Sunday, December 24, 2017

என்றும் பதினெட்டு (இரங்கல் பா)

நந்த கோபால் கலையரசி
பெற்றெ டுத்த தவப்புதல்வா!
தந்தை உருவம் கொண்டவனே
தாயின் உள்ளம் படைத்தவனே

உன்னை பெற்ற நாளினிலே
      உள்ளம் மகிழ்ச்சி அடைந்தோமே
தென்னம் பிள்ளை கிடைத்ததென
      தெம்பாய் உன்னை வளர்த்தோமே.
     
அமைதி யாக நீயிருந்து
      அழியாப் புகழைப் பெற்றவனே
தமையன் உனக்கு இல்லாமல்
      தங்கை துணையாய் வாழ்ந்தவனே

அறிவுக் குழந்தை வேண்டுமென
      அன்னை வேண்டி பெற்றாளோ
நிறைந்த ஆயுள் வழங்கிடவே
      பிரம்மன் மறந்து தொலைத்தானோ

கன்னிக் கவுண்டர் வாரிசாய்
      வந்து மண்ணில் உதித்தவனே
பெண்ணைத் தவிர வாரிசு
      இல்லா மல்தான் போனதைய்யா.

உன்னை நினைத்து அழுகின்றோம்
ஓடி வந்து அணைப்பாயா
அன்னை துயரம் தீர்ப்பதற்கு
மண்ணில் மீண்டும் பிறப்பாயா

அழுத கண்ணீர் ஆறாகி
எங்கள் வாழ்வை உருக்கியதே
விழிகள் இரண்டில் உன்னுருவம்
விலக மறுத்து நிற்கிறதே.

எங்களை விட்டுப் பிரிவதற்கு
எப்படி உனக்கு மனம்போச்சி
திங்களை விட்டு ஒளிபிரிந்த
நிலைபோல் எங்கள் வாழ்வாச்சி.

அன்னை தந்தை அழுவார்கள்
என்று நீயும் நினைக்கவில்லை
தங்கை யோடு விளையாடி
பொழுதை நீயும் கழிக்கவில்லை.

படிப்பு படிப்பு படிப்பென்று
சாதனை எல்லை தொட்டவனே
உடலின் நலனை கண்டிடாமல்
வாழ்வைத் தொலைத்து விட்டவனே.

நல்ல நிலையில் இருக்கின்றாய்
என்றே நாங்கள் நினைத்துவிட்டோம்
இல்லை உனக்கு குறைகளென்று
ஏமாற் றங்கள் அடைந்துவிட்டோம்.

உடலின் எடையைக் குறைக்கவேண்டும்
உந்தன் தங்கை படிக்கவேண்டும்
கடனில் இருந்து விலகவேண்டும்
குடும்பம் நன்றாய் தழைக்கவேண்டும்

கணினி வாங்கி பழகவேண்டும்
முதல்ம திப்பெண் எடுக்கவேண்டும்
தங்கை யோடு ஒற்றுமையாய்
சண்டை யின்றி இருக்கவேண்டும்

என்று எல்லாம் ஏடெழுதி
ஆசை சொல்லி வைத்தவனே
மண்ணில் வந்து உதித்தபலன்
அடைந்து விண்ணை அடைந்தவனே

ஆட்சி செய்யும் பணிபடிக்க
ஆசை கொண்டு இருந்தவனே
பாட்டன் தொழிலைப் படிப்பதற்குக்
கோவை மாநகர் சென்றவனே

வெற்றி மாலை நீசூடி
வருவா யென்று நினைத்திருந்தோம்
இறுதி மாலை நீசூடி
எங்களை ஏனடா அழவைத்தாய்.

Popular Feed

Recent Story

Featured News