Join THAMIZHKADAL WhatsApp Groups
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் செயல்பட்டு வரும் தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திலும், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் இயங்கி வரும் காய்கறி மகத்துவ மையத்திலும், தோட்டக்கலை அறிவியல் சார்ந்த ஈராண்டு பட்டயப் படிப்பு நடப்புக் கல்வி ஆண்டில் துவங்கப்பட்டு, ஆண்டுதோறும் ஒவ்வொரு மையத்திலும் 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
இவ்விரண்டு மையங்களிலும், மாணவர்கள் பயில்வதற்காக ஏற்கனவே உருவாக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடுதல் வசதிகளை உருவாக்குவதற்கு இரண்டு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்.
வேளாண் சார்ந்த அனைத்து துறைகளின் விரிவாக்க சேவைகளையும் ஒரே இடத்தில் விவசாயிகளுக்கு வழங்கும் வகையில், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் இதுவரை 146 வட்டாரங்களில் 219 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில், மேலும் 9 வட்டாரங்களில் இம்மையங்கள் 18 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் புதிதாக "இரு நூற்றாண்டு பசுமைப் புல்வெளி" எனும் புதிய பூங்கா ஒன்று 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
மேலும், வருடந்தோறும், சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அரசு ரோஜாப் பூங்காவிற்கு வருகை புரிவதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகி, வாகனம் நிறுத்துவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு, நீலகிரி நகரத்தில் 500 வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். ஆக மொத்தம் 127 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இன்று நான் அறிவித்துள்ள இத்திட்டங்கள் மூலம் தமிழ்நாடு வேளாண்மையும், விவசாயிகளின்t வாழ்வாதாரமும் மேலும் செழிக்க வழிவகை ஏற்படும்.