Tuesday, August 1, 2017

மொழிக் கற்பித்தலில் பயன்படுதப்படும் கருவிகள் - கதை சொல்லி மொழிக் கல்வியை மேம்படுத்துதல்

 மொழிக் கற்பித்தலில் பயன்படுதப்படும் கருவிகள் - கதை சொல்லி மொழிக் கல்வியை மேம்படுத்துதல்
ஒவ்வொருவரும் கதை சொல்பவர்கள் தான். ஒரு அனுபவத்தை, ஒரு சம்பவத்தை அல்லது ஒரு செய்தியை விவரிக்க ஆரம்பிக்கும் பொழுதே இது அவர்களிடம் வெளிப்படுகிறது. டெலிவிஷன், ரேடியோ அல்லது குடும்ப நபர்கள் பேசுவதைக் கேட்கும் பொழுது, கதை சொல்லும் இவர்களும் பார்வையாளர்களாகிறார்கள். உலகத்திலுள்ள அத்தனை தகவல் பரிமாற்றங்களும் கதைசொல்வதைச் சுற்றியே உருவாகிச் சுழல்கிறது. கதைகள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. அறிவுப்புப் பலகைகளிலிருந்து, பஸ் நிற்குமிடங்கள், ரயில் நிலையங்கள், சினிமா அரங்குகள், வீடுகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நடைபாதைகள், வீதிகள், விளம்பரங்கள், குடும்பங்கள், வேலைசெய்யும் இடங்கள், ஏன், விண்வெளியிலும் கூட கதைகளின் ஆக்கிரமிப்புத்தான். குடும்ப உறவினர்களிடமும், நண்பர்களிடமும் நமது அனுபவங்களையும், கடந்த கால நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்ளும் பொழுது, அந்த உரையாடல்கள் அத்தனையும் பல கதைகளாகும்.
ஆகையால், இயற்கையாகவே ஒவ்வொருவருக்கொருவர் உரையாட வேண்டிய அவசியம் வெளிப்படையாக விளங்கும். இந்த உரையாடலுக்கு, மொழி ஒரு முக்கிய பங்குவகிக்கிறது. ஒரு மொழியில் கதைசொல்லுதலில், கவனமாக்க் கேட்பது, ஞாபகம் வைத்துக் கொள்வது, மீண்டும் திருப்பிச் சொல்லுவது ஆகிய திறமைகள் காணப்படுகின்றன. கதை சொல்லும் திறமைப் பொக்கிஷப் பெட்டகத்தில் இருக்கும் மொழி வளர்ச்சிக்கு வேண்டிய நான்கு அடிப்படைத் தூண்களாக இருப்பவைகள் – கேட்டல் மற்றும் பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல் ஆகும்.
குழந்தைப் பருவத்திலிருந்தே குழந்தையின் கற்பனையைத் தூண்டி, ஒரு அதிசய உணர்வை கதைகள் உண்டாக்குகின்றன. ஒவ்வொரு கலாசாரத்திலும் புழங்கும் நாட்டுப்புறக் கதைகளில் பொதிந்துள்ள ஒரு பெரிய பொக்கிஷப் பெட்டகம் நமக்குச் சமீபத்திலேயே புதையுண்டு கிடைக்கிறது. ஒரு சமூக விழுப்புக் கொண்ட கடமையாக இந்த பெட்டகத்தைத் திறந்து, அதிலுள்ள விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை நமது குழந்தைகளுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் போது, அந்தக் குழந்தைகள் கதையின் கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை உணர்ந்து, சொல்பவர்களின் தொனிகளை ரசித்துக் கேட்பார்கள்.
சப்தங்களின் பரிணாமமும், மொழி வளர்ச்சியும்.
சப்தங்கள் என்றால் என்ன? அணு அறிவியல் மற்றும் ஈஸ்டின் கொள்கை தெரிவிப்பது என்ன வென்றால், அணுவைப் பொருத்த அளவில், எல்லாப் பொருளும் சம்ம் என்பதாகும். பொருளின் பிம்பங்கள் கண்களுக்கு வெவ்வேறகத் தெரிவதற்குக் காரணம் என்ன வென்றால் பொருளின் அணுசக்தி அப்பொருளின் பல பாகப்புள்ளிகளில் வேறுபட்ட அதிர்வு அலைகளை உருவாக்குவதனால் தான்.
