Sunday, July 15, 2018

கடந்த 3 ஆண்டுகளாக 400 வரலாற்று ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக காத்திருப்பு: 1:1 விகிதாச்சாரத்தை பின்பற்ற கோரிக்கை

தமிழகம் முழுவதும் கடந்த 3 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்காததால், 400 வரலாற்று பட்டதாரி ஆசிரியர்கள் பரிதவிப்பில் உள்ளனர். இதனால் 1:1 என்ற விகிதாச்சாரத்தை பின்பற்றி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இப்பள்ளிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேல்நிலைப்பள்ளிகளை பொறுத்தவரை, தேர்வு வாரியம் மூலம் நேரடி தேர்வாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலமும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.



பதவி உயர்வை பொறுத்தவரை, பட்டதாரி ஆசிரியர்களின் சீனியாரிட்டி அடிப்படையில், காலியிடங்களுக்கு ஏற்ப முதுகலை ஆசிரியராக நியமிக்கப்படுகின்றனர். கடந்த 2000ஆண்டு வாக்கில் மாநிலம் முழுவதும் வரலாற்றை முதன்மை பாடமாக கொண்டு படித்த ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது.

இதனையடுத்து, மாற்றுப்பாடமாக வரலாற்றை படித்தவர்களுக்கும், முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவிஉயர்வு வழங்கப்பட்டது. அதாவது 3:1 என்ற அடிப்படையில், 3 பேர் மாற்றுப்பாடங்கள் படித்தவர்களும், ஒருவர் வரலாறு படித்தவருமாக முதுகலை பட்டதாரி ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டனர். இதே நடைமுறை கடந்த 2014ம் ஆண்டுவரை பின்பற்றப்பட்டு வந்தது.

இதனிடையே வரலாற்று துறையில் வாய்ப்புகள் அதிகமானதையடுத்து, ஏராளமானோர் அதனை முதன்மை பாடமாக எடுத்து பட்டதாரி ஆசிரியராகினர். இதனால், நேரடி வரலாற்று பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்தது.

இதனையடுத்து, வரலாற்றை முதன்மை பாடமாக எடுத்து பணிபெற்றவர்களுக்கு மட்டும், முதுகலை ஆசிரியராக பதவிஉயர்வு வழங்க வேண்டும் என தர்மபுரியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன்பேரில், வரலாற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க, தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



மாநிலம் முழுவதும் சுமார் 400க்கும் மேற்பட்ட வரலாற்று துறை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி கமலக்கண்ணன் கூறுகையில், ‘‘உயர்நீதிமன்ற தடையின் காரணமாக பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதால், 400 வரலாற்று ஆசிரியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பரிதவிப்பில் உள்ளனர்.

தடையை நீக்கும் நடவடிக்கைகளில், மாநில அரசும் முனைப்பு காட்டவில்லை. இதனால், ஏராளமான ஆசிரியர்கள் பதவிஉயர்வு பெறாமலேயே, ஓய்வு பெற்று சென்றுவிட்டனர். அவர்களுக்கான பணப்பலன்கள் கிடைக்கவில்லை. பதவிஉயர்வு நிறுத்தப்பட்டதால், மாநிலம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளில் முதுகலை பட்டதாரி பணியிடம் காலியாக உள்ளது. இதனால், மாணவர்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2000ஆண்டுகளில் பற்றாக்குறை அதிகமாக இருந்ததால், அந்த 3:1 விகிதாச்சாரம் கடைபிடிக்கப்பட்டது.



ஆனால் தற்போது ஏராளமானோர் வரலாற்றை முதன்மை பாடமாக கொண்டவர்களாக இருப்பதால், அவர்களின் கோரிக்கையை கருத்தில் கொள்ள வேண்டும். அதேசமயம் மாற்றுப்பாடமாக படித்தவர்களும் பாதிக்கப்படாமல் இருக்க, 1:1 என்ற விகிதாச்சாரத்தை கடைபிடிக்கலாம். எனவே தமிழக அரசு இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவிஉயர்வு வழங்க வேண்டும்,” என்றார்

Popular Feed

Recent Story

Featured News