-ஆம் வகுப்பு நிலைகளில் எதுகை, மோனை என்னும் சொற்களைச் சொல்லலாம். அந்த அடிகளை ஒலிநயத்தோடு ஆசிரியர் படித்துக்காட்ட வேண்டும்.
 
மேற்குறித்த ஆறு திறன்களும் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரைக்கும் வகுப்புக்கு ஏற்றவாறு பின்பற்றத் தகுந்தனவாகும். ஒவ்வொரு திறனிலும் படிப்படியாகச் சிறப்படையும்படி திட்டமிடல் வேண்டும்.
 
5.1.7 இரண்டு மூன்று தொடர் செய்திகளைக் கேட்டறிதல்
 
ஒரே ஒரு செயல் அடங்கிய கட்டளையாக,  இல்லாமல் இரண்டு மூன்று செயல்கள் அடங்கிய கட்டளைகளை நிறைவேற்றும்படி கூறுதல், கேட்டல் திறனை வளர்க்கும். எடுத்துக்காட்டாக, கைவிரலால் மணலில் ஒரு வட்டம் வரைந்து, வட்டத்தினுள் ‘ப’ என்று எழுதுக. வட்டத்திற்கு வெளிப்பக்கம் ‘ம’ என்று எழுதுக.
 
5.1.8 ஒரு பேச்சைக் கேட்டு அதன் முக்கியக் கருத்து அறிதல்
 
உரையாடலைக் கேட்கும்போது ஒருவர் கேள்வி கேட்பதாகவும்,  மற்றவர் விடை தருவதாகவும் அமையும்.  ஆனால்,  ஒருவர் பேசுவதைக் கேட்கும்பொழுது தொடர்ச்சியாகக் கருத்துகள் கூறுவது சிக்கலானது.  எனவே,  ஆசிரியர் குழந்தைகள் அறிந்த பொருள் பற்றி எளிய சொற்களில் சில கருத்துகளைக் கூறிக் கேட்கச் செய்தல் வேண்டும்.
 
5.1.9 கவனச் சிதைவின்றி உரையாடலைக் கேட்டல்
 
கீழ் வகுப்பில் உரையாடலைக் கேட்டலில் முக்கியக் கருத்துகளைக் கேட்டார்களா என அறியப்பட்டது. இவ்வகுப்பில் கருத்து விளக்கத்துக்குக் கூறப்படும் செய்திகளையும் அவர்கள் கவனிக்க வேண்டும். அவ்வகையில் உரையாடல் அமைய வேண்டும்.
 
5.1.10 சிறு நாடகங்களைக் கேட்டு மகிழ்தல்
 
குழந்தைகள் தம்மை மறந்து கேட்கும் நிகழ்ச்சியில் ஈடுபடச் செய்ய,   நாடகங்கள் பெரிதும் உதவுகின்றன. அத்துடன் அவர்கள் சுவையை உணரும் திறனும் வளரும். நகைச்சுவைத் தொடர்கள், நிகழ்ச்சிகள் நிறைந்த சிறு காட்சிகளுள்ள நாடகங்களை ஆசிரியர் ஏற்பாடு செய்தல் வேண்டும். மேடையமைப்பு, உடைகள் முக்கியமல்ல. நிகழ்ச்சியும் பேச்சுமே சிறப்பிடம் பெறுதல் வேண்டும்.
 
5.1.11 உரையாடலைக் கேட்கும்பொழுது உணர்ச்சிகளையும் செய்திகளையும் கேட்டு அறிதல்
 
கோபம், வருத்தம், வெறுப்பு, இரக்கம் போன்ற உணர்ச்சிகள் அமைந்த உரையாடல்களை ஆசிரியர் ஏற்பாடு செய்தல் வேண்டும். தனிப்பட்ட ஒருவருடைய பேச்சின் மூலம் அவரைப் பற்றி அறியும் திறன் மாணவர்களிடம் வளர வழி வகுக்க வேண்டும்.
 
5.1.12 பள்ளி நாடகங்களைப் பார்த்துச் செய்திகள் உணர்ச்சிகள் ஆகியவற்றின் தொடர்பு அறிதல்
 
ஒருவர் கோபமாக இருக்கிறார் என்று அறிவதுடன் கோபம் ஏன் ஏற்பட்டது என்பதற்காக நிகழ்ச்சியையும் நேரே கண்டு அறிவதற்கு நாடகம் துணைசெய்யும். ஒருவர் மனம் மாறுவதற்கு உரிய காரணங்களையும் ஒருவர் குறிப்பிட்ட வகையில் செயல்படுவதற்கான காரணங்களையும் நிகழ்ச்சியுடன் தொடர்புபடுத்தி அறியும் வகையில் நிகழ்ச்சிகளை ஆசிரியர் ஏற்பாடு செய்தல் வேண்டும். (எ-டு) தொடர்பு அறிதல்:- ‘நாட்டைப் பழித்துரைத்தான் அதனால் கோபம் வந்தது’.
 
5.1.13 உரையாடலைக் கேட்டு உட்கருத்து அறிதல்
 
உரையாடலின் கருத்து அறிதலுடன் உரையாடுபவரின் உட்கருத்து என்ன என்பதை அறியும் வினாக்களைக் கேட்க வேண்டும். உரையாடுபவர், ‘வெறுப்போடு பேசுகிறார்; உதவி செய்யும் எண்ணம் இல்லை’, ‘நல்ல பண்புடையவர்’ என்பதை மாணவர்கள் தாமே அறிந்து, கூறும் நிலையை அடைதல் வேண்டும்.
 
5.1.14 கதையைக் கேட்டு உட்கருத்து அறிதல்
 
எந்தக் கருத்தை விளக்குவதற்கு, எந்த நீதியைக் கற்பிப்பதற்குக் கதை கூறப்படுகிறது என்பதனை மாணவர்கள் அறிதல் வேண்டும். தீமை செய்தால் துன்பம் வரும். நல்லோர் பாராட்டப்படுவர் என்னும் உணர்வுகள் அவர்தம் உள்ளத்தில் தோன்ற வேண்டும்.  தக்க வினாக்கள் மூலம் அவற்றை அறிதல் வேண்டும்.
 
5.1.15 சுவை மிக்க கதைகள், நாடகங்கள் கேட்டு மகிழ்தல்
 
கதையும் நாடக நிகழ்ச்சியும் எளிய நடையில் அமைய வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் கேட்டுப் பொருள் அறிந்து மகிழ்வர்.    கேட்டல் திறனை வளர்க்க ஆசிரியர் கீழ் உள்ள துணைக்கருவிகளைப் பயன்படுத்துதல் நன்று.  இந்தத் துணைக் கருவிகளே அன்றி,  ஆசிரியர், சூழ்நிலைக்கு ஏற்பவும், தேவைக்கு ஏற்பவும் மேலும், பல துணைக் கருவிகளைத் தயாரித்து நன்கு பயன்படுத்த வேண்டும்.
 
1.  ஊர், சந்தை, தோட்டம், ஆறு போன்ற படங்களைத் தயாரித்துக் காட்டிச் செய்திகளைக் கூறச் செய்தல்.
2.  வண்ணமுள்ள கதைப் படங்களைத் தயாரித்து அவற்றின் மூலம் கதையின் முக்கிய நிகழ்ச்சிகளைக் கேட்டறியச் செய்தல்.
3.  கட்டளைச் சொற்களை அட்டைகளில் எழுதிக் காட்டி, அவற்றைப் படித்துக் காட்டுவதன் மூலம் கேட்டல் திறனை வளர்த்தல்.
4.  பல வண்ண அட்டைகள் மூலம் இரண்டு மூன்று தொடர்களைக் கேட்டறியச் செய்தல்.
5.  பொங்கல் விழாப் படம், புகைவண்டி நிலையப் படம், வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி-திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி முனை போன்ற படங்களைக் காட்டி அவற்றை மையமாகக் கொண்டு உரையாடல்கள் நிகழ்த்தி, அவற்றைக் கேட்டறியச் செய்தல். இதேபோல் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முக்கியமான இடங்களைக் காட்டி உரையாடல் நிகழ்த்தலாம்.
6.  எளிய, இசைப் பாடல்களை அட்டையில் அழகாக எழுதி, அவற்றை இசையுடன் பாடிக்காட்டிக் கேட்கச் செய்யலாம். ஒலிநயம் மிக்க பாடல்களைக் கேட்டு மகிழச் செய்தல்.

Popular Feed

Recent Story

Featured News