இந்த அதிர்வுகள் சப்தத்தை உருவாக்குகின்றன. புராதனமான முன் காலத்தில், இந்த சப்த அலைகளை நமது ரிஷிகள் கேட்டு உணர்ந்தனர். இந்த சப்த அலைகளை உணர்ந்துதான் அவைகளுக்கு ஸ்ருதி அதாவது கேட்கப்படுதல் என்று அழைத்தனர். வேதங்களை முறைப்படி ஓதுதல் எந்தவிதமான எழுத்து வடிவம் அதற்கு இல்லாமல் காலம் காலமாக வாய் வழியாகவே அடுத்த தலைமுறையினருக்கு தொடர்ந்து வந்துள்ளது. வேதத்தை யாரும் எழுதியதாகக் கொண்டாடவோ அல்லது அதை சொந்தம் கொண்டாடவோ முடியாது. வேதம் குரு-சிஷ்யர் என்ற வழியில் காதால் கேட்டு – அதைச் தோத்திரங்கள் என்பார்கள் – கற்பதுதான் பழங்கால முறையாகும்.
ஏன் வேதம் எழுதப்படவில்லை? வேதத்தின் சில சப்தங்கள் துல்லியமாக உச்சரிக்க முடியாதவைகளாக இருக்கின்றன. அந்தச் சப்தங்கள் இரண்டு அசை எழுத்துக்களுக்கு இடையில் அமைகின்றன. அப்படி ஒலிக்கும் வார்த்தகள் பல வேதத்தில் காணப்படுகின்றன. நமது உணர்ச்சி வெளிப்பாடுகள், ஏன் இயற்கையை ஒழுங்காக இயக்கும் பரந்த வெளி உலக சக்தியும், ஒலியில் காணப்படும் மாறுபாடுகளுக்குக் காரணமாகின்றன.
ஒலியின் ஏற்ற இறக்கங்கள் எவ்வகையான தாக்கங்களை உண்டாக்கி விடுகின்றன என்பதை விளக்குவதற்கு ஒரு சிறிய கதை வேத்த்தில் உள்ள தைத்ரீய சம்கிதையில் சொல்லப்பட்டிருக்கிறது. துவஸ்தா என்ற பெயர்கொண்ட ஒரு தேவலோகக் கலைஞர் ஒரு மந்திரத்தைக் கற்றிருந்தார். அதன் மூலம் அவரால் தேவேந்திரனையும் கொல்லும் சக்திபடைத்த ஒரு மகனை உருவாக்க முடியும். அந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது, அதிலுள்ள வார்த்தைகளின் சப்தங்களின் தொனி மற்றும் ஒலி இவைகளில் தவறு இழைத்து விட்டார். இதன் காரணமாக, ஒரு மகனை உருவாக்கத் தம் மனதில் நினைத்ததற்கு மாறாக நிகழ்ந்து விட்டது. இந்திரனைக் கொல்லும் வலிமை உள்ள ஒரு மகன் வேண்டும் என்று வேண்டுவதற்குப் பதில், இந்திரானால் கொல்லப்படும் ஒரு மகன் வேண்டும் என்று அவர் கேட்டுவிட்டார். அதன்படியே நிகந்து விட்ட்து என்றபடி அந்தக் கதை செல்கிறது.
மொழி என்பது சரியாக வார்த்தைகளை உச்சரிப்பதும், கேட்பவர்களிடம் சரியான தாக்கத்தை ஏற்படுத்துவதாகும். உணர்ச்சிகள், வேதனைகள் அல்லது ஒரு பொருள் இவைகளின் நோக்கங்களை நிர்ணயிப்பதது வார்த்தைகள் தான் என்றாலும், சரியான தொனியிலும், உணர்ச்சிகரமாகவும், தகுந்த உச்சரிப்புடனும் வெளிப்படுத்தும் போதுதான் அந்த வார்த்தைகள் திறமையாக வெளிப்படும்.
