Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 27, 2018

புதிய பாடப்புத்தகங்கள்... ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி

நடப்புக் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகங்களை நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.*



மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இப்பயிற்சி சென்னையில் இன்று தொடங்கியது.

ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டில் பாடப்புத்தகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இதுவரை இல்லாத அளவுக்கு பாடங்களின் அளவும் தன்மையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வழக்கமான பாடப்புத்தக மாற்றத்தைப்போல அல்லாமல், இந்த முறை சற்று கனமாக உள்ளதால், புதிய உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதில் ஆசிரியர்களுக்கே சிரமமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.



இதனால் புதிய பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

இதில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒவ்வொரு பாடத்துக்கும் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியை முடித்தவர்கள் அவரவர் மாவட்டத்துக்குச் சென்று மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மற்ற ஆசிரியர்களுக்கு இதே பயிற்சியை வழங்குவார்கள்.



*அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பங்கேற்கும்வகையில் பின்னர் வட்டார அளவிலும் பயிற்சி விரிவாக்கப்படும்.