Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 11-ஆம் தேதி தொடங்கியது. மாநிலத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது.
இதுவரை 35,036 விண்ணப்பங்கள் விற்பனை: தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை நடைபெற்ற விநியோகத்தில் அரசு இடங்களுக்கு 2286, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 268 என மொத்தம் 2,554 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை அரசு இடங்களுக்கு 22,961, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 12,075 என மொத்தம் 35,036 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
விடுமுறையிலும் விநியோகம்: இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகைக்காக வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வார இறுதிநாள்கள் வருவதால் மருத்துவ விண்ணப்ப விநியோகம் நடைபெறுமா என்ற சந்தேகம் மாணவர்களிடையே நிலவுகிறது.
இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் கூறியது: கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவான நாள்களே விண்ணப்ப விநியோகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திங்கள்கிழமை (ஜூன் 18) விண்ணப்பங்களைப் பெற கடைசி நாளாகும். அதன் காரணாக விடுமுறை தினங்களிலும் தொடர்ந்து விண்ணப்பங்களை விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையும் பெறலாம்: வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களிலும் விண்ணப்பங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்று அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, விடுமுறை தினங்களிலும் விண்ணப்ப விநியோகம் வழக்கம் போல் நடைபெறும் என்றார் அவர்.