Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 3, 2018

பி.இ.: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 6 -இல் தொடக்கம்

பி.இ. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வை ஜூலை 6 -ஆம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் 509 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 1,76,865 பி.இ. இடங்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இதற்கு விண்ணப்பித்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களில் தகுதிபெற்ற 1,04,453 பேருக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28 -ஆம் தேதி வெளியிடப்பட்டது.



இந்த முறை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன் -லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் அவரவர் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம். வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 கலந்தாய்வு உதவி மையங்களில், கட்டணம் ஏதுமின்றி கலந்தாய்வில் பங்கேற்கலாம். எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூலை 10 -ஆம் தேதி நிறைவடைந்த பின்னர், பி.இ. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சிறப்புப் பிரிவு கலந்தாய்வு: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வை முன்கூட்டியே ஜூலை 6 -ஆம் தேதி தொடங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு ஆன்-லைன் முறையில் அல்லாமல், ஏற்கெனவே உள்ள நடைமுறையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டுமே நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது: சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 6 -ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடத்தப்பட உள்ளது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். இவர்களுக்கென 6,000-த்துக்கும் அதிமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் 200 -க்கும் குறைவானவர்களே விண்ணப்பித்துள்ளனர். எனவே, விண்ணப்பித்த அனைவரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் நாளான ஜூலை 7 -ஆம் தேதி, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கென 150 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில் பங்கேற்க 300 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 8 -ஆம் தேதியன்று, விளையாட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும். இவர்களுக்கு 500 இடங்கள் ஒதுக்கப்படும். இதில் பங்கேற்க 750 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.



கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து எடுத்து வருவதுடன், கட்டணத்துக்கான வரைவோலையையும் எடுத்து வரவேண்டும் என்றார் அவர்.

Popular Feed

Recent Story

Featured News