Wednesday, December 27, 2017

பா இனவியல்

பா இனவியல்

உறுப்பியல்

எழுத்தசை சீர்தளை அடிதொடை ஆறும்
அழகிய பாவின செய்யுளில் பயிலும்.

எழுத்தசை இரண்டும் வாய்பாட்டு முறையும்
ஒழுகிய ஓசை பொருந்திடவும் வருமே.

இருசீர் முதலா பல்வகைச் சீரும்
விரும்பி அமைக்க ஓசையும் பெறுமே.

சீர்பல விரவி ஓசையில் வழுவி
நேர்பட செய்யுள் அமைவதும் உண்டாம்.

எழுவகைத் தளையும் பாவினத் துள்ளே
எழிலுடன் தனித்தும் விரவியும் அமையும்.

சிறப்புடைத் தளையும் சிறப்பில் தளையும்
பொருத்திபா இனங்கள் படைப்ப துமுண்டாம்.

பாஅடி அளவால் பாவினம் பகுப்பர்
பாஅடி அனைத்தும் பாவினம் பெறுமே.

செய்யுளியல்

பாவுறுப்புப் பண்ணத்தி வரிப்பாடல் இவற்றில்
பாவினத்தின் தோற்றத்தைக் கண்டுணர்ந்தார் ஆய்ந்தோர்.

வரையறை உள்ள பாக்களின் அமைப்பில்
வரையறை இல்லா இசைஒழுங் குடைய
மாறிய செய்யுள் வடிவமும் கண்டு
சீர்அடிக் கேற்ப பாவினம் பகுத்தார்.

பாவினப் பகுப்பு

தாழிசை துறைவி ருத்தம் மூன்றும்
தழுவிய பாவிற் கினமாய் அமையும்.
வழுவிய முறையில் அழைக்கவும் படுமே

பாவின வகைகள்

வெண்பா அகவல் கலியொடு வஞ்சி
என்ற நற்பா மூன்றினம் உறழ
பன்னி ரண்டாய் பாவினம் தழைக்கும்.

துறைதா ழிசையி ரண்டையும் சேர்த்து
குறட்பா வகைக்கும் பாவினம் பகுப்பர்.

பன்னிரு வகையொடு குறட்பா இனம்சேர்த்
தெண்ணிய பாவினம் பதினான் காகும்.

பாவின இயல்பு

தாழம் பட்ட ஓசை உடைத்தாய்
தாழி சைமூன்ற டுக்கள் இயல்பே.

தனித்த தாழிசை பாப்பெயர் ஏற்கும்
மூன்ற டுக்கின ஒத்ததா ழிசையாம்.

இரண்டு முதலாய் ஏழடி யானும்
குறைந்தும் நீண்டும் அடிமடிக் காயும்
சீர்கள் விரவி வந்திடும் துறையே.

நான்கடி யாகி அடியள வொத்து
மூன்றுசீர் முதலாய் சீர்பல பெற்று
எண்ணிய இசையும் சந்தமும் தாங்கி
முன்னிலை வகுக்கும் பாவினம் விருத்தம்.

எதுகை ஒத்தல் பாவின இயல்பே
எதுகை நீங்கின் பாவினம் இலவே.

சீரளவு ஒத்துவரும் பாவினம் எல்லாம்
நிரல்நிரையாய் வாய்பாடும் ஓசையும் பெறுமே.

அடிதொறும் பொருள்முடி புடையன மண்டிலம்
அடிதொறும் தொடர்வது நிலையெனப் பெயர்பெறும்.

குறட்பா துறை

இரண்டடி யாகி அடியள வொத்து
நாற்சீர முதலா செந்துறை அமையும்.

வண்ணம் கும்மி தாழிசை சிந்து
கண்ணி எல்லாம் செந்துறை வகையே.

குறட்பா தாழிசை

இரண்டடி யாகி சீர்பல பெற்று
     ஈற்றடி குறைந்து வருவதும்
இரண்டடி ஒத்து விழுமிய பொருளும்
     ஒழுகிய ஓசை பெறாததும்
இரண்டடி வெண்பா பிறதளை விரவி
     வழுவிய ஓசை கொண்டதும்
இரண்டடி ஐஞ்சீர் அடுக்கிய வெண்பா
     என்றநால் வகைதா ழிசைக்குறள்.

வெண்பா தாழிசை

சிந்தியல் வெண்பா வெண்டளை இன்றி
தனித்து அடுக்கின் தாழிசை வெள்ளை
சிந்தியல் வெண்பா மூன்றுஅ டுக்கின்
வெள்ளொத் தாழி சையென்மனார் புலவர்.

வெண்பா துறை

மூன்றடி முதலாய் ஐந்தடி ஈறாய்
கொண்டுஓர் இசைபெ றினோரோலி துறையே.

மூன்றடி நான்கடி பெறும்துறைப் பாடல்
பின்னடி இரண்டிலும் இரண்டுசீர் குறையும்
ஐந்தடி பெற்றிடின் ஈற்றுசீர் நைய்யும்.

ஐந்தடி முதலாய் ஏழடி ஈறாய்
முன்னொரு இசையும் பின்னொரு இசையும்
கொண்டன வேற்றொ லிதுறையென் றழைப்பர்.

ஐந்தடி யாய்வரின் ஈற்றடி இரண்டிலும்
குன்றிடும் இரண்டுசீர் ஆறடி ஏழடி
கொண்டன முன்னிரு அடிதவிர்த்
தேனைய அடிகளில் இரண்டுசீர் குன்றுமே.

