Monday, April 2, 2018

வெண்பா

வெண்பா

நால்வகைப் பாக்களில் முதலில் அமைவது வெண்பாவாகும். இது சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் என்னும் கோட்பாட்டில் அமைகிறது. வெண்பா என்பது, வெண்மை+பா என்ற பண்புப் பெயர் புணர்ச்சியின்கீழ் அமைந்த பெயராகும். அதாவது வேறு வண்ணம் கலவாத ஒன்றை வெள்ளை என்பது போல வெண்டளைகள் தவிர வேறு தளைகள் கலவாத பாவை வெண்பா என்றனர்.

வெண்பாவின் பொது இலக்கணம்

·         ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடி நாற்சீராகவும் அமைதல்.
·         ஈற்றுச் “சீர், நாள், மலர், காசு, பிறப்பு” என்ற ஒன்றினைப் பெற்று வருதல்.
·         செப்பலோசையில் அமைந்திருத்தல்
·         இரண்டடி முதல் பன்னிரண்டடி வரை பாடப்படும்
·         வெண்டளைகளைத் தாங்கி வரும்.
·         ஒரு விகற்பத்தானும் பல விகற்பத்தானும் அமையும்
·         நாலசைச்சீர், கனிச்சீர் மற்றும் வேற்றுத் தளைகள் வாரா.

வெண்பாவின் வகைகள்

இவ்வெண்பா ஐந்து வகைப்படும். அவை,
1.   குறள்வெண்பா
2.   சிந்தியல் வெண்பா
·         நேரிசை சிந்தியல் வெண்பா
·         இன்னிசை சிந்தியல் வெண்பா
3.   நேரிசை வெண்பா
4.   இன்னிசை வெண்பா
5.   பஃறொடை வெண்பா என்பனவாகும்

குறள் வெண்பா

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று இரண்டடியாய் அமையும் வெண்பா குறள் வெண்பாவாகும்.
எ.கா. நட்பிற்கு ஆவி துறக்கலாம் அத்தகு
      நண்பன் கிடைப்பான் எனின்

சிந்தியல் வெண்பா

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று மூன்றடியாய் அமையும் வெண்பா சிந்தியல் வெண்பாவாகும். இது நேரிசை சிந்தியல் வெண்பா, இன்னிசை சிந்தியல் வெண்பா என இரண்டு வகைப்படும்.

நேரிசை சிந்தியல் வெண்பா

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று மூன்றடியாய், இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று அமைவது நேரிசை வெண்பா சிந்தியல் வெண்பாவின் இலக்கணமாகும்.
எ.கா. வானின் மழைத்துளி மண்மேல் விழுந்திடின்
      பெண்ணின் கடைப்பார்வை கண்டஆணின் உள்ளம்போல்.
      மண்ணில் பசுமை எழும்

இன்னிசை சிந்தியல் வெண்பா

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று மூன்றடியாய், தனிச்சொல் இன்றி அமைவது இன்னிசை வெண்பா சிந்தியல் வெண்பாவின் இலக்கணமாகும்.
எ.கா. வான்வெளியில் மாசுபடும் நேரத்தில் பூமியிலே
      மண்ணுருக வாட்டிவிடும் சூரியனின் - வெண்கதிர்கள்
      மண்மீது பச்சைநிறம் செய்

நேரிசை வெண்பா

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடியாய், இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று அமைவது நேரிசை வெண்பாவின் இலக்கணமாகும்.
எ.கா. அன்னைபோல் வேண்டுமென்று தேடித்தான் சென்றீரே
      பெண்ணும் கிடைக்கவில்லை என்று – நின்பக்கம்
      அத்தை தமக்கையை வைத்தீரே நின்செயல்
      பித்தன்தான் செய்வானோ சொல்.

இன்னிசை வெண்பா

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று நான்கடியாய், தனிச்சொல் இன்றி அமைவதும், இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று மூன்று விகற்பத்தால் அமைவதும், மூன்றாம் அடியில் தனிச்சொல் பெற்று இரண்டு விகற்பத்தால் அமைவதும் இன்னிசை வெண்பாவின் இலக்கணமாகும்.
எ.கா. கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார்
கொடையளிக்கண் பொச்சாவார் கோலநேர்செய்யார்
இடையறுத்துப் போகிப் பிறனொருவன் சேரார்
கடைபோக வாழ்துமென் பார்.

பஃறொடை வெண்பா

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று ஐந்தடி முதல் பன்னிரண்டடி வரை தனிச்சொல் இன்றி அமைவது பஃறொடை வெண்பாவின் இலக்கணமாகும்.
எ.கா. வையக மெல்லாங் கழினியா வையகத்துட்
செய்யகமே நாற்றிசையின் றேயங்கள் செய்யகத்துள்
வான்கரும்பே தொண்டை வளநாடு வான்கரும்பின்
சாறேயந் நாட்டிற் றிலையூர்கள் சாறட்ட
கட்டியே கச்சிப் புறமெல்லாங்க் கட்டியுட்
டானேற்ற மான சருக்கரை மாமணியே
ஆணேற்றான் கச்சி யகம்

Popular Feed

Recent Story

Featured News