Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 13, 2018

தமிழகத்தில் அடுத்த ஆண்டு மதிய வேளையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு




மறுபரிசீலனை செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மதிய வேளையில் தேர்வு நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல், பள்ளிகள் திறக்கப்படும் போதே 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டு விடுகின்றன.
இதனால், மாணவர்களின் மனஅழுத்தம் குறைவதுடன், ஆசிரியர்கள் மாணவர்களை தேர்வுக்காக தயார் செய்வது எளிதாகும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அடுத்த ஆண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.



அதன்படி, பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கி, 19ம் தேதி வரையும், பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 6ம் தேதி தொடங்கி, 22ம் தேதி வரையும் நடக்கிறது.

இதேபோல், மார்ச் 14ம் தேதி தொடங்கும் 10ம் வகுப்புதேர்வு 29ம் தேதி நிறைவு பெறுகிறது.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு அட்டவணையில், அனைத்து தேர்வுகளும் காலையில் நடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், 10ம் வகுப்பில் தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் ஆங்கிலம் இரண்டாம் தாள் ஆகிய 4 தேர்வுகள் மதியத்தில் நடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதுகுறித்து அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கூறியதாவது:

எப்போதும் இல்லாத வகையில், தற்போது மதியவேளையில் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நடக்கும் மார்ச் மாதத்தில், வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும். இதனால், மதிய வேளையில் தேர்வெழுத மாணவர்கள் சிரமங்களை சந்திக்க வேண்டி வரும்.

இதேபோல், முதல் 4 தேர்வுகளை மதியம் நடத்தி விட்டு, அதன்பின்னர் காலையில் தேர்வு நடத்தும் போது மாணவர்களிடையே தேவையற்ற குழப்பம் ஏற்படும். ஒரு சிலர், தேர்வு நேரத்தை தவறாக நினைத்துக் கொண்டு வந்தால், தேர்வெழுத முடியாத சூழ்நிலை கூட உருவாகலாம்.

பொதுவாக மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் காலை நேரங்களில் தான் புத்துணர்ச்சியுடன் காணப்படுவர். அப்போது மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும் சுறுசுறுப்புடன் நடக்கும்.

தற்போது அறிவித்துள்ளபடி மதிய வேளையில் தேர்வு நடத்தப்பட்டால், மாணவர்கள் மனச்சோர்வுடன் தேர்வெழுத வேண்டி வரும்.



எனவே, மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து தேர்வுகளையும் வழக்கம் போல காலை வேளையில் நடத்த வேண்டும். தற்போது வெளியிட்டுள்ள அட்டவணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.