சங்கீதம் நன்கு தெரிந்த ஒருவர் எப்படி ஒரு தவறான சுரத்தைக் கண்டுபிடிக்க முடியுமோ அதைப்போல் மொழியை நன்கு அறிந்த ஒருவர் பேசும் மொழியில் இழைக்கும் தவறுகளை இனம் காணமுடியும்.
ஜப்பான் டோக்கியோ நகரத்து குழந்தைகளுக்கான நூலகத்தில், தலைமை நூலகர், குழந்தைகள் மெதுவாக இடைவெளியிட்டு ஜப்பான் மொழியை பேசுவதற்கு உதவ கதை சொல்லும் பாணியைக் கடைப்பிடிக்கிறார். அந்த அவரது பாணி, இன்று நடைமுறையில் கையாளப்படும் பேச்சு வழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு அமைகிறது.
நமது ரேடியோ, டெலிவிஷன் ஆகியவைகளை நீங்கள் கேட்டும் பொழுது, எல்லா பிராந்திய மொழிகளும் ஆங்கிலம் கலந்து ஒன்று போல ஒலிப்பதாகப் படும். இது முற்றிலும் புதிய புரியாத குப்பைமயமான மொழியாக - அதாவது சரியான ஆங்கிலம் எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசாமலும், நவீன கொச்சைப் பதங்களைக் கொண்ட ஒரு புரியாத புது மொழியாக அதை நாம் உருவாக்கிவிடுகிறோம்.
பேச்சாளர்களின் வேறுபட்ட பலவிதமான பேச்சுக்களை வெளிப்படுத்துவதற்குத் தகுதியான 1652 தாய்மொழிகளுக்கு மேல் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கின்றன. பன்மொழிப்புலவர்கள் இத்தகைய பலமாறுபட்ட பேச்சுக்கள் அல்லது வட்டாரபேச்சு மொழிகள் ஆகியவைகளை இந்தியாவில் பேசப்படும் 105 மொழிகளுக்கும் தொகுத்துள்ளனர்.
மொழிக் கல்வி
 ஆசிரியர்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் மிகவும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். எல்லாவித தகவல் பரிமாற்றங்களுக்கும் மொழிதான் அடித்தளமாக அமைகிறது. குழந்தைகளின் அறிவுத்திறன் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவைகளைச் சமமாக ஆசிரியர்கள் சீர்துக்கிப் பார்க்க வேண்டியது அவசியமாகும். வகுப்பறையில் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் குழந்தைகளோடு உரையாடினால் தான் இது நிகழ முடியும்.
பள்ளியின் நாளை பல பாடங்கள் படிக்கும் நேரமாகப் பிரித்தாலும், நாள் பூராவும் மொழியின் திறன்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெறப்படும் திறன்களில் கேட்பதும், படிப்பதும் இருக்கின்றன. பகிர்ந்து கொள்ளும் திறன்களில் பேசுவதும், எழுதுவதும் இருக்கின்றன. கேட்பதுடன் இணைந்து செயல்பட்டால் ஒழிய, பேச்சு பயன் தராது. கேட்பதில் இடைவெளி இருக்க வேண்டும். கேட்டல் என்ற பொருளுடைய Listen என்ற ஆங்கில சொல்லிலேயே, மவுனம் என்ற பொருளுடைய Silent என்ற ஆங்கிலச் சொல் மறைந்துள்ளது. கேட்பதில் சுமார் 40 வகையான முறைகள் இருக்கின்றன. ஒருவர் தம் உடல், உள்ளம், உயிர் ஆகியவைகளைக் கொண்டு எதைக் கவனித்தல், கேட்டல் ஆகிய செயல்களைச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.
ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வது என்றால் ஒவ்வொருவரும் மற்றவரைப் புரிந்தும், எண்ணங்களைப் பகிர்ந்தும், கருத்துக்களை பரிமாறிக் கொண்டும் இருப்பவைகளுக்கு கதை சொல்வது அடித்தளமாக அமைகிறது. ஒரு கதையில் உள்ள வார்த்தகைகள் ஒரு நதியாக, ஒரு குரங்கு போல் அல்லது சாக்லேட் போல் நம் ஒவ்வொருவரின் மனத்திரையிலும் பலவிதமான பிம்பங்களை நிழலாட வைக்கின்றன.
கற்பிப்பது என்பது வெறும் சொல்வது மட்டுமில்லை. கருத்து வெளிப்பாட்டில், விளக்குவதுடன் எப்படி – ஏன் – என்பதைத் தெளிவு படுத்துவதும் அடங்கும். இதனால், கேட்பவர்களுக்கு ஒரு அதிசய உணர்வு உண்டாகும். வார்த்தைகளை ஏற்ற இறக்கத்துடன் சொற்களை அலங்கரிப்பதுபோல் உச்சரிப்பது, குழந்தையின் உள்ளத்தில் ஒரு கருத்துச் செறிவான விளைவினுக்கு வித்திட்டு, கற்பனையையும் தூண்டி விடும்.
ஆரம்ப நிலையிலேயே இதை நிர்ணயித்து விடின், குழந்தை தன் வாழ்நாள் முழுதும் மிகவும் எளிதாகப் பேசவும், படிக்கவும் இயலும். அத்துடன், தன் கருத்துக்களைத் தெளிவாகவும், திட நம்பிக்கையுடனும், எளிதாகவும் வெளிப்படுத்த முடியும்.
குழந்தையைச் சுற்றி உள்ள எந்தச் சூழலிலும், எந்தப் பாடங்களிலும் பதில் சொல்லும் குழந்தையின் திறமையில் ‘வாக்கு வன்மை’ என்பது ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.
நாம் எப்படி ஆரம்பிக்கலாம் ?
கதை சொல்வதற்கு தகுதி, நீங்கள் முதலில் ஒரு நல்ல ‘கதை கேட்பவராக’ இருக்க வேண்டும். கதை சொல்லுவோரின் கதைகளைக் கவனமாகக் கேட்கவும். அவர்களது மொழிப் பிரயோகம், தகவல், உயிரெழுத்துக்களை உச்சரிப்பதில் அழுத்தம், வாக்கிய அமைப்பு, பேச்சில் இடைவெளி மற்றும் ஆற்றெழுக்கான நடை ஆகியவைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்களைச் சுற்றி உள்ளவர்களின் உருவங்கள், பேச்சு, செய்கைகள் ஆகியவைகளை உற்று நோக்கவேண்டும்.
நீங்கள் ஒரு வெற்றிகரமான கதை சொல்பவராக வரவேண்டும் என்றால் அதற்குச் சிறந்த வழி நீங்கள் கதைகளைச் சொல்லிப் பழகவேண்டும். இதன் மூலம் உங்களுக்கு நம்பிக்கையும், அதில் ஒரு ஆர்வமும் ஏற்பட்டவுடன், மேலும் பல கதைகளை சேமிக்க ஆரம்பித்து விடுவீர்கள். அத்துடன் நீங்கள் சொன்ன கதைகளை டேப்பில் பதிவு செய்து, அவைகளை ஓய்வாக இருக்கும் நேரத்தில் கேட்டுப் பார்ப்பீர்கள்.
