Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 30, 2018

மருத்துவக் காப்பீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!!!


திடீர் திடீர் என்று தாக்கும் உடல்நல பாதிப்புகள், எகிறும் மருத்துவச்
செலவுகள் என்று இன்றைய சூழலில் மருத்துவக் காப்பீடு அத்தியாவசியமாகிவிட்டது. 

உடல்நலக் குறைவு வாட்டும்போது, அதற்கு ஆகும் செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கவலையும் சம்பந்தப்பட்டவர்களை அலைக்கழிக்கும். இந்நிலையில், மருத்துவக் காப்பீடு இருந்தால் ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம். தனிநபர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடும்ப மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்று இதில் இரண்டு வகைகள் உண்டு.



தனிநபர் மருத்துவக் காப்பீட்டில், பாலிசிதாரர் ஒருவர் மட்டுமே மொத்த காப்பீட்டுத் தொகையையும் உபயோகிக்க முடியும். குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகக் காப்பீடு எடுப்பதற்குப் பதிலாக, 'பேமிலி புளோட்டர் பாலிசி' எனப்படும் ஒரே ஒரு குடும்பக் காப்பீடு எடுக்கலாம்.

இதன் மூலம் அவரவர் தேவைக்குத் தகுந்தாற்போல் மொத்த காப்பீட்டுத் தொகையைப் பகிர்ந்து பயன்பெறலாம். காப்பீட்டு நிறுவனங்கள் இந்த இருவகைத் திட்டங்களையும் தருவதால் நமக்குத் தேவையான சிறந்த திட்டத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். பெரிய குடும்பமாக இருந்தால், குடும்பக் காப்பீடு திட்டம் நல்லது. எனினும் ஒருவர் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளானால், தனிநபர் காப்பீடே சிறந்தது.

மொத்த காப்பீட்டுத்தொகையைத் தேர்வு செய்யும்போது, உங்கள் நகரத்தில் மருத்துவத்துக்கு எவ்வளவு செலவாகும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இரண்டாம்கட்ட நகரங்களைக் காட்டிலும் பெருநகரங்களில் அதிக மருத்துவச் செலவுகள் ஏற்படும். நீங்கள் மருத்துவமனையில் சேரும்பட்சத்தில், குறைந்த காப்பீட்டுத்தொகை திட்டங்கள் எந்தப் பலனையும் தராது. ஆனால், அதிகக் காப்பீட்டுத் தொகைக்கு, பிரீமியம் தொகை அதிகம் என்பதால், நன்கு ஆராய்ந்து காப்பீட்டுத் தொகையை முடிவு செய்யவேண்டும்.

மருத்துவக் காப்பீட்டில் 'கோ-பே' மற்றும் காத்திருப்புக் காலத்தையும் கவனிக்க வேண்டும். 'கோ-பே' என்பது பாலிசிதாரர் தனது மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்றுக்கொள்வது. இம்முறை, காப்பீட்டுத் திட்டங்களைப் பொறுத்து கட்டாயமா, கட்டாயமில்லையா எனத் தெரியும். மூத்த குடிமக்களின் காப்பீட்டுத் திட்டங்களுக்கு இது கட்டாயமாகும். இம்முறையில் பிரீமியம் தொகை குறையும் என்பதால், 'கோ-பே' திட்டத்தைத் தேர்ந்தெடுத்து மருத்துவச் செலவில் ஒரு பங்கை ஏற்கலாம்.



1 முதல் 6 ஆண்டுகள் வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் காத்திருப்பு கால முறையும் உள்ளது. குறிப்பிட்ட வகை அல்லது ஏற்கனவே உள்ள நோய்களுக்கு 1 முதல் 6 ஆண்டுகள் வரை காத்திருப்புக் காலம் தரப்படுகிறது. ஆயினும், குறைந்த காத்திருப்புக் காலம் கொண்ட திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

ஆயுள்,, மருத்துவம், வாகனம் என எந்தக் காப்பீடு எடுத்தாலும், உள்ளடக்கம் மற்றும் நீங்கல்களைக் கவனித்தல் அவசியம். இவை காப்பீட்டு நிறுவனங்களைப் பொறுத்து வேறுபடும். சிலநேரங்களில் உங்களிடம் மருத்துவக் காப்பீடு இருந்தும் சில பிரிவுகள் அதில் உள்ளடங்காவிடில் சிரமப்பட நேரிடும்.





காப்பீட்டு நிறுவனங்களும் மருத்துவமனைகளும் ஒரு வலையமைப்பில் கூட்டுச் சேர்ந்து காப்பீட்டாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பணமில்லா மருத்துவ வசதி போன்ற சிறப்புச் சேவைகளை வழங்குகின்றன. எனவே, காப்பீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யும்முன் குறிப்பிட்ட நிறுவனத்தின் வலையமைப்பை உறுதி செய்யவேண்டும். 

அதன் மூலம் அவசரகாலங்களில் எளிதாக மருத்துவ வசதி பெறலாம். மருத்துவக் காப்பீடு அவசியமானது, அதில் நமக்குத் தேவையான அம்சங்கள் அடங்கிய, நியாயமான பிரீமியம் செலுத்தும் திட்டத்தைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமானது.