Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 12, 2018

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது




செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவ விநியோகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் திங்கள்கிழமை (ஜூன் 11) தொடங்கி வரும் 18ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. 

இதையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் திங்கள் கிழமை தொடங்கியது. அரசு ஒதுக்கீட்டு விண்ணப்பங்களுக்கான கட்டணம் ரூ. 500 எனவும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ரூ.1000 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 



இணைய தளங்களிலும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் காசோலையுடன் சேர்த்து வரும் 19ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் உஷா சதாசிவன் மாணவர்களுக்கு திங்கள்கிழமை விண்ணப்பங்களை வழங்கி, அவற்றின் விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். துணை முதல்வர் அனிதா உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர் ஆகியோர் உடனிருந்து விண்ணப்பங்களை வழங்கினர். இது தொடர்பாக கல்லூரி முதல்வர் உஷா சதாசிவன் மற்றும் துணை முதல்வர் அனிதா ஆகியோர் கூறியது:
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டான கடந்த 1965 முதல் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு 50 இடங்களாகவே இருந்து வந்தது.
இதை அதிகரிக்க மருத்துவக் கல்லூரி மற்றும் அரசியல் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் தனியார் அமைப்புகள் என பல்வேறு தருப்பினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 




இதையடுத்து தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீடு 100 இடங்களாக அறிவிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த 100 இடங்களில் 85 இடங்கள் மாநில ஒதுக்கீடாகவும், 15 இடங்கள் இந்திய ஒதுக்கீடாகவும் உள்ளன. 100 இடங்களாக மாற்றப்பட்ட பின்னர் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 100 சதவிகித தேர்ச்சியை பெற்றுத்தந்துள்ளனர். 

இதே போல் முதுநிலை மருத்துவப்படிப்புக்கு 80 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்பிலும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிறந்த முறையில் படித்து வருகின்றனர். அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 என்றும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் (THE SECRETARY, SELECTION COMMITTEE, KILPAUK,
CHENNAI) தி செகரட்டரி, செலக்ஷன் கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை -600 010 என்ற முகவரிக்கு வரைவோலையாக (டிடி) எடுத்துக் கொடுத்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். 

எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு கட்டணமின்றி விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். மாணவர்கள் ஜாதிச் சான்றிதழ் நகலைக் கொடுத்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 

இதுவரை 1900 விண்ணப்பங்கள் வந்துள்ளன. திங்கள்கிழமை (ஜூன் 11) முதல் 18ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை வழங்குகிறோம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேற்கூறிய முகவரிக்கு சென்று சேர வேண்டும். ஜூலை 1ஆம் தேதி நீட் கட்-ஆஃப் பார்த்து சேர்க்கை நடைபெறும் என அவர்கள் கூறினர். 

விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளிலேயே தங்களது பிள்ளைகளை பெற்றோர்கள் அழைத்து வந்து விண்ணப்பத்தை வாங்குவதற்காக ஆர்வத்துடன் காத்திருந்தனர்.