Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 24, 2018

எம்.பி.பி.எஸ்.: ஜூலை 30-இல் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்க உள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் அரசு இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு ஜூலை 16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மூலம் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்கி புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவித்தது. இதன் காரணமாக அகில இந்திய கலந்தாய்வு மற்றும் தமிழகத்தில் நடைபெற்று வந்த கலந்தாய்வு என அனைத்தும் நிறுத்தப்பட்டன.



இந்த வழக்கை எதிர்த்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்குத் தடை விதித்தது.
இதனையடுத்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு மீண்டும் தொடங்க உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 516 எம்.பி.பி.எஸ்., 715 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 2018-2019-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புக்கு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 30, 31 ஆகிய தேதிகள் நடைபெறும். விரிவான கலந்தாய்வு அட்டவணை www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விரைவில் வெளியிடப்படும்.



கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்