Thursday, July 12, 2018

பி.இ. சிறப்புப் பிரிவுக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு: வரும் 16-இல் தொடக்கம்

பி.இ. சிறப்புப் பிரிவினருக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 16 -ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.



முதல் கட்டமாக சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வை நடத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 6) தொடங்கி மூன்று நாள்கள் கலந்தாய்வு நடத்தப்பட்டது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேர்க்கை நடத்தப்பட்டது. இதில் 117 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களை பெற்றனர்.

இரண்டாம் நாளில் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு சேர்க்கை நடத்தப்பட்டது. இதில் அழைக்கப்பட்ட 230 பேரில் 67 பேர் மட்டும் இடங்களைத் தேர்வு செய்தனர்.

மூன்றாம் நாளில் விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்க அழைக்கப்பட்ட 684 பேரில், 282 பேர் மட்டும் இடங்களைத் தேர்வு செய்தனர்.



இரண்டாம் கட்ட கலந்தாய்வு: சிறப்புப் பிரிவில் காலியாக உள்ள பி.இ., இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 16 -ஆம் தேதி முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், ஜூலை 17 -ஆம் தேதி விளையாட்டுப் பிரிவினருக்கான காலி இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்கத் தகுதியுடைய மாணவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் கலந்தாய்வுக்கு வரும்போது அந்த அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து, கட்டணத்துக்கான வரைவோலையுடன் எடுத்து வரவேண்டும்.


மாணவர்களுக்கு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலமும் இதற்கான அறிவுறுத்தல்கள் வியாழக்கிழமை (ஜூலை 12) அனுப்பப்படும் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.



Popular Feed

Recent Story

Featured News