Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 17, 2018

பி.இ.: சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு




பி.இ. சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூன் 17) நிறைவடைகிறது. இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்கள் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதியில்லை என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் பி.இ. சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வை ஜூலை 6 ஆம் தேதி தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு ஜூன் 2-ஆம் தேதி வரை நடைபெற்றது.
பின்னர் விண்ணப்பப் பதிவு செய்தோருக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 கலந்தாய்வு உதவி மையங்களில் ஜூன் 8 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சென்னை மையத்தில் மட்டும் 3 நாள்கள் கூடுதலாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 17) வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு வருகிறது.



கலந்தாய்வில் அனுமதி இல்லை: உதவி மையங்களில் நடைபெறும் அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத விண்ணப்பதாரர்கள், பி.இ., ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதியில்லை என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

எனவே, இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள், சென்னை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அத்தாட்சி: விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அத்தாட்சியை பல்கலைக்கழகம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:-

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனரா, இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான அத்தாட்சியை அளிக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர் அல்லது பங்கேற்காதவர் என்ற அத்தாட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை இணைய தளத்துக்குச் (www.tnea.ac.in) சென்று இதைப் பார்த்துக்கொள்ளலாம் என்றார்.