Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 21, 2018

வேளாண் படிப்புக்கான தேசிய நுழைவுத் தேர்வு: கோவை மாணவர்களுக்கு குஜராத், ம.பி.யில் தேர்வு மையம்




இந்திய அளவிலான வேளாண் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த கோவை மாணவர்களுக்கு குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருப்பதால் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஏஆர்) கீழ் நாடு முழுவதும் செயல்படும் வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் நடத்தப்படும் இளநிலை வேளாண்மை, தொழில்நுட்பப் படிப்புகளில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு (ஏஐஇஇஏ) மூலம் நிரப்பப்படுகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஏராளமானோர் மே 18-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை இத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனர். தேர்வுகள் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வறை நுழைவுச் சீட்டுகளை ஜூன் 15-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.



அதன்படி, நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்த கோவை செளரிபாளையம் கெளதம் பாரதி, வடவள்ளி வெங்கடேஷ், வீரகேரளம் கெளசிகன், மேட்டுப்பாளையம் ஹர்ஷவர்தன் ஆகிய மாணவர்களுக்கு குஜராத் மாநிலம் ஆமதாபாத், மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் தேர்வு மையங்களைத் தேர்வு செய்திருந்த நிலையில் வெளி மாநிலங்களில் இடம் ஒதுக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து மாணவர் கெளதம் பாரதியின் தாய் விமலா பாரதி கூறியதாவது: காரமடையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ற எனது மகன், நீட் உள்ளிட்ட அகில இந்தியத் தேர்வுகளுக்காகத் தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், வேளாண் படிப்புக்கான தேர்வுக்கு மே மாதம் விண்ணப்பித்தார். நுழைவுச் சீட்டுகளை ஜூன் 15-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 18-ஆம் தேதிதான் பதிவிறக்கம் செய்ய முடிந்தது. அதில் பார்த்த பிறகே எனது மகனுக்கு ஆமதாபாதிலும், அவரது நண்பர்களான வெங்கடேஷ், கெளசிகன் ஆகியோருக்கு போபாலிலும் மையம் ஒதுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.



கோவையில் இருந்து ஆமதாபாதுக்கு நேரடி விமானமும் இல்லை. மும்பை வழியாக சுமார் 15 மணி நேரம் சுற்றிச் செல்லும் விமானம்தான் உள்ளது. அதிலும் ஒருவருக்கு ரூ.7 ஆயிரத்துக்கும் மேல் கட்டணம் வருகிறது.
நாங்கள் கோவை, சென்னை, சேலத்தில் தேர்வு மையம் கேட்டிருந்தோம். குஜராத்துக்குப் பதிலாக கேரளம், கர்நாடகத்தில் ஒதுக்கியிருந்தால் கூட சிரமப்பட்டு அழைத்துச் சென்றிருப்போம். ஆனால் குஜராத்துக்கோ மத்தியப் பிரதேசத்துக்கோ செல்ல முடியாது என்பதால் கஷ்டப்பட்டு படித்த படிப்பு வீணாகிவிடுமே என்ற கவலையில் எனது மகன் இருக்கிறார் என்றார்.