Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 27, 2018

எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு ஆதார் கட்டாயம்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் ஆதார் அட்டையைக் காண்பித்து அதன் நகலைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.



போலி இருப்பிடச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்ததாக கடந்த ஆண்டு 9 மாணவர்கள் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில், போலி இருப்பிடச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படுவதைத் தடுக்க, கலந்தாய்வில் ஆதார் அட்டையைக் காண்பித்து அதன் நகலை மாணவர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து மருத்துவக் கலந்தாய்வில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரங்களை மருத்துவக் கல்வி இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

ஆவணங்கள்: கலந்தாய்வில் பங்கேற்போர் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு மற்றும் மதிப்பெண் அட்டை, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், 6 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த பள்ளியில் வழங்கிய ஆளறிச் சான்றிதழ், கடைசியாகப் படித்த பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் அல்லது தற்போது படித்து வரும் நிறுவனத்தின் ஆளறிச் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த ஆனால் 6 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வேறு மாநிலத்தில் படித்தவர்கள் இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை, ஜாதி சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் (பொருந்துவோருக்கு), குடும்ப அட்டை அல்லது கடவுச்சீட்டு, பெற்றோருக்கும் மாணவருக்குமான உறவைக் குறிப்பிடும் ஆவணம் ஆகிய அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
பெற்றோருக்கான ஆவணங்கள்: மேலும், அந்த மாணவரின் பெற்றோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிவிக்கும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பட்டயம் அல்லது இளநிலை அல்லது தொழில்படிப்பை படித்ததற்கான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் (பொருந்துவோருக்கு) ஆகிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 



அசலும் நகலும்: கலந்தாய்வில் பங்கேற்போர் இந்த ஆவணங்களின் அசலைக் கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும். இதுதவிர ஆவணங்களின் நகல்களையும் உடன் வைத்திருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் பரிசோதிக்கப்பட்டு திரும்பக் கொடுக்கப்படும்; ஆவணங்களின் நகல்களைக் கலந்தாய்வில் சமர்ப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாமல் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.