நீங்களே கதைசொல்லி அதைக் கேட்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். அந்தக் கதையில் உள்ள கதாபாத்திரங்களாக நீங்கள் மாறுங்கள். அந்தக் கதையை உயர்வு நவிற்சியாக்கிச் சொல்ல முயலுங்கள். உங்களைப் போல் இல்லாத ஒரு கதாபத்திரத்தை உருவாக்குங்கள். கதையில் உள்ள ஒரு கதாபாத்திரத்துடன் உங்களை சம்பந்தப் படுத்திப் பார்க்க முயலுங்கள். கதை சொல்வதை கணக்கு, சயன்ஸ், புவி இயல் அல்லது சரித்திரம் ஆகிய பாடமாக நீங்கள் கருதாமல் இருந்தால், மேற்சொன்ன அத்தனையையும் உங்களால் செய்யமுடியும். கதை சொல்வது ஏதோ மனப்பாடம் செய்து ஒப்பிப்பதோ, கற்பதோ இல்லை. அதில் உள்ள ரகசியங்கள் உங்களுக்கு சுலபத்தில் தெரியப்போவதில்லை. ‘இடையில் நிறுத்து, காத்திரு, கவனி” என்ற வழிமுறைகள் உங்கள் எண்ண ஓட்டங்களில் ஒரு மாற்றத்தை தானாகவே உண்டாக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் குழந்தைகள் பேசும்பொழுது முழு மனத்துடன் கேட்பதை, உங்கள் தலையை ஆட்டியோ அல்லது ‘உம்ம்…, அப்படியா?’ என்று முணுமுணுத்து உங்கள் முழுக்கவனமும் அவர்கள் பேசுவதைக் கேட்பதில் இருப்பதை உணர்த்த வேண்டும். நீங்கள் ஒரு சிறந்த கதை கேட்பவராக இருப்பதற்குக் கற்றபிறகு, ஒரு சிறந்த கதை சொல்வதற்கான அடித்தளத்தை அமைத்தாக நீங்கள் கருத ஆரம்பிக்கலாம்.
வகுப்பறையில் கதை சொல்வதின் நோக்கம் என்ன?
கதை சொல்லி விளங்க வைப்பது வகுப்பறையை சந்தோஷமான இடமாக்கி, கருத்துப் படிவங்களை இன்னும் மிக எளிதாகப் புரியவைக்கிறது. பொதுவாக ஐந்து வகுப்புகள் எடுத்து நடத்திப் புரியவைக்க வேண்டிய பாடங்கள் கதை சொல்வதின் மூலம் ஒன்று அல்லது இரண்டு வகுப்புகளில் விளக்கும் பொழுது மனதில் நன்கு பதிந்து விடும். இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், குழந்தைகள் கவனமாக நீங்கள் சொல்வதைக் கேட்கும் தருணங்களில், வார்த்தைகள், மொழி, உச்சரிப்பு ஆகியவைகளுடன் அவர்களுக்கே தெரியாமல் உங்களது உச்சரிப்பு மற்றும் தொனிகளை கற்கின்றனர்.
பிரமிட்களின் அளவுகள் அல்லது சரித்தத்தில் நிகழ்ந்த சம்பவம் ஆகியவைகளை ஒரு கதைபோல் வர்ணிப்பதை மனம் ஒன்றி குழந்தைகள் கேட்கும் பொழுது, குழந்தைகளின் முழுமையான கவனமும் தூண்டப்படுகிறது.
நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், எழுப்பும் ஒவ்வொரு சப்தமும், குழந்தையின் மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்குகின்றன. கற்பதின் அடித்தளத்தை அமைப்பதற்கு, கதை சொல்லுதல் உதவுகிறது.
கதைகள் சொல்வதற்கு என்ன கருவிகள் தேவைப்படுகின்றன?
மிகச் சிறந்த கருவி நாம்தான். நமது தன்னம்பிக்கையும், சக்தியும் தான் கதை சொல்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குகின்றன. நாம் சொல்லும் கதைகளை முதலில் நாமே நம்பினால் தான், குழந்தைகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
முன்னொரு காலத்தில் இரண்டு மனிதர்கள் ஒரு ஓணானைப் பற்றி விவாதம் செய்தார்கள். ஒருவன் ஓணான் நீல நிறம் என்றும் மற்றவன் அதை மறுத்து அது பழுப்பு நிறம் என்றும் வாதிட்டனர். இதற்கு ஒரு முடிவு காண, பல வருடங்களாக காட்டின் ஒரு பகுதியில் வசித்துக் கொண்டிருக்கும் ஒரு நண்பனிடம் அவர்கள் சென்றார்கள். அந்த நண்பனோ, “நீங்கள் இருவரும் தவறு. ஓணான் கருப்பு நிறம். ஓணானை நான் என்னுடைய பெட்டியில் வைத்திருக்கிறேன்” என்று விளக்கினான். அவன் பெட்டியைத் திறந்து காட்டும் பொழுது, ஓணான் வெள்ளை நிறமாகத் தோன்றியது! ஆகையால், அவர்களின் யாருடைய பதிலும் சரியானதில்லை. இருப்பினு, அவர்களின் பதில்கள் யாவும் சரியானவைகள். அப்படித்தான் கதை சொல்வதிலும் இருக்கும். சில கதைகள் உண்மையாக இருக்கும். சில கதைகள் கற்பனைகளாக இருக்கும். எப்படியாகிலும், அவைகள் அனைத்து கதைகளே!
