Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 20, 2018

எம்.பி.பி.எஸ்.: 43,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு: ஜூன் 28-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு




எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர 43,935 விண்ணப்பங்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறுகிறது. நிகழ் கல்வியாண்டில் தமிழக இடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 11 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற்றது. 

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். என இரண்டு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பமே விநியோகிக்கப்பட்டது. 

23 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 38,271 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. 

இது தவிர, இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.



43 ஆயிரம் விண்ணப்பங்கள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி நேரடி விநியோகத்தில் பெறப்பட்டவை, இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டவை என மொத்தம் 43,935 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.

ஜூலை 1-இல் கலந்தாய்வு தொடக்கம்: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூன் 28-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.