Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 11, 2018

நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூன் இறுதிக்குள் துவங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்




'ஜூன் இறுதிக்குள் தமிழகத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடங்கப்படும்’’ என்று அமைச்சர் செங்கோட்ைடயன் நேற்று அறிவித்தார்.


ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.41 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கட்டிடங்கள் கட்டப்படவுள்ளது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் முன்னிலை வகித்தார்.

இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பூமிபூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய பாடத்திட்டங்கள் தொடர்பான புத்தகங்கள் பள்ளிகளில் கிடைப்பதில்லை என்று கூறுவது தவறான செய்தி. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளி திறந்த 3 நாளில் புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.



தனியார் பள்ளிகளுக்கு தேவையான புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகிறது. இதற்கான பணிமுடிந்த பிறகு தனியார் பள்ளிகளிலும் புத்தகங்கள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து முதல்வரும் அந்த துறையின் அமைச்சரும்தான் பதில் அளிப்பார்கள். நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் ஆயிரத்து 412 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான கட்ஆப் மதிப்பெண் நாளை வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஜூன் மாத இறுதிக்குள்...: கோபி அருகே உள்ள நம்பியூரில் அரசு கலைக்கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறும்போது, 'இந்த ஆண்டு ஜூன் இறுதிக்குள் தமிழகத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடங்கப்படும். ரூ.2 லட்சம் வரை செலவு செய்து வெளி மாநிலங்களில் நீட் தேர்வு பயிற்சி பெறும் நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு வரையிலான சீருடை, இரண்டு நாட்களுக்குள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.