Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 16, 2018

அகில இந்திய மருத்துவ இடங்களைப் பெற தமிழக மாணவர்கள் முயற்சிக்க வேண்டும்: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்




தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களைப் பெற மாணவர்கள் முயற்சிக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 456 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த இடங்களில் வேறு மாநில மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து விடுகின்றனர்.



நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழக மாணவர்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களைத் தேர்வு செய்யாமல் தமிழக அரசு ஒதுக்கீட்டில் இடங்களைப் பெறுவதே இதற்குக் காரணம். இதனால் நீட் தேர்வில் சற்று குறைவான மதிப்பெண் பெற்ற தமிழக மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போய்விடுகின்றது. இது தமிழகத்துக்கு மிகப்பெரிய இழப்பாகும்.

எனவே, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள தமிழக மாணவர்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களைப் பெறுவதற்கு முன்வர வேண்டும். இதன் மூலம் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் வேறு மாநிலத்தவர் சேரும் எண்ணிக்கை குறையும். அதே சமயம் மாநில அரசு நடத்தும் கலந்தாய்வின் மூலம் 85 சதவீத இடங்களில் சற்று குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.