‘பிரபஞ்சம் கதைகளால் ஆக்கப்பட்டனவே அன்றி அணுக்களால் அல்ல’ என்று ஒரு புகழ்பெற்ற தத்துவஞானி சொல்லி இருக்கிறார்.
ஆகையால், இந்தக் கொள்கையை நாம் நம்ப ஆரம்பிக்கும் வேளையில், கதையில் தன்னிட்சையாக நமது உணர்ச்சிகரமான எண்ணங்கள் சேரும் பொழுது, அது சமைப்பதற்குப் பல பதார்த்தங்களை சேர்த்து ஒரு ருசியான பண்டத்தைப் போல் உருவாகிவிடுகிறது.
கதை சொல்வதற்கு நமக்கு இருக்கும் அடிப்படைக் கருவிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது:
  • உடல் மொழி
  • உரை
  • குரல்
  • பாவனை
  • வார்த்தை விளையாட்டு
  • மொழித் திறன்
  • சொல்வளம்
  • பொது அறிவு.
  • சமாளித்தல்
ஒரு கதையைச் சொல்வதற்கு முன் அந்தக் கதையினை நாம் பலதரம் படிக்க வேண்டியது நமக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
“ஒரு காலத்தில், ஒரு காகம் இருந்தது” என்பதைச் சொல்வதை விட, படிப்பது மிகவும் சுலபம். ஏனென்றால், ஒரு கதையை நீங்கள் சொல்ல ஆரம்பிப்பிக்கும் பொழுது, சரியான உச்சரிப்பு மற்றும் ஓசையுடன் தெளிவாகவும், எளிமையாகவும் நீங்கள் சொல்லவேண்டியது அவசியமாகிறது.
இதில் சிறந்த தேர்ச்சி பெறுவதற்கு, ஒருவருக்குத் தேவையானவைகள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன:
  • பார்வையாளருக்குப் பொருத்தமான கதையைத் தேர்வு செய்தல். சிறந்த கதைகள் என்றால், , உங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியவர்களிடம் முன்பே சொல்லி உங்களுக்கு மிகவும் பரிச்சயமானதாக்கிக் கொண்ட பிறகு தான், வகுப்பறையில் அந்தக் கதைகளை நீங்கள் சொல்லத் துணியவேண்டும்.
  • மிகவும் திறமையுடன் சொல்வதற்குக் கற்றுக் கொள்ளவும்.
  • பல முறை பயிற்சி செய்யவும்.
  • கதையின் ஆரம்பம், முடிவு நன்றாக அமையும் படிப் பார்த்துக் கொள்ளவும்.
  • உங்கள் கதையின் காலப் பரிமாணத்தைக் கணிக்கவும்.
  • கதையைப் படிக்கவும்.
  • உரக்க கதையைப் பலமுறை படிக்கவும்.
  • கதை சொல்லவும்.
  • உரக்க கதையை மீண்டும் சொல்லவும்.
  • உச்சரிப்பு, நடிப்பு, சப்தம் ஆகியவைகளில் பயிற்சி.
  • கதையை உங்களாக்கிக் கொள்ளல்.
  • கடைசி நேர பயிற்சி மூலம் பட்டை தீட்டவும்..

Popular Feed

Recent Story

Featured News