Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 29, 2018

தமிழக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் தமிழக மாணவர்களுக்கே உறுதி செய்யப்படும்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தமிழக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் நமது மாநில மாணவர்களுக்கே உறுதி செய்யப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், நீட் தேர்வு குறித்த விவகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பினார். அப்போது அவர் பேசியது:




நீட் தேர்வின் காரணமாக, மருத்துவர்கள் ஆக வேண்டுமென்ற ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுடைய எதிர்கால கனவு சிதைக்கப்பட்டு, இனி வரக்கூடிய காலங்களில் போதிய மருத்துவர்கள் கிராமங்களில் இல்லாத சூழ்நிலை உருவாகிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

நீட் கேள்வித்தாளிலும், தேர்வு மையங்களிலும் கூட குழப்பம் இருக்கிறது. நீட் தேர்வின் முடிவுகள் வெளிவந்ததற்குப் பிறகு இருப்பிடச் சான்றிதழிலும் தொடக்கத்தில் இருந்தே குழப்பம். இதனால், தமிழக மாணவர்கள் மன அழுத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.




நீட் தேர்வுக்கு இதே அவையில் கடந்த ஆண்டு அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீட் மசோதாவின் நிலை என்ன? தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவின் நிலை என்ன என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அந்த மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா என்றும் புரியவில்லை. மத்திய அரசுக்கு தமிழக அரசு தீவிர அழுத்தம் கொடுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கக்கூடிய அந்த மசோதா குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? தொடர்ந்து மௌனம் சாதிப்பதற்கு என்ன காரணம்?
நீட் மசோதாவின் இப்போதைய நிலை என்ன என்பதைப் பற்றி முதல்வர் விளக்கிட வேண்டும். ஒருவேளை மத்திய அரசு அந்த மசோதாவை வேண்டுமென்றே விதிமுறைகளின்படி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பிலே போட்டு வைக்கப்பட்டிருக்கும் என்று சொன்னால், அந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் அனுமதி பெறவும், உடனடியாக மத்திய அரசுக்கு உத்தரவிடவும் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக ஒரு வழக்கு தொடர வேண்டும் என்றார் ஸ்டாலின்.
இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பதில்: மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் 3 ஆயிரத்து 393 பேர் சேர்வதற்கு வழி உள்ளது. நம் மாநிலத்தின் உரிமையை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நமக்குரிய இடங்கள் நமக்குக் கிடைக்கும். இதில் அரசு தெளிவாக இருக்கிறது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்தில் இருப்பிடச் சான்றிதழ் வாங்கி தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இதனை எல்லாம் எதிர்கொண்டுதான் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இந்த ஆண்டு மருத்துவக் கல்வியில் மாணவர்கள் சேருவதற்கான தகவல் கையேட்டில் 12 கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. நமது மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் எந்தக் காரணத்தை கொண்டும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் சேர முடியாது.

குற்றவியல் நடவடிக்கை: தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் தமிழகத்தில் இருப்பிட உரிமை கோர முடியாது. 2018-ஆம் ஆண்டு நீட் தேர்வினை வெளி மாநிலத்தில் இருப்பிடச் சான்று அளித்து எழுதிய மாணவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர் என இருப்பிடச் சான்று பெற்று உரிமை கோர முடியாது. வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு போலிச் சான்றிதழ் பெற்று சேர வந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.



குடியரசுத் தலைவரின் அலுவலகத்தில்... நீட் தேர்வை எதிர்த்து சட்டப்பேரவையில் நிறைவேற்றிய இரண்டு தீர்மானங்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அந்த இரண்டு தீர்மானங்களும் குடியரசுத் தலைவரின் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதற்கான காரணத்தைக் கேட்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.