Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 20, 2018

அடுத்த 4 ஆண்டுகளில் தேசிய போட்டி தேர்வில் தமிழக மாணவர்கள்: உதயச்சந்திரன்

சேலம் மாவட்டம் ஓமலூரில், புதிய பாடத் திட்டம் குறித்து, கருத்தாளர்களுக்கு நடந்த ஆலோசனைக் கூட்டம், பள்ளி கல்வித்துறை அரசு செயலர் உதயச்சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது.

அப்போது அவர் பேசியதாவது: பாட புத்தகங்களை எழுதும் பணியை, ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனரும் சேர்ந்து தயாரிப்பர். இந்த முறை அவை மாற்றப்பட்டு, பாடப்புத்தகம் எழுதுவதை, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது. 



இந்திய அளவில் கல்வியாளர்கள், நிர்வாக அதிகாரிகள், பல மாநில கருத்தாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், என்.ஜி.ஓ.,க்கள், ஓவியர்கள் உள்ளிட்ட பலருடைய ஆலோசனைகள், கருத்துகளை உள்வாங்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. துவக்கப்பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளை எளிதாக கையாளும் வகையில், தெரிந்த சொற்களை கொண்டு, அகர வரிசையில் பாடம் நடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒன்று முதல் எட்டுவரை பயிலும் மாணவர்கள், எதில் வலிமையாக உள்ளனர், எதில், பலவீனமாக உள்ளனர் என்பதை பல்வேறு வடிவில் ஆராய்ந்து, புதிய பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வரை படங்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதால், அதிக பக்கங்கள் கொண்டதாக உள்ளது. 

நீட் தேர்வில், பிளஸ் 1 பாடத்திலிருந்து, 50 சதவீதம் கேள்வி கேட்கப்படுகிறது. அதில், 99 சதவீத கேள்விகள், நமது புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது.
அதனால், சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டனர். பிளஸ் 1 பாட புத்தகத்தில், முன்னுரைக்கு பின், அனைத்து பாட பிரிவினருக்கும், மேல்படிப்பு பற்றி என்ன, எங்கு படிக்கலாம் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 



புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தொழில்நுட்பம் பதிந்துள்ளது. 2.825 க்யூ.ஆர்.கோடு நமது புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. பி.பி.சி., வீடியோ காட்சிகள் இணைப்பு செய்யப்பட்டுள்ளது.

சராசரியாக ஒரு நாளைக்கு, க்யூ,ஆர்.கோடு மூலம், இரண்டு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்களோடு கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், தமிழக மாணவர்கள் அகில இந்திய போட்டி தேர்வில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர். மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது ஆசிரியர்கள் கையில் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி இணை இயக்குனர் பொன்.குமார், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்



கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்