Sunday, February 11, 2018

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் தகுதித் தேர்வில் தமிழ், ஆங்கிலம் உள்பட 10 மொழிகளில் கேள்வித் தாள்கள் தயாரிக்கப்பட உள்ளன.

மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதே, தங்களுக்கான மொழியைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
2018 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 6 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கையை சிபிஎஸ்இ வியாழக்கிழமை வெளியிட்டது. அன்றைய முதலே விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமும் தொடங்கியது. விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி நாளாகும். இதற்கு www.cbseneet.nic.in  என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், மதுரை, காஞ்சிபுரம், நாமக்கல், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தமிழ் உள்பட 10 மொழிகளில் கேள்வித் தாள்: நீட் தேர்வுக்கு பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் இருந்து கொள்குறி தேர்வு முறையில் (நான்கு விடை கொடுத்து சரியான ஒன்றைத் தேர்வு செய்யும் முறை) 180 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான பாடத் திட்ட விவரங்கள் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள நீட் தேர்வு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.
மேலும், தேர்வுக்கான கேள்வித் தாள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அசாமி, குஜராத்தி, கன்னடம், மராத்தி, ஒரியா, தெலுங்கு, உருது என 10 மொழிகளில் வழங்கப்படும். இதற்கான விருப்பத்தை விண்ணப்பிக்கும்போதே மாணவர்கள் குறிப்பிட வேண்டும்.
அனுமதிச் சீட்டு : தேர்வுக்கான அனுமதிச் சீட்டானது ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்படும். இதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். நீட் தேர்வு முடிகள் ஜூன் 5 (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும்.
நீட் தகுதி: நீட் தேர்வில் அகில இந்திய அளவில் மாணவர் எடுக்கும் அதிகபட்ச மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொண்டு, நீட் தேர்வுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை சிபிஎஸ்இ நிர்ணயிக்கும். அதாவது தேர்வில் அதிகபட்ச மதிப்பெண் 600 எனில், அது 100 சதவீத மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்படும். அடுத்த மதிப்பெண் 569 எனில், அது 99 ஆவது சதவீத மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்படும். இவ்வாறான மதிப்பெண் நிர்ணயத்தில் , பொதுப் பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் 50 ஆவது சதவீத இடத்தைப் பிடித்திருக்க வேண்டும்.
இல்லையெனில் நீட் தேர்வில் தகுதி பெற முடியாது. அதுபோல மாற்றுத்திறனாளிகள் குறைந்தபட்சம் 45 ஆவது சதவீத இடத்தையும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் குறைந்தபட்சம் 40 ஆவது சதவீத இடத்தையும் பெறவேண்டும்.
இந்த கணக்கீடு முறையில் சிபிஎஸ்இ தரவரிசைப் பட்டியலைத் தயார் செய்து, மத்திய சுகாதார சேவைகள் இயக்குநர் அலுவலகத்துக்கும், மாநில அரசுகளுக்கும் வழங்கும். இதனடிப்படையில், மத்திய சுகாதார சேவைகள் இயக்குநரகம், மருத்துவக் கலந்தாய்வு குழு மூலம், நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, கலந்தாய்வு மூலம் நிரப்பும்.
மாநில அரசுகள், அவற்றிடம் உள்ள மருத்துவ இடங்களுக்கு இந்தத் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில், அந்தந்த மாநிலங்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு, மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
என்னென்ன எடுத்துச் செல்லக் கூடாது?: தேர்வெழுத வரும் மாணவர்கள் துண்டுக் காகிதம், பேனா, பென்சில் பாக்ஸ், ரப்பர், பிளாஸ்டிக் பவுச், பென் டிரைவ், கால்குலேட்டர், செல்லிடப்பேசி, புளூடூத், இயர் ஃபோன், கைப் பை, என எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது. குறிப்பாக பெல்ட் மற்றும் தொப்பி அணிந்திருக்கக் கூடாது.
மேலும் மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், நெக்லஸ், டாலர், பேட்ச், வாட்ச், பிரேஸ்லெட் என எந்தவொரு உலோகப் பொருளும் அணிந்திருக்கக் கூடாது. அதோடு, குடிநீர் பாட்டில் உள்ளிட்ட எந்தவொரு சாப்பாட்டு பொருளும் உடன் எடுத்துவரக் கூடாது.
ஆடைக் கட்டுப்பாடு: தேர்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் லேசான அரை கை வைத்த ஆடைகள் மட்டுமே அணிந்து வரவேண்டும். காலில் ஷூ அணியக் கூடாது. செருப்புகள் மட்டுமே அணிந்திருக்க வேண்டும். அதுவும் குறைந்த ஹீல்ஸ் உள்ள செருப்புகளையே அணிய வேண்டும்.
தேர்வுக்குப் பிறகும் வைத்திருக்க வேண்டியது: மாணவர்கள் தேர்வு முடிந்து பிறகு மருத்துவப் படிப்புகளில் சேரும் வரை சில ஆவணங்களை தங்களுடன் வைத்திருப்பது நல்லது என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தேர்வுக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான உத்தரவாத பக்கத்தின் 3 நகல்கள், தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான சான்று, விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்த புகைப்படத்தைப் போல 5 மார்பளவு புகைப்படங்கள், தேர்வறை அனுமதிச் சீட்டு ஆகிய ஆவணங்களை மருத்துவப் படிப்பில் சேரும் வரை வைத்திருக்குமாறும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News