Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 12, 2018

எம்.பி.பி.எஸ். விண்ணப்ப விநியோகம் தொடக்கம்: முதல் நாளில் 17,500 விண்ணப்பங்கள் விற்பனை




தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. முதல்நாளின் முடிவில் 17,598 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மருத்துவப் படிப்புகளுக்கு நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 6 -ஆம் தேதி வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் தொடங்கியுள்ளது.

இந்த ஆண்டும் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என அனைத்தையும் நீட் தேர்வின் அடிப்படையில் மாநில அரசே நிரப்ப உள்ளது. இதன் காரணமாக நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளிலேயே விண்ணப்பங்கள் விநியோகம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறுகிறது.




முதல்நாளான திங்கள்கிழமை அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 11,967 விண்ணப்பங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 5,631 விண்ணப்பங்களும் என மொத்தம் 17,598 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, இணையதளத்திலும் விண்ணப்பங்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். 

சென்னையைப் பொருத்தவரை அதிகபட்சமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 2,905 விண்ணப்பங்களும், சென்னை மருத்துவக் கல்லூரியில் 603 விண்ணப்பங்களும், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் 393 விண்ணப்பங்களும் விற்பனை செய்யப்பட்டன.

மூன்று மடங்கு உயர்வு: கடந்த ஆண்டு முதல்நாளில் 6,123 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. கடந்த ஆண்டைக் காட்டிலும் முதல் நாளன்றே மூன்று மடங்கு விண்ணப்பங்கள் அதிகமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. 

கட்டுக்கடங்காத கூட்டம்: 



எதிர்பாராதவிதமாக முதல் நாளிலேயே விண்ணப்பங்களை வாங்க மக்கள் குவிந்ததால், விண்ணப்ப விநியோகத்தில் குளறுபடிகள் ஏற்பட்டன. குறிப்பாக, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் வரிசை அதிக அளவில் இருந்ததால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர்.