Sunday, February 11, 2018

இன்டர்நெட் மையங்களுக்கு படையெடுத்த பெற்றோர், மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை: நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள
நிலையில், அந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பெற்றோர், மாணவர்கள் இன்டர்நெட் மையங்களுக்கு படையெடுத்துள்ளனர். நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம் கடந்த 8ம் தேதி தொடங்கியது. மார்ச் 9ம் தேதி வரை மாணவர்கள் நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப் பதற்கான நடைமுறை: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தல் 4 நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தகவல் அளித்தல், புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்தல், விண்ணப்ப கட்டணம் செலுத்துதல், அதைத்தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதுடன் நீட் விண்ணப்பித்தல் நிறைவடைகிறது. www.cbseneet.nic.in என்ற நீட் நுழைவுத்தேர்வுக்கான பிரத்யேக இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தின்கீழ் பகுதியில் அப்ளை ஆன்லைன் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அப்போது மாணவர் தொடர்பாக தகவல்களை அளிப்பதற்கான பக்கம் தோன்றும்.

அதில் மாணவர்/மாணவி பெயர் (ஆதார் கார்டு/ஆதார் விண்ணப்பித்ததற்கான பதிவில் உள்ளவாறு), தாய், தந்தையின் பெயர், ஆதார் எண் அல்லது ஆதார் விண்ணப்பித்ததற்காக பதிவு எண், பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றை தவறில்லாமல் பதிவு செய்ய வேண்டும். அதேபோல் உபயோகத்தில் செல்போன் எண் (தாய் அல்லது தந்தையின் செல்போன் எண்ணாக இருக்கலாம்), இ-மெயில் முகவரி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து நெக்ஸ்ட் பட்டனை கிளிக் செய்து மாணவர் தனக்காக கடவுச் சொல்லை உருவாக்க வேண்டும்.

ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். அந்த எஸ்எம்எசில் வரும் எண்ணை இணையதளத்தில் பதிவிட்டால், கடவுச்சொல் ஏற்றுக்கொள்ளப்படும். அதைத்தொடர்ந்து சப்மிட் பட்டனை கிளிக் செய்து புகைப்படம், கையொப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படத்தின் மெமரி அளவு 10 கேபி முதல் 100 கேபி என்ற அளவிலும், ஸ்கேன் செய்யப்பட்ட கையொப்பத்தின் மெமரி அளவு 3 கேபி முதல் 20 கேபி என்ற அளவிலும் இருக்க வேண்டும். புகைப்படம், கையொப்பம் JPG format, குறிப்பிட்ட மெமரி அளவிலும் இருந்தால் மட்டுமே புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

அதைத்தொடர்ந்து மாணவருக்கான பிரத்யேக பதிவு எண் மாணவருக்கு வழங்கப்படும். அந்த பதிவு எண், கடவுச் சொல்லை அளித்து தாங்கள் விண்ணப்பித்ததை மாணவர்கள் பார்த்துக்கொள்ளலாம். தொடர்ந்து மார்ச் 10ம் தேதிக்குள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்ததற்கான சான்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு நீட் தேர்வு விண்ணபத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில், நீட் இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியிடப்படும். மே 6ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நீட் தேர்வு நடைபெறும். இயற்பியல், வேதியியல், உயிரியலில் (தாவரவியல், விலங்கியல்) 180 கேள்விகளுக்கு கொள்குறி வகையில் நான்கில் ஒரு விடையை தேர்வு செய்து விடைத்தாளில் விடைக்கான வட்டத்தில் பால்பாயின்ட் பேனா கொண்டு ஷேட் செய்ய வேண்டும். ஜுன் 5ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும். நீட் தேர்வு தொடர்பான உதவிக்கு 011-22041807, 011-22041808 என்ற தொலைப்பேசி எண்களிலும், 1800118002 என்ற இலவச எண்ணிலும், 9773720177,9773720178,9773720179 ஆகிய செல்போன் எண்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை தொடர்புகொள்ளலாம். தவறான தகவலை திருத்திக்கொள்ள வாய்ப்பு: நீட் விண்ணப்பித்தலின் போது தவறான தகவல், எழுத்துபிழையுடன் தகவல் அளித்திருந்தால் மார்ச் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை குறிப்பிட்ட தகவலை திருத்திக்கொள்ளலாம்.

Popular Feed

Recent Story

Featured News