கலை -அறிவியல் கல்லூரிகள் ஜூலை 31 வரை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி: ஒரு துறையின்கீழ் 4 பிரிவுகள் தொடங்கவும் ஒப்புதல் - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, July 28, 2018

கலை -அறிவியல் கல்லூரிகள் ஜூலை 31 வரை மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி: ஒரு துறையின்கீழ் 4 பிரிவுகள் தொடங்கவும் ஒப்புதல்

கலை -அறிவியல் கல்லூரிகளில் ஜூலை 31 -ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.




பல கல்லூரிகளில் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதாலும், துறை பிரிவுகளின் எண்ணிக்கை கூடியிருப்பதாலும் இந்த கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறினார்.

கடந்த 2013 -ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது. அதே நேரம், கலை -அறிவியல் படிப்புகள் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த ஆர்வம் 2018 -19 -ஆம் கல்வியாண்டில் சற்று கூடுதலாக காணப்படுகிறது. 

சென்னை மாநிலக் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, காயிதே மில்லத் கல்லூரி போன்ற அரசு கல்லூரிகளிலும், பிரபல தனியார் கலை -அறிவியல் கல்லூரிகளிலும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதலாக மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இதன் காரணமாக அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களின் எண்ணிக்கையை 20 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது. 

இதே போன்று சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் கீழ் உள்ள இணைப்புக் கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ளவும், புதிய படிப்புகளைத் தொடங்கிக் கொள்ளவும், துறைப் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.



ஜூலை 31-ஆம் தேதி வரை: மேலும், இந்த கூடுதல் இடங்களில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவும், சில மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வுசெய்யும்போது காலியாகும் கலை -அறிவியல் படிப்பு இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையிலும், ஜூலை 31 -ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியது:

மாணவர்களின் ஆர்வம் காரணமாக, 5 கல்லூரிகளில் 9 துறைகளின்கீழ் வரும் பிரிவிகளின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் கோரிக்கை வைத்த ஒரு சில கல்லூரிகளில் ஒரு துறையின்கீழ் 4 பிரிவுகள் வரை தொடங்கிக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 



இதுவரை ஒரு துறையின்கீழ் அதிகபட்சம் மூன்று பிரிவுகளைத் தொடங்குவதற்கு மட்டுமே பல்கலைக்கழகம் அனுமதி வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மாணவர் சேர்க்கை இடங்கள் மற்றும் துறைப் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக, கலை -அறிவியல் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்புள்ளது என்பதாலும், பல்கலைக்கழகத்தின்கீழ் வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட கல்லூரிகளில் வரும் 31-ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அதன் பிறகு பருவத் தேர்வு வந்துவிடும் என்பதால், ஜூலை 31 ஆம் தேதிக்குப் பிறகு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது என்றார் அவர். 



55 புதிய படிப்புகள்: கலை -அறிவியல் படிப்புகள் மீது ஆர்வம் அதிகரித்திருக்கும் காரணத்தால் கோரிக்கை வைத்த 30 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 55 புதிய இளநிலை படிப்புகளையும், 10 புதிய முதுநிலை படிப்புகளையும் தொடங்கிக் கொள்ளவும் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. 

மேலும், 2018 -19 -ஆம் கல்வியாண்டில் 3 புதிய கலை-அறிவியல் கல்லூரிகளும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டுள்ளது எனவும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post Top Ad