Join THAMIZHKADAL WhatsApp Groups
எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகத்தில் ஜூன் 11-ஆம் தேதி முதல் தொடங்கியது. 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது.
விநியோகத்துக்கான நாள்கள் வழக்கத்தை விடக் குறைவாகவே காணப்பட்டதால், விடுமுறை நாள்களிலும் விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது.
39,000 விண்ணப்பங்கள்: இறுதி நாளான திங்கள்கிழமை அரசு மருத்துவ இடங்களுக்கு 798, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 512 என மொத்தம் 1,310 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. மொத்தம் 8 நாள்கள் நடைபெற்ற விநியோகத்தில் அரசு இடங்களுக்கு 24,933 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 13,338 என மொத்தம் 38,271 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களும் இதில் அடங்கும். கடந்த ஆண்டு 43,206 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கலந்தாய்வு என்று முதன்முதலில் அறிவிக்கப்பட்டு, அது தொடர்பான புரிதல் இல்லாததால் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு என பெரும்பாலானோர் இரண்டு விண்ணப்பங்களை வாங்கினர்.
இன்று கடைசி: பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) கடைசி நாள்.
இது தொடர்பாக தேர்வுக்குழுச் செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூறியது: இதுவரை 36,304 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி ஜூன் 28-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.