Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 24, 2018

எம்.பி.பி.எஸ். சேர்க்கை: இருப்பிடச் சான்றிதழ் விதிமுறைகளில் மாற்றம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கலந்தாய்வில் போலி இருப்பிடச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விண்ணப்பங்களின் தகவல் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த ஆண்டு கலந்தாய்வில் போலி இருப்பிடச் சான்றிதழ்களைச் (சஹற்ண்ஸ்ண்ற்ஹ் ஸ்ரீங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங்) சமர்ப்பித்து கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்ததாக 9 மாணவர்கள் மீது புகார் எழுந்தது.

திருத்தம்: கடந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் மருத்துவக் கல்வி இயக்ககம் வகுத்திருந்த விதிமுறைகளின்படி 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழகத்தில் படித்தவர்கள் இருப்பிடச் சான்றிதழ் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நிகழ்கல்வியாண்டில் இது தொடர்பான விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை.



நீட் தேர்வு விண்ணப்பம்: தமிழக இடங்களுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழர்கள் என்று இடம் கோர முடியாது. நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தில் வேறு மாநிலத்தை தனது சொந்த மாநிலமாகக் குறிப்பிட்டவர்கள், தமிழக இடங்களுக்கு உரிமை கோர முடியாது.
பெற்றோரின் ஆவணங்கள் அவசியம்: தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வேறு மாநிலங்களில் படித்திருந்தால் கட்டாயம் இருப்பிடச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர அந்த மாணவரின் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிவிக்கும் அவர்களது பிறப்பு சான்றிதழ், பத்தாம் வகுப்பு சான்றிதழ், பிளஸ் 2 சான்றிதழ், டிப்ளமோ அல்லது இளநிலை கல்வி பெற்றதற்கான சான்றிதழ், குடும்ப அட்டை போன்றவற்றின் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சரியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்காதவர்கள் அனைத்துப் பிரிவினருக்கான பட்டியலில் இடம்பெறுவர்.



அனைத்துப் பிரிவினர் பட்டியல்: வேறு மாநிலத்தைச் சேர்ந்த, தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து, நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தில் தமிழகத்தைச் சொந்த மாநிலமாகக் குறிப்பிட்டவர்களும் கலந்தாய்வின் போது அனைத்துப் பிரிவினருக்கான பட்டியலில் இடம்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலியான சான்றிதழ்கள் கொடுத்து எம்.பி.பி.எஸ். சேர்க்கை பெற்றிருப்பது வருங்காலத்தில் கண்டறியப்பட்டால் குறிப்பிட்ட மாணவர்கள் கல்லூரியில் இருந்து உடனே நீக்கப்படுவார். மேலும் அந்த மாணவர் மீதும் அவரது பெற்றோர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.