Friday, June 29, 2018

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படும் எனவும் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ், முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை படித்தளித்த அறிக்கை:



எம்.ஜி.ஆர். பெயரில் இருக்கை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டைப் போற்றும் வகையிலும், சமூகத்தின் மீதான அவரது ஆழ்ந்த அக்கறை, கலைத்தொண்டு, தமிழ் உணர்வு, மக்கள் பணி ஆகியவற்றை நாட்டு மக்களும், வெளிநாட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதற்காக, தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாடு ஆய்வு இருக்கை ரூ.1 கோடி வைப்புத் தொகையில் தொடங்கப்படும்.

ஆண்டுதோறும் ரூ.5 கோடியில்... முதல் கட்டமாக லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு, தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பார்க், மலேசியாவிலுள்ள மலேயா, இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் நிறுவப்படும். மேலும், தமிழர்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகள், பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் இருக்கைகள் அமைக்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.
தமிழ் அமைப்புகள் மாநாடு: உலக நாடுகள், இந்திய மாநிலங்களில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள், தாய்மொழியையும், கலையையும் பண்பாட்டையும் பேணிப் பாதுகாக்கும் வகையில் உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.5 கோடியில் நடத்தப்படும்.

இதில், தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு அவர்கள் மேற்கொண்டு வரும் தமிழாய்வுகள், எழுத்தாளர்களின் படைப்புகள், மொழிபெயர்ப்புகள், தமிழ் இலக்கியப் பணிகள் ஒன்றிணைக்கப்படும். ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், கவியரங்குகள், சொற்பொழிவு, பட்டிமன்றம், இலக்கியச் சுற்றுலா, உலகத் தமிழர் கலைத் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்படும். தமிழ் மொழியில் சொற்களைத் தொகுத்து சொற்குவை திட்டம் தொடங்கப்படும். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை தமிழ் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர கல்வி உதவித் தொகையாக ரூ.2,000 அளிக்கப்படும்.



பக்தர்கள் தங்கும் விடுதி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படும். நிதி வசதி இல்லாத ஆயிரம் கிராமப்புற கோயில்களில் திருக்கோயிலுக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.10 கோடி அளிக்கப்படும்.
1,000 கோயில்களுக்கு ரூ.10 கோடி: இந்து சமய அறநிலையத் துறை ஆளுகையின் கீழ் இல்லாத ஆதிதிராவிடர்-பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,000 கோயில்களுக்கு, ஒரு கோயிலுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.10 கோடி வழங்கப்படும்.

Popular Feed

Recent Story

Featured News