வெண்டளை நீங்கிய நான்கடி வெண்பா
வெண்டுறை வகையினில் வைக்கவும் படுமே.

வெண்பா விருத்தம்

மூன்று நான்கு அடிகள் தாங்கி
ஐந்தாம் சீராய் தனிச்சொல் தாங்கி
தன்பா ஒக்கும் வெண்பா விருத்தம்.

வெண்பா வகைகளின் இனங்கள்

இரண்டடி துறையொடு தாழிசை குறட்பா வினங்களே.
     மூன்றடி தனிச்சொல் கொண்டன
நேரிசை சிந்தியல் தனிச்சொல் அற்றன இன்னிசை
நாலடி தனிச்சொல் கொண்டன
நேரிசை வெண்பா தனிச்சொல் அற்றன இன்னிசை
     நெடிலடி மிக்கன பஃறொடை.

அகவல் தாழிசை

மூன்று அடியாய் பலசீர் பெற்று
தனித்து நிற்பின் தாழிசை அகவல்

மூன்று அடியாய் பலசீர் பெற்று
மூன்று அடுக்கின் ஒத்தா ழிசையே
அகவல் துறை

நான்கடி யாகி சீர்பல பெற்று இடையடி மடிக்கி
ஒன்றுஇ ரண்டு சீர்அடி குறைதல் அகவலின் துறையே.

ஓரடி குறைதல் நேர்த்துறை என்பர்
ஈரடி குறைதல் இணைகுறள் என்பர்.

அகவல் விருத்தம்

கழிநெடி லடிகள் நான்கு ஒத்து
எழிலுற அமைவ தகவல் விருத்தம்

அகவற்பா வகைகளின் இனங்கள்

ஓரடி குறைந்தன நேரிசை அகவல்
ஈரடி குறைந்தன இணைகுறள் அகவல்
மறித்தன மண்டிலம் தொடர்ந்தன நிலையே.

கலிப்பா தாழிசை

சீர்பல அடிபல பெற்று
ஈற்றடி மிகுவது கலித்தா ழிசையே.

தனித்து அமைவது கலிப்பா தாழிசை
மூன்று அடுக்கின கலியொத் தாழிசை.

ஈற்றடி மிக்கு ஏனைய அடிகள்
அளவொத் தமைவது சிறப்புத் தாழிசை
ஈற்றடி மிக்கு ஏனைய அடிகள்
     ஒவ்வா தமைவது சிறப்பில் தாழிசை.

கலிப்பா துறை

நான்கடி ஐஞ்சீர் பெறுவது கலித்துறை
மண்டிலம் நிலையே கட்டளை வகைகளாம்.

கட்டளைக் கலித்துறை

எழுத்தெண்ணி பாடுவது கட்டளைக் கலித்துறை
எழுத்தெண்ணு வோர்ஒற்று ஆயுதம் நீக்குவர்

நேரில் தொடங்கின் பதினா றெழுத்தாம்
நிரையில் தொடங்கின் பதினே ழெழுத்தாம்

சிறப்புற அமைந்திடும் திலதம் கோவை
நேரசை நிரையசை எனநால் வகைத்தே

கலிப்பா விருத்தம்

நாற்சீர் நாலடி கலிப்பா விருத்தம்
நேர்பதி னொன்று நிரைபன் னிரண்டு
விருத்தக் கலியின் கட்டளை அடிகள்.

கலிப்பா வகைகளின் இனங்கள்

அடுக்கி யதாழிசை ஒத்தா ழிசைக்கலி
அடுக்கா தாழிசை துறையும் கொச்சகம்
அடிநான் கொத்தன கலிவெண் பாவினம்

வஞ்சி இனங்கள்

நான்கடி இருசீர் அடுக்கின தாழிசை
நான்கடி இருசீர் தனித்தன துறையே
நான்கடி முச்சீர் பெற்றன விருத்தம்

வஞ்சிப்பா வகைகளின் இனங்கள்

இருசீர் பெற்றன ஈரடி வஞ்சி
சீர்மூன் றுடையன மூவடி வஞ்சி

பாவின வாய்பாடுகள்

ஈரசை மூவசைச் சீர்கள் தனித்தும்
விரவியும் அடிகொளப் படுமே.

இலக்கியங்களில் பாவினம்

பாக்களின் இனங்கள் தோன்றிய பின்னர்
மிக்கன இலக்கி யவகைகள் பலவும்

தனித்தும் இணைந்தும் பாவொடு விரவியும்
பனுவல் உலகில் ஆளுகை கொள்ளும்.

குறள்வெண் செந்துறை வெள்ளை விருத்தம்
விருத்த அகவல் கலித்துறை நான்கும்
சிறப்புற தனித்து இலக்கியம் படைக்கும்.

அகவல் விருத்தம் கலித்தா ழிசைதுறை
ஆகிய மூன்றும் இணைந்தும் வருமே.

குறட்பா அகவல் கலிப்பா இனங்கள்
விருத்த வஞ்சி துறையொடு பாக்கள்
விரவி வந்த நூல்கள் பலவாம்.

இலக்கிய வழக்கு அற்றன, அருகின.

வெண்டா ழிசையொடு மூன்ற டுக்கிய
தாழிசை வகைகள் முற்றும் அற்றன;
வெண்பா இனங்களின் செந்துறை ஒழிந்தன
வஞ்சித் துறைதா ழிசையும் அருகின.

Popular Feed

Recent Story

Featured News