Join THAMIZHKADAL WhatsApp Groups
சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, சிவகங்கை, விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை, கோவை ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், பொள்ளாச்சி நாமக்கல், நாகப்பட்டினம் ஆகிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் டிஎன்பி மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான 42 இடங்கள் ரூ.2.52 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.
16 அரசு மருத்துவமனைகளில் 5 பிரிவுகளில் மருத்துவம் சார்ந்த உதவியாளர்களுக்கான 4 ஆண்டுகால பட்டப் படிப்பு ரூ.1.4 கோடி செலவில் புதிதாகத் தொடங்கப்படும்.
தாய்ப்பால் வங்கி: 15 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் உயிர் காக்கும் தாய்ப்பால் வங்கிகள் ரூ.1.5 கோடி செலவில் தொடங்கப்படும்.
தலசீமியா மற்றும் ஹீமோபீலியா போன்ற அரிய வகை மரபு நோய்களுக்கான சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகள் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கும் ரூ.18.84 கோடி செலவில் வழங்கப்படும்.
மேலாண்மைத் திட்டம்: தமிழகத்தில் உள்ள 309 அரசு மருத்துவமனைகள், 22 அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சார்ந்த 55 மருத்துவமனைகள், ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 105 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவத் தகவல் மேலாண்மைத் திட்டம் ரூ.37 கோடி செலவில் விரிவுப்படுத்தப்படும்.
கொசு ஒழிப்புப் பணி: தமிழகத்தில் கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா சிக்குன்குன்யா போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தவும், இதுபோன்ற நோய்களில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும் ரூ.12.93 கோடி செலவில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
பல்வேறு வகையான காய்ச்சல்களைக் கண்டறிந்து சிகிச்சையளித்திடவும், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஒருங்கிணைந்த காய்ச்சல் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்புத் திட்டம் திருப்பூரில் ரூ.4.35 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மற்றும் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் தாய் திட்டத்தின் கீழ் விபத்து சிகிச்சை மையங்களில் ரூ.28.3 கோடி செலவில் ஏற்படுத்தப்படும். தாய் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 9 விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களுக்கு 60 மருத்துவ அலுவலர்கள், 300 செவிலியர்கள் மற்றும் 342 இதர சுகாதாரப் பணியாளர்கள் ரூ.5.91 கோடி செலவில் புதிதாக பணி நியமனம் செய்யப்படுவர் என்றார்.