Sunday, July 8, 2018

வேளாண்மைப் பல்கலை. சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 67 இடங்கள் நிரம்பின

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை (ஜூலை 7) நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 67 இடங்கள் நிரம்பின. இதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு 48,676 மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.



அவர்களில் 32,621 பேர் உரிய கட்டணம் செலுத்தி, போதிய விவரங்களை சமர்ப்பித்திருந்தனர். இதையடுத்து தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ஆம் தேதி வெளியிடப்பட்டது. முன்னதாக விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகிய சிறப்பு ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜூன் 18 முதல் 20-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.

இந்நிலையில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது. இவர்களுக்கு மொத்தம் 78 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கலந்தாய்வுக்கு 106 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 81 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 67 பேர் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்தனர். மாற்றுத் திறனாளிகளுக்கான 11 இடங்கள் மட்டும் காலியாக உள்ளன.
பொதுப் பிரிவினருக்கு நாளை கலந்தாய்வு: இதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 9-ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு கலந்தாய்வு ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என்றும் எனவே மாணவர்கள் யாரும் பல்கலைக்கழகத்துக்கு நேரில் வரத் தேவையில்லை என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.




கலந்தாய்வு நடைமுறை எப்படி இருக்கும் என்பது குறித்து வேளாண் கல்லூரி புல முதன்மையர் மகிமை ராஜா கூறியது: 

மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தரவரிசை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று நாள்களிலும் யார் யாரெல்லாம் ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு செல்லிடப்பேசி குறுந்தகவல் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவித்துள்ளோம்.

மேலும் மாணவர்கள் ஆன்லைன் கலந்தாய்வை எப்படி அணுக வேண்டும் என்று சுமார் ஒன்றரை பக்க விளக்கக் குறிப்பையும் மின்னஞ்சலில் அனுப்பியுள்ளோம். மாணவர்கள் கலந்தாய்வுக்கான இணையப் பக்கத்துக்குச் சென்று தங்களது பயனீட்டாளர் முகவரி, கடவுச் சொல்லை பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதில் தோன்றும் பக்கத்துக்குச் சென்று கலந்தாய்வில் பங்கேற்பதற்கான ரூ.2 ஆயிரம் கட்டணத்தை (எஸ்.சி., எஸ்.டி.யினர் என்றால் ரூ.1000) செலுத்த வேண்டும்.

இதைத் தொடர்ந்து எந்தெந்த கல்லூரியில் எந்தெந்த இடங்கள் காலியாக உள்ளன என்ற விவரங்களைப் பார்த்து, தங்களுக்குத் தேவையான கல்லூரி, பாடங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம். இந்தக் கலந்தாய்வில் நிரம்பிய இடங்கள் குறித்த விவரம் வரும் 12-ஆம் தேதி வெளியிடப்படும்.

இடங்களைத் தேர்வு செய்தவர்கள் அதற்கான கட்டணத்தைச் செலுத்தியதும் அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டு கிடைக்கும். இந்த ஒப்புகைச் சீட்டுடன், தங்களிடம் உள்ள அனைத்துச் சான்றிதழ்களையும் எடுத்துக் கொண்டு பல்கலைக்கழகத்தில் ஜூலை 19 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் வர வேண்டும்.

ஆன்லைன் கலந்தாய்வின்போது ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் 0422 - 6611345, 6611346 என்ற எண்களையோ, மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு, தனியார் வேளாண் கல்லூரிகளையோ, ஆராய்ச்சி மையங்களையோ அணுகி விளக்கம் பெறலாம் என்று மகிமை ராஜா தெரிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News